அருளடையாளங்கள்.

மனிதன் தனது எண்ணங்களை, ஏக்கங்களை, விழுமியங்களை சடங்குகள் வழியாக வெளிப்படுத்துகின்றான். ஒரு சமூகமும் அவ்வாறே செயலாற்றுகின்றது. ஒவ்வொரு மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து மதங்களிலும் தமது நம்பிக்கை வாழ்வை கட்டி எழுப்ப சடங்குகள் அவசியமாகின்றது. இச்சடங்குகளிலே அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கிறிஸ்தவ சமூகத்தின் அடிப்படைச் சடங்குகளை 'அருளடையாளங்கள்" என்கின்றோம். எல்லாச் சடங்குகளும் மனித வாழ்வின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளிக் கொணரும் மனித ஊடகங்கள்.

புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழ்கின்றார். தந்தையாம் இறைவனின் அன்பின், மன்னிப்பின் உறுதியான அடையாளமாக கிறிஸ்து இருக்கின்றார். கிறிஸ்து செய்த புதுமைகளைக் கூட நற்செய்தியாளர் தூய யோவான் அருளடையாளமாகவே காட்டுகின்றார். (உ+ம் : கானாவூரில் இயேசு தண்ணீரை இரசமாக்கினார். இது இயேசு செய்த முதல் அருள் அடையாளம். 2:11)

மனித வாழ்வில் அன்பை, உறவை வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ள அடையாளங்கள் தேவை. உ+ம் : தன் பிள்ளையின் மேலுள்ள பாசத்தை ஒரு தாய் முத்தமிடுதல் வழியாக வெளிப்படுத்துவார். அதுபோலவே இறை - மனித உறவில் இறைவனின் அன்பை வெளிப்படுத்த மனித வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்வுச் சூழல்களுக்கு ஏற்ற வகையில் இறையருளை வழங்கும் அடையாளங்கள் அருள் அடையாளங்களாகும். இதனை முன்னர் 'தேவதிரவிய அனுமானம்" என்றழைத்தோம். பின் 1960களில் 'திருவருட்சாதனம்" என்றோம். தற்காலத்தில் 'அருளடையாளம்" என்போம். இதற்கு நாம் வரைவிலக்கணம் கொடுப்போமெனில், மிகவும் இலகுவாக புரிந்து கொள்ள, "உள் அருளின் வெளி அடையாளம்" அருளடையாளம் எனலாம்.

(உம் : திருமுழுக்கின் போது தலையில் தண்ணீர் ஊற்றப்படுதல் வெளி அடையாளம், ஜென்மப் பாவக்கறை நீக்கப்படுவது உள் அருள்) புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே அருள் தரும் அடையாளங்களை ஏற்படுத்தினார். அவரே அவற்றில் நம்முடன் இருந்து, இறை அருளை பொழிகின்றார். ஒவ்வொரு அருளடையாளமும் கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்ற பாஸ்கா மறைபொருள் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

ஓடோ காசெல் என்ற அருளடையாள இறையியலாளர் பின்வருமாறு கூறுவார். 'அருளடையாளங்கள் கொண்டாடப்படும்போது கிறிஸ்து மையப்படுத்தப்படுகிறார். கிறிஸ்துவோடு உறவு கொள்ளப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து, இறந்து, உயிர்த்த இயேசு கிறிஸ்துவோடு அருளடையாளம் வழியாக உறவு கொண்டு மீட்புப்பெற இயலுமானதாக உள்ளது".

எட்வர்ட் ஸ்கில்பெக்சு எனும் இன்னுமொரு இறையியலாளர் அருளடையாளத்தைப் பற்றி கூறுவதைக் காண்போம். 'வரலாற்று இயேசு இறைவனின் முழு முதல் அருளடையாளம் வரலாற்றில் இயேசுவைச் சந்தித்தவர்கள் இறைவனையே சந்தித்தார்கள். அச்சந்திப்பில் வாழ்வைக் கொடையாகப் பெற்றார்கள். இன்று அருள் அருளடையாளக் கொண்டாட்டத்தில் இறைவன் தம்மையே இயேசு வழியாகத் தருகின்றார். மனிதனும் தன்னை இறைவனுக்கு கையளிக்கும் நிகழ்வுகளாக அமைவதால் அங்கே மீட்பு நிகழ்கின்றது. எனவே இதன்படி கிறிஸ்துவே முதன்மையான (Primordial) அருளடையாளம்". புதிய ஏற்பாட்டில் இதற்குரிய சான்றுகள் பல உண்டு. அவற்றுள் சில;

