உறுதிப்பூசுதலின் சடங்கு முறை.

ஆயர் தமது வெண்ணிற மேலங்கி, தலைப்பட்டு, கழுத்துப் பட்டு மற்றும் வெண்ணிற காப்பா ஆகியவற்றை அணிந்து, தமது ஆயருக்குரிய தலை அணியை தாங்கியவராக, பீடத்தின் மத்திக்கு முன்பாகவோ, அல்லது அவருக்கு வசதியான வேறோர் இடத்திலோ போடப் பட்டிருக்கிற ஆசனத்தை நோக்கி வந்து, பீடம் தமது முதுகுப்புறம் இருக்க, தமது செங்கோலை இடக்கரத்தில் பிடித்தபடி, அந்த ஆசனத்தின் மீது அமர்கிறார். அமர்ந்த படியே தமது கரங்களைக் கழுவுகிறார். அதன் பின் தமது தலையணியை அருகில் வைத்து விட்டு, எழுந்து, உறுதிப் பூசுதல் பெற இருக்கிறவர்களை நோக்கி நிற்கிறார். தமது கரங்களைத் தமது நெஞ்சின் மீது கூப்பியிருக்கிறார். (உறுதிப் பூசுதல் பெற இருக்கிறவர்கள் முழந்தாளிட்டுத் தாங்களும் தங்கள் கரங்களைத் தங்கள் நெஞ்சின் மீது குவித்திருக்கவேண்டும்.)

ஆயர் : இஸ்பிரீத்து சாந்துவானவர் உங்கள் மீது இறங்கி வருவாராக. உன்னதமானவருடைய வல்லமை பாவத்திலிருந்து உங்களைக் காப்பதாக.

எல்: ஆமென்.


இதன் பின், தம் நெற்றி முதல் நெஞ்சு வரை சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு அவர் சொல்வதாவது:

ஆயர்: ஆண்டவருடைய நாமத்திலேதான் நமக்கு உதவியுண்டு.

எல்: அவரே பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தவர்.

ஆயர்: ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்: என் அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.

ஆயர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல்: உமது ஆவியோடும் இருப்பாராக.


இதன் பின் ஆயர் தமது கரங்களை உறுதிப் பூசுதல் பெற இருக்கிறவர்களை நோக்கி நீட்டியபடி கூறுவதாவது:

ஜெபிப்போமாக

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா, தேவரீர் இந்த உமது ஊழியர்களுக்கு நீராலும் இஸ்பிரீத்து சாந்துவினாலும் புதுப்பிறப்பு அளிக்கத் தயை செய்து அவர்களுடைய சகல பாவங்களையும் மன்னித்திருக்கிறீர். அவர்கள் மீது பரிசுத்த தேற்றரவாளராகிய உமது ஸ்பிரீத்துவானவரை அவரது ஏழு கொடைகளுடன் அனுப்புவீராக.

எல்: ஆமென்.

ஆயர்: ஞானத்தினுடையவும் புத்தியினுடையவும் ஸ்பிரீத்துவை அனுப்பும்.

எல்: ஆமென்.

ஆயர்: விமரிசையினுடையவும், திடத்தினுடையவும் ஸ்பிரீத்துவை அனுப்பும்.

எல்: ஆமென்.

ஆயர்: அறிவினுடையவும், பக்தியினுடையவும் ஸ்பிரீத்துவை அனுப்பும்.

எல்: ஆமென்.

ஆயர்: உமது பயத்தின் ஸ்பிரீத்துவைக் கொண்டு அவர்களை நிரப்பும். உமது இரக்கத்தில், நித்திய ஜீவியத்திற்கென அவர்கள் மீது கிறீஸ்துநாதரின் சிலுவை அடையாளத்தை வரைந்தருளும். சர்வேசுரனாகிய அதே இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் தேவரீரோடு நித்திய காலமும் ஜீவிக்கிறவரும், இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற உமது திருச்சுதனும், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற அதே சேசுக் கிறீஸ்து நாதரின் வழியாக.

எல்: ஆமென்.


ஆயர் தமது தலையணியை அணிந்து, தமது ஆசனத்தில் அமர்ந்த படியோ, அல்லது, உறுதிப்பூசுதல் பெறுவோரின் எண்ணிக்கையைப் பொறுத்து நின்று கொண்டோ, உறுதிப்பூசுதல் பெறும்படி ஒழுங்கான வரிசையில் முழந்தாளிட்டிருக்கிறவர்களுக்கு உறுதிப் பூசுதல் வழங்குகிறார். முழந்தாளிட்ட நிலையில் தம்மிடம் ஞானத் தாய் அல்லது ஞானத் தகப்பனால் சமர்ப்பிக்கப் படுகிற ஒவ்வொருவரின் பெயரையும் விசாரிக்கிறார். தமது வலக்கரத்தின் பெருவிரல் நுனியை க்றிஸ்மா தைலத்தில் முக்கியெடுத்து கூறுவதாவது:

சிலுவை அடையாளத்தை உன்மீது வரைகிறேன்.

