மிகப் பரிசுத்த கன்னி மாமரியின் மந்திரமாலை - முன்னுரை

மிகப் பரிசுத்த கன்னிமாமரியின் சிறிய கட்டளை ஜெபம் என்று அழைக்கப்படுகிற இந்த மந்திர மாலை ஜெபம், ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது.  இது கன்னிமாமரியின் கட்டளை ஜெபத்தின் ஒரு சுருக்கமான வடிவமாகும். சனிக்கிழமைகளில் மாமரிக்குரிய ஜெபப் பூசைகளின் முடிவில் ஜெபிக்கப் படுவதற்காக, சார்ல்மேன் அரசரின் அரசவையில் வழிபாட்டு வல்லுநராக இருந்த அல்சியன் என்பவரால் முதன்முதலாக இது தொகுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.  சில ஆண்டுகளுக்குப் பிறகு அர்ச். தமியான் இராயப்பர் (1072) இந்தச் செப வடிவத்தைத் திருத்தியமைத்து, துறவறத்தார் பயன்படுத்தும் படியாக இதைப் பரிந்துரைத்தார்.  அவரது இந்தத் திருத்தப்பட்ட மந்திர மாலை சிஸ்டெர்ஸியன் மற்றும், கமல்துலென்சிய சபையாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  பின்னர் மேற்றிராசன குருக்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அதன் பின் வெவ்வேறு துறவற சபையினர் இந்த மந்திர மாலையை பல்வேறு  வடிவங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.  ஆனால் திரிதெந்தின்  திவ்ய பலி பூசையைத் திருச்சபைக்குத் தொகுத்தளித்த பரிசுத்த பாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதரே இந்த மந்திரமாலையையும் முறைப்படுத்தித்  திருச்சபைக்கு வழங்கினார்.  அதன் பின் அநேக பொது விசுவாசிகளாலும் இது பயன்படுத்தப் பட்டது.  மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட மந்திர மாலைப் புத்தகங்களை வைத்திருப்பது அக்காலப் பிரபுக்களிடையே ஒரு பெருமைக்குரிய காரியமாகக் கருதப்பட்டது.  பல்வேறு கன்னியர் சபைகளின் மூன்றாம் சபைகளிலும் இந்த மந்திரமாலை ஜெபிப்பது  கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

தேவ வரப்பிரசாதத்தை ஏராளமாகப் பெற்றுத் தருகிற இந்த அற்புதமான மந்திரமாலையை, அர்ச். சாமிநாதரின் மூன்றாம் தவச்சபை உறுப்பினர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து, அச்சிட்டு வெளியிடுவதில்  நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  அர்ச். சாமிநாதரின் மூன்றாம் தவச் சபை உறுப்பினர்கள் இந்த மந்திர மாலை ஜெபங்களை, அவற்றிற்குக் குறிக்கப் பட்ட மணித்தியாலங்களில் தவறாமல் நாள்தோறும் ஜெபிக்கும்படி அவர்களை நான் வற்புறுத்த விரும்புகிறேன்.  இதன் மூலம் அவர்கள் தங்கள் நேசமாதாவிடமிருந்து திரளான தேவவரப்பிரசாதங்களை அபரிமிதமாகப் பெற்றுக் கொள்வார்கள்.  அதே வேளையில், மற்ற விசுவாசிகளும் இந்த அற்புத ஜெபமுறையைப் பயன்படுத்தித் தங்கள் மாதாவை மகிமைப் படுத்தவும், அதன் மூலம் எண்ணிறந்த ஆத்தும, சரீர நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும் முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

1887, நவம்பர் 17 அன்று, பாப்பரசர் பதின்மூன்றாம் சிங்கராயர் மந்திரமாலையை முழுவதுமாக ஜெபிப்பவர்களுக்கு ஏழு வருடம், ஏழு மண்டலப் பலனும், மாதம் ஒரு முறை, ஒரு பரிபூரணப் பலனும் வழங்கியுள்ளார்.  அத்தோடு, யாமப் புகழ், காலைச் செபம், ஆகியவற்றை மட்டும் ஜெபிப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு 300 நாள் பலனும், மாலை ஆராதனை, சயன ஆராதனை ஆகியவற்றை மட்டும் ஜெபிப்பவர்களுக்கும், மற்றும் ஒவ்வொரு மணித்தியால ஜெபத்திற்கும் ஐம்பது நாள் பலனும்  (1897 டிசம்பர் 8 அன்று) வழங்கியுள்ளார்.

மந்திர மாலை தவிர, இந்த ஜெபப் புத்தகத்தில், பாவசங்கீர்த்தன ஆயத்தம், ஆத்தும சோதனை மற்றும் ஜெபங்கள், திவ்யபலி பூசை ஜெபங்கள், பூசை ஆயத்த சிந்தனைகள், ஆயத்த ஜெபங்கள், திவ்ய நற்கருணை உட்கொள்ளுமுன் ஜெபங்கள், திவ்ய நற்கருணை உட்கொண்ட பின் ஜெபங்கள், ஜெபமாலை சொல்லும் முறை, ஜெபமாலைத் தியானங்கள், சிலுவைப்பாதை, திவ்யபலிபூசை தொடர்பான பாடல்கள், தேவமாதா பாடல்கள் போன்ற மிகப் பயனுள்ள பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.  இந்த நூல், கத்தோலிக்க விசுவாசிகளுக்குத் தங்கள் அன்றாட ஜெபக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

சுவாமி சங். சேவியர் இக்னேசியுஸ், 
ஆன்ம இயக்குநர்,
அர்ச். சாமிநாதர் மூன்றாம் தவச்சபை.     
தூத்துக்குடி (இந்தியா.)