உறுதிப்பூசுதல் - ஜெபங்கள்

சிலுவை அடையாளம்

பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவின் நாமத்தினாலே. ஆமென்.


பரலோக மந்திரம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல பூலோகத்திலும் செய்யப் படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழ விடாதேயும். தின்மையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.


அருள் நிறை மந்திரம்

அருள் நிறைந்த மரியாயே வாழ்க. கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.


அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம்

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுக்கிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னி மரியம்மாளிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப் பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தோரையும் நடுத்தீர்க்க வருவார். இஸ்பிரீத்து சாந்துவை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சிஷ்டவர்களுடைய சமூதிதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தையும் விசுவசிக்கிறேன். ஆமென்.


பாவசங்கீர்த்தன மந்திரம்

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரனுடனேயும், எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறுபெற்ற மரியாயுடனேயும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலுடனேயும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பருடனேயும், அப்போஸ்தலர்களாயிருக்கிற அர்ச். இராயப்பருடனேயும், சின்னப்பருடனேயும், சகல அர்ச்சிஷ்டவர்களுடனேயும், எனக்குக் குருவாயிருக்கிற உம்முடனேயும் பாவசங்கீர்த்தனம் செய்கிறேன். அதேனென்றால் என் சிந்தனையினாலும் வாக்கினாலும் கிரியைகளினாலும் மகா பாவங்களைச் செய்தேனே. என் பாவமே என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்பொழுதும் கன்னிகையாயிருக்கிற முத்திப்பேறு பெற்ற மரியாயையும், பிரதான சம்மனசாயிருக்கிற முத்தனான மிக்கேலையும், ஸ்நாபகனாயிருக்கிற முத்தனான அருளப்பரையும், அப்போஸ்தலர்களாயிருக்கிற அர்ச். இராயப்பரையும் சின்னப்பரையும் சகல அர்ச்சிஷ்டவர்களையும் எனக்குக் குருவாயிருக்கிற உம்மையும் நம்முடைய ஆண்டவராகிய சர்வேசுரனிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரன் என் மீது இரக்கம் கொண்டு, என் பாவங்களை மன்னித்து, என்னை நித்திய சீவியத்திற்கு அழைத்துச் செல்வாராக. ஆமென்.

சர்வ வல்லபரும் தயாபரருமான சர்வேசுரன் என் பாவங்களுக்கு மன்னிப்பையும் பொறுத்தலையும் விமோசனத்தையும் எனக்கு அளிப்பாராக. ஆமென்.


விசுவாசப் பிரகரணம்

ஓ என் சர்வேசுரா, தேவரீர் பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்து என்னும் மூன்று ஆட்களாயிருந்தாலும், ஏக சர்வேசுரனாயிருக்கிறீர் என்று உறுதியாக விசுவசிக்கிறேன். உம்முடைய திருச்சுதன் மனுவுருவாகி எங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்றும், சீவியரையும் மரித்தோரையும் நடுத்தீர்க்க வருவார் என்றும் விசுவசிக்கிறேன். வஞ்சிக்கவும், வஞ்சிக்கப்படவும் இயலாதவராகிய தேவரீர் தாமே இவற்றை வெளிப்படுத்தியிருக்கிறீர் என்பதால் இவற்றையும், பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற எல்லா சத்தியங்களையும் நானும் விசுவசிக்கிறேன். 


நம்பிக்கைப் பிரகரணம்

ஓ என் சர்வேசுரா, அடியேன் தேவரீருடைய எல்லையற்ற நன்மைத்தனத்திலும், வாக்குத் தத்தங்களிலும் நம்பிக்கை கொண்டு, என் ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுக் கிறீஸ்து நாதருடைய பேறுபலன்களின் வழியாக என் பாவங்களுக்கு மன்னிப்பையும், உமது வரப்பிரசாதத்தின் உதவியையும், நித்திய சீவியத்தையும் பெற்றுக் கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன்.


தேவசிநேகப் பிரகரணம்

ஓ என் சர்வேசுரா, தேவரீர் சகல நன்மைகளும் நிறைந்தவராய் இருக்கிறபடியினாலும், என் முழு நேசத்திற்கும் பூரண தகுதியுள்ளவராய் இருக்கிற படியினாலும் தேவரீரை என் முழு இருதயத்தோடும் ஆத்துமத்தோடும் சகலத்திற்கும் மேலாக நேசிக்கிறேன். உம் நேசத்திற்காக என்னை நான் நேசிப்பது போல என் அயலாரையும் நேசிக்கிறேன். எனக்குத் தீமை செய்பவர்கள் எல்லோரையும் நான் மன்னிப்பது மட்டுமல்லாமல், நான் யார் யாருக்கு எதிராகத் தீமை செய்தேனோ அவர்கள் சகலரிடமும் பொறுத்தலைக் கேட்கிறேன்.


மனஸ்தாபப் பிரகரணம்

ஓ என் சர்வேசுரா, அடியேன் தேவரீரை நோகச் செய்ததற்காக மெத்த மனஸ்தாபப் படுகிறேன். என் சகல பாவங்களையும் நான் அருவருக்கிறேன். ஏனென்றால் அந்தப் பாவங்களால் பரலோகத்தை இழந்து நித்திய நரக வேதனைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று அஞ்சுகிறேன். ஆயினும் எல்லாவற்றிற்கும் மேலாக சகல நன்மைச் சுருபியானவரும், என் நேசம் முழுவதற்கும் முற்றும் உரியவருமாகிய என் சர்வேசுரனாகிய தேவரீரை என் பாவங்கள் நோகச் செய்கின்றன என்பதற்காக அவற்றை நான் அருவருத்துத் தள்ளுகிறேன். தேவரீருடைய வரப்பிரசாதத்தின் உதவியைக் கொண்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, என் பாவங்களைப் பரிகரித்து, என் சீவியத்தைத் திருத்துவேனென்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். ஆமென்.