இரத்தத்தில் தோய்ந்த ஒரு பணி

ஜோசபா! ஒரு ஆத்துமமானது என்னுடன் விடாது ஒன்றித்து வாழ்க்கையில், நான் மிக மகிமைப்படுத்தப்படுகிறேன். அந்த ஆத்துமம் மற்றவர்களுக்கு மிகுந்த நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது. இவ்விதம் தன்னிலே ஒரு சிறிய பணி என் இரத்தத்தில் தோய்க்கப்படுமானால் அல்லது நான் பூமியில் இருக்கையில் உழைத்த உழைப்புகளுடன் ஒன்றிக்கப்படுமானால், ஆத்துமங்களை இரட்சிப்பதில் அந்த பணி அதிக வல்லமையுள்ளதாகின்றது.

ஒருவேளை, அந்த ஆத்துமம் உலகெங்கும் போய் நற்செய்தி போதித்திருந்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மையைவிட அதிக நன்மை விளைகிறது. அந்த பணி - பாடம் படிக்கிறது, பேசுகிறது, எழுதுகிறது. பிறர் மனதில் தைக்கிறது, இடத்தை சுத்தம் செய்கிறது, இளைப்பாறுகிறது - இது போல் மிகச் சாதாரணமான காரியமாயிருந்தாலும் பரவாயில்லை. பெரியோருக்குக் கீழ்ப்படிந்து அல்லது தன் கடமைகளில் ஒன்றாய் அந்த ஆத்துமம் அதைச் செய்ய வேண்டும். பெருமைக்காக செய்யக்கூடாது. என்னுடன் ஒன்றித்து நெருக்கமாக என் இரத்தத்தில் தோய்க்கப்பட்டு தூய்மையான கருத்துடன் அது செய்யப்பட வேண்டும்.

எந்த செயலாவது தன்னிலே முக்கியமானதல்ல என்பதை ஆத்துமங்கள் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடன் ஒன்றிக்கவும் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படவும் வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நான் எனது வெளிப்படையான வாழ்வில் மக்களுக்குப் போதிக்கையில் கடவுளுக்கு உண்டாக்கிய மகிமையை, என்னை வளர்த்த தந்தையுடைய தச்சுப்பட்டறையில் நான் சிறுவயதில் அவருக்கு உதவி செய்து அதைச் சுத்தம் செய்கையிலும் உண்டாக்கினேன்.

உலகத்தாரின் முன் முக்கியமான பதவிகளில் இருந்து என் இருதயத்துக்கு உண்மையாகவே பெரும் மகிமை கொடுக்கிற பலர் இருக்கின்றனர். ஆனால், என் திராட்சைத் தோட்டத்தில் வெகு தாழ்மையான வேலையாட்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் தூய்மையான அன்புடன் உழைத்து, தங்கள் சாதாரண செயல்களையும் என் விலையேறப்பெற்ற இரத்தத்தில் தோய்த்து அவற்றை விண்ணக செல்வங்களாக்கும் வழியை அறிந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்கள் பணிகளை எனக்கு ஒப்புக் கொடுத்து அவற்றின் பலனை ஆத்துமங்களுக்குக் கொடுக்கும்படி கேட்கையில், தங்கள் பணிகள் ஒவ்வொன்றை - யும் அவர்கள் நேசத்துடன் செய்கையில், ஒரே நாளில் அவர்கள் எவ்வளவோ விண்ணகப் பேரின்ப பாக்கியத்தை ஈட்டுகின்றனர்.

இத்தகைய ஆத்துமங்களுக்கு என்னுடைய என்றும் குறையாத அன்பைக் காண்பிப்பேன். அவர்கள் அன்பால் நடத்தப்படும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என அவர்களிடம் தெரிவி. என்னுடையவர்களுக்காகவும், என் மகிமைக்காகவும் அவர்கள் ஊக்கத்துடன் உழைக்க வேண்டும் என நான் எவ்வளவு ஆசிக்கிறேன் என்றும் சொல். சிலர் இதனை நன்கு அறிகிறார்கள், மற்றவர்கள் இதை சரிவர உணர்வதில்லை.

