ஓ அர்ச். சாமிநாதரே, நீர் சாகுந்தறுவாயில் இருந்த போது உம்மைப் பற்றி அழுது புலம்பியவர்களுக்கு அதிசயத்திற்குரிய நம்பிக்கையளித்தீரே. நீர் இறந்த பிறகு உம்முடைய சகோதரர்களுக்கு இன்னும் அதிக உதவியாயிருப்பதாக வாக்களித்தீரே. ஓ எங்கள் நல்ல தகப்பனே, உமது வாக்குறுதியை நிறைவேற்றி, உமது மன்றாட்டால் எங்களுக்கு உதவி செய்வீராக.
உடலில் நோயாயிருந்தவர்களைக் குணப்படுத்தி அநேகப் புதுமைகளைச் செய்து, பிரகாசித்தவரே, நோயாயிருக்கும் எங்கள் ஆத்துமங்களைக் குணப்படுத்த கிறீஸ்து நாதருடைய உதவியை எங்களுக்குப் பெற்றுத் தருவீராக. ஓ எங்கள் நல்ல தகப்பனே, உமது வாக்குறுதியை நிறைவேற்றி, உமது மன்றாட்டால் எங்களுக்கு உதவி செய்வீராக.
பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக் கடவது.
எங்கள் நல்ல தகப்பனே, உமது வாக்குறுதியை நிறைவேற்றி, உமது மன்றாட்டால் எங்களுக்கு உதவி செய்வீராக.
முதல்: சேசு கிறீஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: பிதாப்பிதாவான அர்ச். சாமிநாதரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஜெபிப்போமாக
சர்வேசுரா, உம்முடைய ஸ்துதியரும், எங்கள் நல்ல தகப்பனுமான அர்ச். சாமிநாதருடைய உயர்ந்த புண்ணியங்களாலும், போதனைகளாலும் உமது திருச்சபையைப் பிரகாசிப்பித்தீரே. எங்கள் ஆத்துமத்துக்கும் சரீரத்துக்கும் அவசியமான சகலத்தையும் அவரது மன்றாட்டால் நாங்கள் பெற்றுக் கொள்ளக் கிருபை செய்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக.
ஆமென்.