மூன்று இளைஞர்களின் சங்கீதம்

(தானி. 3:57-88 மற்றும் 56)

ஆண்டவருடைய எல்லாக் கிரியைகளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள்.  அவரைச் சதாகாலங்களிலுந் துதித்து எல்லோருக்கும் மேலாக உயர்த்துங்கள்.

ஆண்டவருடைய சம்மனசுக்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். வானங்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள்.   

வானமண்டலங்களின் மேலிருக்கும் தண்ணீர்களே, நீங்கள் எல்லாம் ஆண்டவரைப் புகழுங்கள்.   ஆண்டவருடைய பலவத்தர்களே, நீங்களெல்லோரும் ஆண்டவரைப் புகழுங்கள். 

சூரிய சந்திரரே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். வானத்தின் சகல நட்சத்திரங்களே, நீங்கள் எல்லாம் ஆண்டவரைப் புகழுங்கள்.  

மழையும் பனியுமே, நீங்கள் எல்லாம் ஆண்டவரைப் புகழுங்கள். தேவனுடைய காற்றுகளே, நீங்களெல்லோரும் ஆண்டவரைப் புகழுங்கள்.  

அக்கினியும் வெப்பமுமே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். குளிரும் வெப்பமுமே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். 

பனிகளே, மூடுபனிகளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். உறைந்த பனியே, குளிரே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். 

பனிக்கட்டிகளே, பனித்துகள்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். இரவுகளே, பகல்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். 

வெளிச்சமே, இருளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். மின்னல்களே, மேகங்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள்.

பூமியானது ஆண்டவரைப் புகழக்கடவது. அவரைச் சதாகாலங்களிலுந் துதித்து எல்லாருக்கும் மேலாக உயர்த்துவதாக.

மலைகளே, குன்றுகளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். தரையில் துளிர்விடும் பூண்டு முதலியவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரைப் புகழுங்கள்.

நீரூற்றுகளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். சமுத்திரங்களே, ஆறுகளே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள்.

திமிங்கிலங்களே, நீரில் நடமாடுகிற சகலமுமே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள்.  வானத்தின் பறவைகளே, நீங்களெல்லாம் ஆண்டவரைப் புகழுங்கள்.

மிருகங்களே, ஆடு மாடு மந்தைகளே, நீங்கள் எல்லாம் ஆண்டவரைப் புகழுங்கள். மனிதர்களின் குமாரர்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள்.

இஸ்ராயேலர் ஆண்டவரைப் புகழ்வார்களாக. அவரைச் சதாகாலங்களிலுந் துதித்து, எல்லாருக்கும் மேலாக உயர்த்துவார்களாக.

ஆண்டவருடைய குருக்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். ஆண்டவருடைய தாசர்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். 

நீதிமான்களின் ஆவிகளே, ஆத்துமங்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். அர்ச்சயசிஷ்டவர்களே, இருதயத் தாழ்ச்சியுள்ளவர்களே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். அவரைச் சதாகாலங்களிலுந் துதித்து எல்லோருக்கும் மேலாக உயர்த்துங்கள்.

அனனியாவே, அசாரியாவே, மிசாயேலே, நீங்கள் ஆண்டவரைப் புகழுங்கள். அவரைச் சதாகாலங்களிலுந் துதித்து எல்லோருக்கும் மேலாக உயர்த்துங்கள்.

பிதாவையும், சுதனையும், இஸ்பிரீத்து சாந்துவையும் புகழ்வோமாக. அவரையே சதாகாலங்களிலுந் துதித்து, எல்லாருக்கும் மேலாக உயர்த்துவோமாக.

வானமண்டலத்திலே ஆண்டவரே, தேவரீர் துதிக்கப் படுவீராக. நீரே புகழ்ச்சிக்கும், மகிமைக்கும் தகுதியுள்ளவராகையால் என்றென்றைக்கும் மேன்மைப் படுத்தப் படுவீராக.

(இங்கு திரித்துவ ஆராதனையோ, ஆமென் என்றோ சொல்லக் கூடாது.)