எத்தனையோ மக்களிடையே நான் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்பதை அவர்கள் ஒருபோதும் மறவாதிருப்பார்களாக. அவர்களுடைய சிறப்பை முன்னிட்டு நான் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் அவர்களது பாக்கியமில்லாத நிலையைப் பார்த்தே.

ஜோசபா, நான் சொல்வதை எழுது: என் இருதயம் முழுவதும் அன்பு மயமாயிருக்கிறது. அது எல்லா ஆத்துமங்களையும் நேசிக்கிறது. பாவிகளையும் உலக ஆபத்துக்களால் சூழப்பட்டிருக்கும் பல ஆத்துமங்களையும் காப்பாற்ற ஆத்துமங்களையே நான் பயன்படுத்த விரும்புகிறேன் என்பதை என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்துமங்கள் உணர்ந்து கொள்ளும்படி செய்வது எப்படி? அவர்கள் தங்களின் சாதாரண பொதுவான செயல்களையும் என்னுடன் ஒன்றித்துச் செய்து புனிதர்களாக வேண்டுமென நான் எவ்வளவு ஆசையாய் இருக்கிறேன் என்பதை அவர்கள் அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன். இதை மட்டும் ஆத்துமங்கள் உணர்வார்களானால், அவர்களுடைய எல்லாப் பணிகளுமே ஞானப் பலனைப் பெறும். இவ்விதம் ஒருநாளில் செய்யப்படும் பணிகளின் பலன்களை யார் கணக்கிட முடியும்?

ஓர் ஆத்துமமானது அன்பு செய்வதையே தன் முக்கிய பணியாகக் கொண்டிருக்கும்போது, ஒன்றும் தவறாக ஆகிவிடாது. அசட்டையும் சோம்பலும் கொண்டவர்களைப் பார்ப்பது எவ்வளவோ வேதனையாய் இருக்கிறது. தளர்ச்சியோடு இருக்கும் அவர்கள் உயிர் பெறும்படி என் இருதயத்தை நாடி வருவார்களாக. என் தீராத ஆவலுடன் அவர்கள் தங்கள் தளர்ச்சியை ஒன்றித்து ஒப்புக்கொடுப்பார்களாக. அப்படியானால் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் ஒப்பற்ற மதிப்புப் பெரும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பலாம். மனித பலவீனத்தின் நிலையை என் இருதயம் அறிகிறது, அதன்மேல் அனுதாபம் கொள்கிறது.

உற்ற நண்பர்களுக்கிடையேயுள்ள மிகுந்த நெருக்கத்தைப் - போல, இந்த ஆத்துமங்கள் என்னுடன் ஒன்றித்திருக்க நான் விரும்புகிறேன். இவர்கள் ஒரு வார்த்தை முதலாய் பேசாவிட்டாலும் எப்போதும் தங்கள் அன்பர்களைப் பற்றிய நினைவாய் இருக்கிறார்கள்.

ஓர் ஆத்துமம் மகிழ்ச்சியுடன் இருக்கையில் என்னைப் பற்றி நினைப்பது எளிது. ஆனால் துன்ப துயர நேரத்தில் அது பயப்படக் கூடாது. எல்லாவற்றையும் அறியும். என் இருதயத்தைப் பார்க்கட்டும். இந்த ஒரு பார்வையானது என் ஆறுதலை அதற்கு பெற்றுத் தரும்.

ஆத்துமங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று நான் திரும்பத் திரும்ப அவர்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் என்னை அவர்கள் நன்கு அறிய வேண்டுமென நான் விரும்புகிறேன். அறிந்து நான் அவர்களிடம் ஒப்படைக்கும் ஆத்துமங்களுக்கு அவர்கள் என்னை அறிமுகப்படுத்த வேண்டும்.

எல்லோரும் எப்போதும் தங்கள் பார்வையை என்மீது வைத்திருக்க நான் வெகுவாய் விரும்புகிறேன். ஒருவராவது சோர்வுற்றவராக இருக்கக் கூடாது. ஏனெனில் நான் அவர்மேல் கொண்டிருக்கும் அன்பின் பெருக்கை தளர்ச்சியுற்றவர்கள் ஒருபோதும் கண்டு பிடிப்பதில்லை.