✠ யோவா 12:7 தந்தை என்னுள்ளும், நான் தந்தையினுள்ளும்.....
✠ கொலோ 1:15 அவர் (இயேசு) கட்புலனாகாத கடவுளின் சாயல், படைப்பனைத்திலும் தலைப்பேறு....
✠ கொலோ 2:9 இறைத்தன்மையின் முழுநிறைவும் உடல் உருவில் கிறிஸ்துவுக்குள் குடிக் கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவே இறைவனுக்கும் மனிதர்க்கும் இடையே ஓர் ஒப்பற்ற, நிகரற்ற இணைப்பாளராகத் திகழ்கின்றார். கிறிஸ்து வழியாக இறைவன் மனிதரையும், மனிதர் இறைவனையும் அடைய முடிகிறது. கிறிஸ்துவே அருளடையாளங்களின் அடிப்படையும், ஆற்றலைத் தரும் ஊற்றுமான பாஸ்கா மறைபொருளை நிறைவேற்றியவர்.

இவ் இறையியலாளரைத் தொடர்ந்து மேற்கூறிய சிந்தனைகளை மேலும் மெருகூட்டியவர் தான் இறையியலாளர் கார்ல் ராணர் 'திருச்சபையே அடிப்படையான அருளடையாளம்" (Fundamental) இதன்படி, இயேசு கிறிஸ்துவின் வரலாற்றின் அருள் அடையாளமாக விளங்குவது திருச்சபையே. உலகிற்கு அருளை வழங்கி, மீட்பைக் கொணரும் பணி திருச்சபைக்குத் தரப்பட்டு இருக்கிறது. இத்திருச்சபையே எல்லா இடங்களிலும், காலங்களிலும், தன்னுடைய சொல், செயல், அருளடையாளங்கள் வழியாக கிறிஸ்துவை உடனிருக்கச் செய்கிறது. வாழ்வளிக்கும் வார்த்தைகளை உடனிருக்கச் செய்கிறது. மீட்பளிக்கும் ஆவியை அருளச் செய்கின்றது.

திரிதெந்தின் சங்கம் 1547ஆம் ஆண்டில்

அருளடையாளங்கள் மொத்தம் ஏழு உள்ளன என்றும், அவை அனைத்தும் கிறிஸ்துவால் நிறுவப்பட்டவை என்றும், அவை தாம் குறித்துக் காட்டும் அருளைக் கொடுக்கின்றன என்றும் அதிகாரத்தோடும், தெளிவோடும் போதித்தது. அருளடையாளங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.

1. புகுமுக அருளடையாளங்கள்.
- திருமுழுக்கு
- உறுதிபூசுதல்
- நற்கருணை

2. குணமளிக்கும் அருளடையாளங்கள்
- ஒப்புரவு
- நோயிற்பூசுதல்

3. பணியின் அருளடையாளங்கள்
- திருமணம்
- குருத்துவம்

அவற்றில் முதலாவது புகுமுக அருளடையாளங்கள் என்றும், அவை திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை ஆகுமென்றும் பார்த்தோம். தொடக்கத் திருச்சபையில்யிலே இவை மூன்றும் ஒன்றாகவே ஒரே வழிபாட்டில் அருளப்பட்டன. பிற்கலத்திலேயே நாம் இன்று காண்பது போல மூன்றும் வெவ்வேறாக, தனித்தனி கொண்டாட்டங்களாக இடம் பெறுகின்றன. இருப்பினும் இன்றும் வளர்ந்தோரை கிறிஸ்தவர்களாக ஏற்றுக் கொள்ளும் வழிபாட்டில் புகுமுக அருளடையாளங்கள் அனைத்தும் இணைந்தே வழங்கப்படுகின்றது. திருமுழுக்கென்றால் என்ன என்பதை “வளந்தோர்க்கான புகுமுக அருளடையாள” அறிவுரை குறிப்பு பின்வருமாறு கூறுகின்றது. “திருமுழுக்கின் ஊடக மக்கள் இருளின் பிடியிலிருந்து விடுவிக்கப்ப்டடுகிறார்கள். கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுகின்றார்கள். ஆவியினால் இறைவனின் சுவிகாரப் பிள்ளைகள் ஆகின்றார்கள். இறை சமுகத்தோடு கிறிஸ்துவின் இறப்பையும், உயிர்ப்பையும் கொண்டாடுகின்றார்கள். (இல10)

