உறுதிப்பூசுதல் பெறுவதற்கான சரியான மனநிலையைப் பெறுவதற்கான ஆயத்த ஜெபம்

ஓ என் சர்வேசுரா, உமது மாபெரும் இரக்கத்தினால் நான் உமது மிகப் பரிசுத்த தேவத்திரவிய அனுமானங்களுள் மூன்றை நான் பெற்றிருக்கிறேன். உமது குழந்தையாக என்னை மாற்றும் படியாக அவற்றில் முதலாவதையும், என் ஆத்துமத்தில் பாவங்களால் ஏற்பட்ட கறைகளைக் கழுவிப் போக்கும்படியாக இரண்டாவதையும், உமது தேவ சுதனோடு என்னை ஒன்றித்துக் கொள்ளுபடியாக, மூன்றாவதையும் நான் பெற்றிருக்கிறேன். இப்போது நான் பெற்றுக் கொள்வதற்காக என்னை ஆயத்தம் செய்து வருகிற தேவத்திரவிய அனுமானம் என்னை ஒரு உத்தம கிறீஸ்தவனாக ஆக்கும்படியாகவும், என் தீய பழக்கங்களை எதிர்த்துப் போராடவும், என் சகல சோதனைகளையும் வெல்லவும், உமது கட்டளைகளை உத்தமமான முறையில் கடைப்பிடிக்கவும், கிறீஸ்துநாதரின் பரிசுத்த வேதத்தை மறுதலிப்பதற்குப் பதிலாக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளவும், அவரது பரிசுத்த வேதத்தில் நிலைத்திருக்கவும், தேவைப்பட்டால் அதற்காக சாகவும் நான் தயாராக இருக்கும்படி அவரது உண்மையுள்ள போர்வீரனாக ஆகவும் எனக்கு அது பலமும், தைரியமும் தரும்படியாக எனக்கு வரமருளும்படி உம்மை மன்றாடுகிறேன். இந்த மன்றாட்டை, ஓ என் சர்வேசுரா, உம்மோடு என்றென்றும் ஜீவிக்கிறவரும் ஆட்சி புரிகிறவருமான உமது ஏக சுதனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுகிறீஸ்துநாதரின் பேறுபலன்களின் வழியாக எனக்குத் தந்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்.