ஞானப் பெற்றோரும், பெற்றோரும்

1. உறுதிப்பூசுதலில் ஞானப் பெற்றோர் ஏன் நியமிக்கப் படுகிறார்கள்?

ஞானஸ்நான ஞானப் பெற்றோரைப் போலவே, உறுதிப் பூசுதலின் ஞானப் பெற்றோரும் உறுதிப்பூசுதல் பெற இருப்போரை ஆயரிடம் கூட்டி வந்து அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள். மேலும் தங்கள் ஞானக் குழந்தை கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்க்கப் படுகிறதா, தனது வேதத்தை சரியாகக் கடைப்பிடிக்கிறதா ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.


2. உறுதிப்பூசுதலின் ஞானப் பெற்றோராக இருப்பதற்கான தகுதிகள் யாவை?

(1) அவர்கள் நல்ல கத்தோலிக்கர்களாக இருக்க வேண்டும்.

(2) அவர்கள் உறுதிப்பூசுதல் பெற்றவர்களாகவும், ஞானப் பாதுகாவலர்களாகத் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.


3. எத்தனை ஞானப் பெற்றோர் அவசியம்?

உறுதிப்பூசுதல் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு ஞானப் பெற்றோர் இருப்பது அவசியம். சிறுவர்களுக்கு ஒரு ஞானத் தந்தையும், சிறுமிகளுக்கு ஒரு ஞானத் தாயும் இருக்க வேண்டும்.

ஞானஸ்நான ஞானப் பெற்றோரே உறுதிப்பூசுதல் ஞானப் பெற்றோராக இருக்கக் கூடாது.


4. உறுதிப்பூசுதல் பெறும் அனைவருக்கும் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு ஞானப் பெற்றோர் நிற்கலாமா?

உறுதிப்பூசுதல் பெறும் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு ஞானப் பெற்றோரைக் கொண்டிருப்பது சாத்தியமற்ற நிலையில் சிறுவர்களுக்குக் குறைந்த பட்சம் இரண்டு ஆண்களும், சிறுமிகளுக்கு இரண்டு பெண்களும் ஞானப் பெற்றோராக இருப்பார்கள்.


5. ஞானப் பெற்றோரைத் தேர்ந்தெடுப்பது யார்?

உறுதிப்பூசுதல் பெறுபவர் அல்லது அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் ஞானப் பெற்றோர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இல்லாவிடில் ஆயரால், அல்லது பங்குக் குருவால் அவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.


6. உறுதிப்பூசுதலின் போது ஞானப் பெற்றோரின் கடமைகள் என்ன?

(1) அவர்கள் பீடத்திற்குத் தங்கள் ஞானப் பிள்ளையைக் கூட்டி வந்து அவனை அல்லது அவளை ஆயரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

(2) தங்கள் ஞானப்பிள்ளை உறுதிப்பூசுதல் பெறும் வேளையில் அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டு, அவர் தமது வலக்கரத்தால் அவனது தோளைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.


7. உறுதிப் பூசுதலுக்குப் பிறகு ஞானப் பெற்றோரின் கடமைகள் என்ன?

அவர்கள் தங்கள் ஞானப் பிள்ளைகள் மீது நிலையான அக்கறை கொண்டிருக்க வேண்டும். அவர்களது பெற்றோர் இந்தக் கடமையில் தவறும்போதெல்லாம் அவர்கள் தங்கள் ஞானப் பிள்ளைகள் கிறீஸ்தவக் கல்வி பெறுகிறார்களா என்பதில் கவனமாயிருக்க வேண்டும்.


8. ஞானப் பெற்றோர் தங்கள் ஞானப் பிள்ளைகளோடு ஒரு ஞான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்களா?

ஆம். ஆனால் இது திருமணத்திற்கு ஒரு விக்கினமாக இருக்க முடியாது.


9. குரு நிலையினர் அல்லது துறவற சபைகளின் உறுப்பினர்கள் ஞானப் பெற்றோராக செயல்படலாமா?

முடியாது. விசேஷ அனுமதி இல்லாவிட்டால் இது தடை செய்யப் பட்டுள்ளது.


10. உறுதிப்பூசுதல் பெற இருக்கும் குழந்தைகளின் பெற்றோரது கடமைகள் யாவை?

(1) தங்கள் பிள்ளைகள் சரியான வயதில் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தைப் பெற ஏற்பாடு செய்வதில் அவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(2) தங்கள் பிள்ளைகளை அவர்கள் தயாரிப்பு வகுப்புகளுக்கு ஒழுங்காக அனுப்ப வேண்டும்.

(3) உறுதிப்பூசுதல் பெறுமுன், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வதற்கு தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் உதவ வேண்டும்.

(4) உறுதிப் பூசுதல் பெற்ற பிறகு, தங்கள் பிள்ளைகள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை வாங்கும்படி அவர்களை அவர்கள் எப்போதும் தூண்டிவர வேண்டும்.


11. உறுதிப் பூசுதல் பெற்றவர்களின் கடமைகள் யாவை?

உறுதிப் பூசுதல் பெற்றவர்கள்

(1) தங்கள் ஆத்துமத்தில் இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் பொழிந்தருளிய வரப்பிரசாதங்களுக்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

(2) தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவதாகவும் அதன் படி வாழ்வதாகவும் உறுதியான மனதோடு அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

(3) உறுதிப்பூசுதல் பெற்ற தினத்தை ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும்.