உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறது சத்திய விசேஷமாம்!

திருந்தாத பெரும் பாவிகளுக்கு நித்திய நரகமும் முற்றும் பரிசுத்தவான்களுக்கு முடிவில்லாத மோட்சமுமல்லாமல் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு ஓர் நடுஸ்தலமும் இருக்கிறதென்று எக்காலத்தும் எத்தேசத்தும் ஜனங்களெல்லாம் விசுவசித்து நம்பி ஒத்துக் கொண்டார்கள் என்கிறதற்குச்  சந்தேகமில்லை .

இந்த ஸ்தலத்திலே உத்தரிப்பு நிமித்தமாக நிற்கும் ஆத்துமாக்கள் மிகுந்த வேதனையை அனுபவிக்கிறதொழிய மனுஷர் அவர்களுக்காக வேண்டிச் செய்த செப தப தான தருமங்களினாலும் செலுத்தின பலிகளினாலும் இந்த வேதனைகள் அமர்ந்து குறையும் என்று அறிந்து இதெல்லாவற்றையும் மகா ஆசையோடு நிறைவேற்றிக் கொண்டு வருவார்களாமே. சேசுநாதர் சுவாமி இவ்வுலகத்தை மீட்டு இரட்சிக்க வரும் முன் இருந்த பேர் பெற்ற அசீரியரும் , பெர்சியரும் , எஜிப்தரும் , கிரேசியரும், ரோமானியரும் மரித்தவர்களைக் குறித்து அநேக சடங்குகளையும் வேண்டுதல்களையும் பலிகளையும் செலுத்திக் கொண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய சரித்திரங்களிலே துலக்கமாகக் காணப்படுகிறது .

மேலும் பூர்வீக காலத்தில் இருந்து இந்நாள் மட்டும் அஞ்ஞானிகளாய் இருக்கிற சீன தேசத்தார் மரணத்தை அடைந்த தங்களுடைய முன்னோர்களைக் குறித்து விசேச பயப்பற்றுதலோடு சில திருவிழாக்களைக் கொண்டாடி பற்பல பலி சடங்குகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்துள்ள உண்மையாகும் . இந்த இந்து இராச்சியங்களிலே முதலாய் கிறிஸ்தவரல்லாத பல மதஸ்தரான ஜனங்கள் செத்தவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து மோட்ச விளக்கென்ற சடங்கையும் , அமாவாசை ஒருசந்தியையும் இன்னும் சில ஆசாரங்களையும் நிறைவேற்றுகிறார்கள் என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியுமே .

இறந்து போனவர்களுக்காக இந்த திருநாட்களையும் பூசை பலிகளையும் செப தர்மங்களையும் நானாவித சடங்கு ஆச்சாரங்களையும் மேற்சொன்ன ஜாதி ஜனமெல்லாம் எதற்க்காக அனுசரித்து வருகிறார்கள் என்றால் "கட்டிக் கொண்ட குற்றங்களுக்கு ஆக்கினையாக வேதனைப்படும் ஆன்மாக்களுடைய குற்றங்கள் நீங்கி , இந்த ஆத்துமாக்கள் மோட்சகரை ஏற்கும் பொருட்டு இந்த முறைமைகளுக்கு இது முகாந்தரமல்லாமல் வேறெந்த முகாந்தரமும் இல்லை

மேலும் சேசுக்கிறிஸ்து நாதருக்கு முன்னமே மெய்க்கடவுளான சர்வேசுரனை அறிந்து வணங்கி வந்த யூதர்கள் மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் தங்களுடைய குற்றங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு , மோட்ச பேரின்பத்தை அடையும் பொருட்டு செப, தர்ம ,பூசை பலிகளினாலே பிரயாசைப்படுவார்கள் என்று சத்திய வேத புத்தகன்களினாலே அறிந்து கொள்ளலாம் ​அதை நிரூபிக்கும் சரித்திரமாவது :