திருமுழுக்கென்பது புனித முழுக்கு என்று கூறலாம். இந்து மக்கள் கங்கையில் நீராடினால் தங்கள் “பாவ தோஷம் நீங்கிவிடும்” என்பதை நம்புகின்றார்கள். நீராடும் போது உடலில் உள்ள அழுக்கெல்லாம் நீக்கப்படுகின்றது. நீருக்கு அந்த மகத்தான சக்தி உண்டு. நீருக்கு ஆக்க சக்தியும் உண்டு, அழிக்க சக்தியும் உண்டு. உதாரணமாக சுனாமி – தண்ணீரின் அழிவுக்கு ஓர் எடுத்துக்காட்டு. தண்ணீருக்கு ஆக்கச் சக்தியை கொடுப்பது கடவுளின் ஆவி. இதை தான் தொடக்கநூல் மறைமுகமாக பின்வருமாறு குறிப்பிடுகிறது “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.” மேலும் விவிலியத்தின் பக்கங்களை புரட்டும் போது பல நிகழ்வுகளைக் காண்கின்றோம். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பாகவும். ஏனையோருக்கு அழிவாகவும் இருந்தது. (தொ.நூ 9:8-17)

செங்கடல் வழியாக இஸ்ரயேலர் நடந்து விடுதலையையும், எகிப்தியர் அழிவையும் சந்தித்தனர் (வி.ப 14:5-29) “இஸ்ரயேல் மக்கள் மீது தூய நீரை தெளித்து. அவர்களை அனைத்து பாவங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துவேன்.” என்கின்றார் இறைவன் (எசே 36:25) புதிய ஏற்பாட்டு பக்கங்களில் திருமுழுக்கு யோவான் யோர்தான் நதியிலே திருமுழுக்கு கொடுக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் யோர்தான் நதியை கடந்து தான் இறைவன் வாக்களித்த பாலும் தேனும் பொழியும் கானன் தேசத்துக்குள் நுழைந்தார்கள். அது போல் பாவம் என்ற அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாழ்வை அனுபவிக்க யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு யோவான் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.

“நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் வருபவரோ (கிறிஸ்து) அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். (மத்3:11) இயேசுவும் யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றார் (மத் 3:13 மாற் 1:9 லூக் 3:2 யோ 1:29)

திருமுழுக்குகோடு தன் பகிரங்கப்பணியை ஆரம்பிக்கும் இயேசு “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) என்று அறைகூவல் விடுத்தார். தன் தந்தையிடம் மீண்டும் செல்வதற்கு முன் தன் சீடர்களுக்கு பின்வருமாறு கட்டளை கொடுக்கின்றார். “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” (மத் 28:18)

கிறிஸ்துவின் கட்டளையை சிரமேற்கொண்டு, திருத்தூதர்கள் தூய ஆவியினை பெற்றதன் பிற்பாடு, நற்செய்தியை அறிவித்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தனர். இதன் விளைவாக மக்கள் திருமுழுக்கு பெற்றனர். “"நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.” (தி.பா 2:38)

நற்செய்தியாளர் லூக்காவின் கூற்றுப்படி திருமுழுக்கானது பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குகின்றது. கிறிஸ்துவின் பெயரால்,தூய ஆவி கொடையாக வழங்கப்படுகிறது. யோவானின் கூற்றுப்படி திருமுழுக்கானது கடவுளின் பிள்ளைகளாக மறுபிறப்பு அடைய, நீரினாலும், தூய ஆவியினாலும் வழங்கப்படுகிறது.