இந்த வார்த்தைகளைச் சொல்லியபடி, தமது பெருவிரலால் உறுதிப்பூசுதல் பெறுபவரின் நெற்றியில் சிலுவை அடையாளம் வரைகிறார். பிறகு அவர் கூறுவதாவது:

இரட்சணியத்தின் க்றீஸ்மா தைலத்தால் நான் உன்னை உறுதிப் படுத்துகிறேன். பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவின் பெயரால்.

பதில்: ஆமென்.


இதன்பின் கன்னத்தில் மெதுவாகத் தட்டியபடி கூறுவதாவது:

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

அனைவருக்கும் உறுதிப்பூசுதல் வழங்கப் பட்ட பிறகு, ஆயர் தமது கரங்களை ரொட்டித் துணிக்கைகளைக் கொண்டு சுத்தப் படுத்திய பின், ஒரு பாத்திரத்தின் மீது அவற்றைக் கழுவுகிறார். அதே வேளையில் பின்வரும் ஆரம்ப வாக்கியம் குருநிலையினரால் பாடப் படுகிறது, அல்லது வாசிக்கப் படுகிறது:

ஓ சர்வேசுரா, யெருசலேமில் உள்ள உமது பரிசுத்த தேவாலயத்திலிருந்து, தேவரீர் எங்களில் அலங்கரித்திருக்கிறவற்றை உறுதிப் படுத்தியருளும்.

எல்: பிதாவுக்கும், சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் . . . .


இதன்பின் ஓ சர்வேசுரா, யெருசலேமில் . . . என்ற ஆரம்ப வாக்கியம் திரும்பவும் பாடப் படுகின்றது. அதன் பின் ஆயர் தமது தலையணியைக் கழற்றி விட்டு, எழுந்து பீடத்தை நோக்கி நிற்கிறார். கரங்களை நெஞ்சில் கூப்பியபடி அவர் கூறுவதாவது:

ஆயர்: ஆண்டவரே உமது இரக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும்.

எல்: உமது இரட்சணியத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.

ஆயர்: ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.


இதன் பின், தொடர்ந்து தமது கரங்களைக் குவித்தபடி பின்வரும் ஜெபத்தைச் சொல்லுகிறார். உறுதிப்பூசுதல் பெற்ற அனைவரும் பக்தியோடு முழந்தாளிட்டிருக்கிறார்கள்:

ஓ சர்வேசுரா, உமது அப்போஸ்தலர்களுக்கு இஸ்பிரீத்து சாந்துவைத் தந்து அவர்களாலும், அவர்களது ஸ்தானாதிபதிகளாலும் அவர் விசுவாசிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று நியமித்தருளினீரே. எங்கள் தகுதியற்ற ஊழியத்தைத் தயையோடு கண்ணோக்கியருளும். இப்போது பரிசுத்த க்றீஸ்மாவினால் நாம் நெற்றியில் பூசி, சிலுவை அடையாளம் வரையப் பட்டவர்களுடைய இருதயங்கள், அவர்கள் மீது இறங்கி வந்து, தயவோடு அவர்களுக்குள் தங்கியிருக்கிற அதே இஸ்பிரீத்து சாந்துவினால், அவருடைய மகிமையின் தேவாலயமாக ஆகக் கடவன. அவரே சர்வேசுரனாக, பிதாவோடும், அதே இஸ்பிரீத்து சாந்துவோடும் ஜிவிக்கிறவரும், ஆட்சி புரிகிறவருமாய் இருக்கிறவர்.

எல்: ஆமென்.


பிறகு ஆயர் கூறுவதாவது:

இதோ, ஆண்டவருக்குப் பயப்படுகிற ஒவ்வொரு மனிதனும் இவ்வாறே ஆசீர்வதிக்கப் படுவான்.

பிறகு, உறுதிப் பூசுதல் பெற்றவர்களை நோக்கித் திரும்பி அவர்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார்:

நீங்கள் உங்கள் வாழ்நாளெல்லாம் யெருசலேமின் நற்காரியங்களைக் கண்டு, நித்திய ஜீவியத்தை அடையும் படியாக, ஆண்டவர் யெருசலேமிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

எல்: ஆமென்.