உத்தரிக்கிற ஆன்மாக்களின் உள்ளத்தை நொறுக்கும் வேதனை!

"என்மீது இரக்கமாயிருங்கள், நண்பர்களே, நீங்களாவது என்மீது இரக்கமாயிருங்கள், ஏனெனில் ஆண்டவரின் கரம் என் மேல் வலிமையாக உள்ளது."

இதுதான் உத்தரிக்கிற ஆன்மாக்கள் பூவுலகில் வாழும் தங்களது சகோதரர்களிடம் உதவியை வேண்டி மன்றாடும் உள்ளத்தை நொறுக்கும் செபமாக உள்ளது. அந்தோ! பலரும் இச்செபத்திற்கு செவிமடுப்பதில்லை .

சில பக்தியான கத்தோலிக்கர்களே, இரக்கமின்றி உத்தரிக்கிற ஆன்மாக்களை புறக்கணிப்பது புதிராக உள்ளது. இது, இவர்கள் உத்தரிக்கிற ஸ்தலம் இருப்பது பற்றி ஏறக்குறைய நம்பிக்கையின்றி இருப்பதையும் முழுமையாக இக்கருத்தில் தெளிவில்லாமல் இருப்பதையுமே காட்டுகிறது.

உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இவர்கள் பலி பூசை ஒப்புக்கொடுக்காமல், நாட்கள், வாரங்கள், ஏன் பல மாதங்கள் கூட கடந்து போகின்றது.

அரிதாக உத்தரிப்பு ஆத்மாக்களுக்காக திருப்பலியில் பங்கேற்கிறார்கள்; அரிதாக இவர்களுக்காக செபிக்கின்றனர்; அரிதாகத்தான் நினைக்கின்றனர்.

பரிதாபமான உத்தரிப்பு நிலையில் ஆன்மாக்கள் சொல்லொண்ணா துயரங்களில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது இவர்கள் இங்கு பூரண நலத்துடன் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.

இக்கடின மனப்பான்மை நிலைக்கு எது காரணம்? அறியாமை, மதியீனம் மற்றும் அசட்டைத்தனம்தான்.

உத்தரிக்கிற ஸ்தலம் பற்றி மக்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை.

அங்கு கொடிய அக்கினியில் ஆன்மாக்கள் படும் அகோர வேதனை குறித்தும், அவ்வேதனை பல ஆண்டுகளாக நீடிக்கின்றது என்பதைக் குறித்தும் அறியாமல் இருக்கின்றனர்.

இதன் பலனாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதில் சிறிதளவே அக்கறை எடுக்கின்றனர் அல்லது முற்றிலுமாகவே அக்கறை காட்டத் தவறிவிடுகின்றனர்.

மிகவும் வேதனையான செயல் என்னவென்றால் ஏற்கனவே உத்தரிக்கிற ஸ்தலத்தில் இவர்களுடைய உதவியை மட்டுமே நம்பி இருக்கின்ற ஆன்மாக்களை முற்றிலுமாக புறக்கணித்து விடுவதுதான்.

அன்பார்ந்த வாசகர்களே, இச்சிறிய புத்தகத்தை கவனமாக ஆழ்ந்து படியுங்கள். நீங்கள் இந்தப் புத்தகம் உங்கள் கைக்கு வந்து சேர்ந்த நாளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவீர்கள் என்பதில் ஐயமில்லை.

உத்தரிக்கிற ஸ்தலம் என்றால் என்ன? உத்தரிப்பு ஸ்தலம் என்பது மரணத்திற்குப் பின் ஏறக்குறைய அனைத்து ஆன்மாக்களுமே, பாவத்தின் நிமித்தம், வேதனை அனுபவிக்கும் பொருட்டு தள்ளப்படுகின்ற ஓர் அக்னிச் சிறையாகும்.

இதோ, உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றி இத்திருச்சபையின் வேத பண்டிதர்கள் கூறும் சில உண்மைகள்:

"வேதனையின் கொடுமை எவ்வளவு என்றால் ஒரு நிமிடம் இந்த பயங்கரமான நெருப்பில் இருப்பது நூறாண்டு காலம் இருப்பது போல் இருக்கும்."

இறையியல் வல்லுநர்களின் இளவரசராக கருதப்படும் புனித தாமஸ் அக்வீனாஸ், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள நெருப்பின் அனல், நரக நெருப்பின் அளவை ஒத்தே உள்ளது என்றும், இலேசாகப்பட்டால் கூட அது உலகத்தில் அனுபவிக்கக் கூடிய அனைத்து வேதனைகளையும் விட கொடியதாக உள்ளது என்றும் கூறுகிறார்.

வேதபாரகர்களில் முதன்மையானவரான புனித அகுஸ்தீன், மரித்த ஆன்மாக்கள், மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்குத் தகுதியாக்க, தமது பாவங்களை சுத்திகரிக்கும் பொருட்டு, உலகத்தில் நாம் அனுபவித்த, பார்த்த, கேள்விப்பட்ட அனைத்து வகையான அக்னிகளைவிட அதிக வேதனை தரக்கூடிய, அதிக அளவு ஊடுருவக்கூடிய அக்னியாக உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பு இருக்கும் எனக் கற்பிக்கிறார்.

மேலும், இந்த நெருப்பு நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்கவே செயல்பட்டாலும், இந்த உலகத்தில் நாம் அதிகபட்சமாக சகித்துக் கொள்ளக்கூடிய வாதைகள் அனைத்தையும் விட அதிகமாக வேதனை தரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

அலெக்சான்டிரியா நாட்டின் புனித சிரில், "ஒரு நாள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பதைக் காட்டிலும் நீதி தீர்ப்பு நாள் வரை உலகின் அனைத்து வகையான வேதனைகளை சகித்துக் கொள்வதை தேர்ந்து கொள்ளலாம்" எனத் தயக்கமின்றி கூறுகிறார்.

மற்றுமொரு மகா புனிதர், "பூலோகத்தில் நெருப்பெல்லாம் உத்தரிக்கிற ஸ்தலத்தின் சுட்டெரிக்கும் நெருப்போடு ஒப்பிட்டால் அது குளிர்ந்த காற்றைப் போல் காணப்படும்" என்கிறார்.

பல புண்ணிய வேதபாரகர்களின் கருத்தும் இக்கொடிய அக்கினியைக் குறித்து, இதைப் போன்றே உள்ளது.