இஸ்பிரீத்து சாந்துவானவரின் பன்னிரண்டு கனிகளைப் பெற ஜெபம்

ஓ இஸ்பிரீத்து சாந்துவே, பிதாவுடையவும் சுதனுடையவும் நித்திய நேசமே, தெய்வீக அன்பினால் அடியேன் தேவரீரோடு ஒன்றித்திருக்கத் தக்கதாக, தேவ சிநேகத்தின் கனியையும், ஒரு பரிசுத்த ஆறுதலால் நான் நிரப்பப்படத் தக்கதாக, சந்தோஷத்தின் கனியையும், அந்தரங்கமான ஆத்தும சமாதானத்தை நான் சுகிக்கத் தக்கதாக சமாதானத்தின் கனியையும், என் சுய ஆசைகளுக்கு விரோதமான எல்லாவற்றையும் தாழ்ச்சியோடு சகிக்கத் தக்கதாக பொறுமையின் கனியையும், என் அயலானின் தேவைகளிலிருந்து மனமுவந்து நான் அவனை விடுவிக்கும் படியாக, தயையின் கனியையும், சகலருக்கும் உபகாரியாக நான் இருக்கத்தக்கதாக, நன்மைத்தனத்தின் கனியையும், தாமதத்தினால் அதைரியப் படாமல் ஜெபத்தில் நிலைத்திருக்கும் படியாக சகிப்பின் கனியையும், தீய இச்சைகள் ஒவ்வொரு முறை எழும் போதும் அவற்றை வெல்லவும், ஒவ்வொரு முணுமுணுப்பையும் அடக்கவும், என் பிறனோடு நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்திலும் என் சுபாவமான சுய உணர்ச்சிகளை அடக்கியாளவும் தக்கதாக சாந்தத்தின் கனியையும், உறுதியான நம்பிக்கையோடு சர்வேசுரனுடைய வார்த்தையை நான் சார்ந்திருக்கத் தக்கதாக பிரமாணிக்கத்தின் கனியையும், என் புறத் தோற்றத்தை எப்போதும் நான் கண்ணியத்தோடு ஒழுங்கு படுத்தும்படியாக அடக்க ஒடுக்கத்தின் கனியையும், என் சரீரம் உமது தேவாலயமாக இருக்குமளவுக்கு அதை நான் பரிசுத்தமாய்க் காத்துக் கொள்ளத் தக்கதாக இச்சையடக்கம், நிறைகற்பு ஆகியவற்றின் கனிகளையும் எனக்குத் தந்தருள வேண்டுமென்று உம்மை இரந்து மன்றாடிப் பிரார்த்திக்கிறேன். இதனால், உமது அனுக்கிரகத்தைக் கொண்டு இப்பூலோகத்தில் என் இருதயத்தை அடியேன் பரிசுத்தமாய்ப் காத்துக் கொண்டு, அதன் பலனாக, சுவிசேஷ வார்த்தைகளின் படி, சேசுக் கிறீஸ்து நாதரில், சர்வேசுரனை அவரது பரிசுத்த இராச்சியத்தின் மகிமையில் நித்தியத்திற்கும் கண்டு மகிழ்ந்திருக்க நான் தகுதி பெறுவேனாக. ஆமென்.