மகா வீரசூரரான யூதாஸ் மக்கபெயருடைய நாட்களிலே சில போர்ச் சேவகர்கள் சத்திய வேதத்தை பற்றி செய்யும் போர் சண்டைகளிலே விழுந்து செத்தார்கள் . அவர்களுடைய பிரேதங்களை மகா மகிமையோடு அடக்கம் பண்ணி அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக எல்லோரும் வேண்டிக் கொண்டதுமன்றியே படைத்தலைவரான யூதாஸ் மக்கபெயர் ஜனங்களிடமிருந்து மிகுந்த பணம் சேகரித்து பன்னிரெண்டாயிரம் வெள்ளிப் பணங்களை ஜெருசலேம் நகரத்தில் இருக்கும் சர்வேசுரனுடைய கோவிலுக்கு அனுப்பி செத்தவர்களுடைய பாவங்களுக்காக பூசை நைவேத்தியம் ஒப்புக் கொடுக்கப் பண்ணினார் .

ஆகையால் செத்தவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்படும் பொருட்டு அவர்களுக்காக வேண்டிக் கொள்வது நன்மையையும் பிரயோசனமும் உள்ள காரியமென்று மக்கபெயர் இரண்டாம் ஆகமத்தில் சத்தியமாக எழுதி இருக்கிறது . இக்காலம் வரை சேசுக்கிறிஸ்து நாதரை அறிய மாட்டோமென்று யூதர்கள் சாதித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று விசுவசித்து செத்தவர்களுடைய ஆத்துமாக்களுக்காக சில சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்

அதல்லாமலும் பூர்வீக திருச்சபை முதற்கொண்டு இந்நாள் மட்டும் சகலமான கிறிஸ்தவர்கள் , மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகள் குறையும்படிக்கு செப , தப , தான தருமங்களையும் , திவ்விய பூசைகளையும் ஒப்புக் கொடுத்துக் கொண்டு வருகிறது நிச்சயமாம் . அந்தந்த காலங்களிலே பசாசினுடைய சோதனையால் அநேகர் சத்திய திருச்சபையை விட்டுப் பிரிந்து , அரியானிகள் என்றும் , நேஸ்தோரியானிகள்  என்றும் , கிரேசியர் என்றும் மோஸ்கோபித்தார் என்றும் பல பதிதரகப் போயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரித்தவர்களுக்காக வேண்டி நம்மைப் போல ஜெபங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் . இந்து தேசத்தில் உள்ள மலையாள சீர்மையில் அநேகமாயிரம் பேர் நேஸ்தோரியானிகள்  என்ற பதிதர்களாய் இருந்தாலும் அவர்களுக்குள்ளே அப்படித்தான் நடந்து வருகிறதென்று எவரும் கண்டறியலாம்

இப்போது சொன்னதைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! செய்ய வேண்டிய யோசனை ஏதென்றால் , சகலமான ஜனங்கள் எக்காலத்திலும் எத்தேசத்திலும் விசுவசித்து அனுசரித்த சாத்தியமானது தப்பாத சத்தியமாகையால் , நரகமும் மோட்சமும் இன்றி நடுஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் , இதில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்முடைய நற்கிரியையினால் ஆறுதல் வருவிக்கக் கூடுமென்றும் ஒத்துக் கொள்ளவேண்டுமே அல்லாமல் மற்றபடியல்ல .

அப்படி இருக்க , சேசுநாதர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைக் கெடுக்க  நானூறு வருசத்துக்கு முன் முளைத்த புரோட்டஸ்டாண்டு என்ற பதிதர் மாத்திரமே எந்த முகாந்தரத்தினாலேயோ மேற்சொன்ன சத்தியத்தை மறுத்து விரோதித்து தங்களுடைய புத்தியீனத்தையும் ஆங்காரத்தையும் காண்பிக்கிறதும் தவிர  உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் இரக்கம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள் அல்லவோ ? கிறிஸ்தவர்களே ! இவர்கள் சொல்லும் தப்பரைகளுக்குச் செவி கொடாமல் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உங்களாலான மட்டும் உதவியாய் இருக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக