திருச்சபையின் தூண்கள்!

நற்கருணை நாதரும், தேவமாதாவும்!

ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள் (ஆமோஸ்- 5)

1862-ஆம் ஆண்டு, மே மாதம் 30-ம் நாளன்று புனித ஜான் போஸ்கோ ஒரு கனவு கண்டார். ஒரு பெரும் கடல். ஒரு பாறையின் மீது அவர் நின்று கொண்டிருக்கிறார். அங்கே ஒரு பெரிய கப்பலை அவர் காண்கிறார். அதில் திருத்தந்தையும், அவரைச் சுற்றிலும் ஆயர்களும், குருக்களும் நின்று கொண்டிருக்கிறார்கள். திடீரென அங்கே பெரும் புயற்காற்று வீச, அதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலைகள் பயங்கரமாக எழும்பி ஆர்ப்பரிக்க, கப்பல் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகிறது.

அதோடு அங்கே கடற்கொள்ளைக்காரர்களான திருச்சபையின் எதிரிகள் சிறு, சிறு படகுகளில் தோன்றி ராணுவ ஆயுதங்களாலும், தப்பறைகளான பிரசுரங்களாலும் அக்கப்பலைத் தாக்குகிறார்கள். அதனால் பாப்பரசர் காயப்பட்டு விழுகிறார். ஆனால் உடனே புதுமையாக எழுகிறார். அப்போது அங்கே மிகுந்த பிரகாசமான இரு பெரும் தூண்கள் தோன்றுகின்றன. உயர்ந்த தூணின் மேலே திவ்விய நற்கருணை அடையாளம் காணப்படுகிறது. அதில் "விசுவாசிகளின் மீட்பு" என்று எழுதப்பட்டிருக்கிறது.

மற்றொரு தூணின் உச்சியில் தேவமாதாவின் சுரூபம் இருக்க, அதில், "கிறிஸ்தவர்களின் சகாயம்" என்ற எழுத்துக்கள் அந்தத் தூணின்மீது பொறிக்கப்பட்டிருக்கின்றன.

திருத்தந்தை மிகுந்த சிரமப்பட்டு கப்பலை அந்த இரு தூண்களுக்கிடையில் செலுத்த முயல்கிறார். ஆனால் எதிரிகளின் தாக்குதலால் காயப்பட்டு மரணமடைகிறார். சற்றைக்கெல்லாம் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் புதிய பலத்தோடும், உத்வேகத்தோடும் கப்பலை திடத்தோடு இரு தூண்களுக்கிடையே செலுத்தி அவற்றோடு பிணைக்கிறார்.

இப்போது அங்கே ஓர். அதிசயம் நிகழ்கிறது! வீசிக் கொண்டிருந்த புயல் உடனே அமர்ந்து, கடல் கொந்தளிப்பு அடங்கி நிசப்தம் உண்டாக, திருச்சபையின் எதிரிகள் பயந்து, சிதறி, தங்களுக்குள்ளே சண்டையிட்டு அழிந்து போகிறார்கள். அங்கே அமைதி சமாதானம் நிலவுகிறது. திருச்சபைக்கு வரக்கூடிய ஆபத்துக்களை திவ்ய நற்கருணை பக்தியாலும், மாதா பக்தியாலும் மட்டுமே வெற்றி கொண்டு, திருச்சபையைக் காப்பாற்ற முடியும் என்ற உண்மை இக்கனவின் மூலமாக தமக்கு வெளிப்படுத்தப் பட்டதாக புனித ஜான் போஸ்கோ உணர்ந்து கொண்டார்.

கிறீஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இன்று திருச்சபையும், உலகமும் பெரும் குழப்பமான காலகட்டத்தில் இருப்பதை நாம் அறிவோம். இச்சமயத்தில் நம்மையும், நம் குடும்பங்களையும், திருச்சபையையும் காப்பாற்றிக் கொள்ள திவ்விய நற்கருணை ஆண்டவரின் மீதும், தேவமாதாவின் மீதும் உண்மையான பக்தி கொள்வோமாக. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, திருச்சபைக்காக வேண்டிக்கொள்வோமாக.