திருமுழுக்கு ஓர் கருவறை (யோவான் 3:1-8) எவ்வாறு கருவறையில் ஓர் உயிர் உருவாக்கப்படுகிறதோ அவ்வாறு திருமுழுக்கில் கிறிஸ்தவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

எனவேதான் தெர்த்தூலியன் என்ற திருத்தந்தை “கிறிஸ்தவர்கள் யாரும் பிறப்பதில்லை. மாறாக உருவாக்கப்படுகிறார்கள்.”

தூய பவுல் திருமுழுக்கு பற்றி பல மகத்தான உண்மைகளை நம் கண்முன் நிறுத்துகிறார். திருமுழுக்கின் ஊடாக கிறிஸ்துவின் மரணத்தோடும், உயிர்ப்போடும் இணைக்கப்பட்டுள்ளளோம்.

திருமுழுக்கின் போது தண்ணீரில் முழ்குவதை கிறிஸ்துவோடு மரணத்தில் இணைக்கப்படுவதையும், கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதையும் நீரில் இருந்து எழும்புதல் கிறிஸ்துவோடு உயிர்ப்பில் இணைக்கப்படுவதையும், கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதையும் நீரில் இருந்து எழும்புதல் கிறிஸ்துவோடு உயிர்ப்பில் இணைக்கப்பட்டு எழுப்புவதையும் குறித்துக் காட்டுகிறது (உரோ 6:3-4)

மேலும் “திருமுழுக்கு பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்” (கொலே 2:12) திருமுழுக்கு பெறுபவர்கள் புதுப்படைப்பாகின்றார்கள். சுவிகார மக்கள் ஆகின்றார்கள். இறைத்தன்மையில் பங்கெடுக்கின்றார்கள் என்ற உண்மைகளை (2கொரி 5:17, 2பேதுரு 1:4, கலா 4:5-7, 1கொரி 6:15, 12:27 உரோ 8:17) இவ்விவியவரிகளில் காண்கின்றோம்.

திருமுழுக்கு வாழ்விற்கும், இறையரசிற்கும் வாயில் திருமுழுக்கு விசுவாசத்தின் அருளடையாளம். தூய ஆவியின் அருளினால் பெற்ற திருமுழுக்கால் தூய ஆலயமாக மாறுகிறோம். (1கொரி 6:19), மேலும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினராகின்றனர். (1கொ 12:13, எபே 4:25) திருமுழுக்கினால் ஒருவர் இறைவன் வாழும் இல்லமாக, பரிசுத்த குலமாக, அரச குருத்துவக் கூட்டமாக, உயிருள்ள கற்களாக இருக்கின்றார் என்கிறார் தூய பேதுரு (1பேது 2:9)

மேற்கண்ட விவிலியப் பகுதிகள் திருமுழுக்கின் மாண்பினையும், மகத்துவத்தையும் எடுத்தியம்பியதைக் கண்டோம். தண்ணீரில் முழ்குவது என்பது கிறித்துவுக்குள் முழ்குவதாகும். ஈற்றிலே 4ஆம் நூற்றாண்டு தூய நாசியாநூஸ் கிரகோரியார் திருமுழுக்கைப் பற்றி கூறுவதை உற்று நோக்குவம்.

“திருமுழுக்கானது கடவுளின் அழகான. மகத்துவமான கொடையாகும். இதனை கொடை, அருள், அபிஷேகம், முத்திரையிடப்படல், முடிவில்லா வாழ்வின் ஆடை என்றெல்லாம் கூறலாம். நாம் பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வரவில்லை. ஆனால் இறைவன் எம்மேல் கொண்ட அன்பினால் தருகிறார். ஆகவே இது கொடை, அருள் என்போம். பாவம் தண்ணீரில் முழ்கடிக்கப்பட்டு, கழுவப்பட்டு, புதுவாழ்வை தருகின்றது. அரச குருத்துவக் திருகூட்டமாக அர்சிக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் ஒளியை பெற்று. ஒளியின் மக்களாக வாழத் தூண்டுகிறது. கடவுளின் பிள்ளைகளாக முத்திரையிடப்பட்டு. கிறிஸ்துவை ஆடையாக அணிகின்றோம்.”