புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

(7) பாவ சோதனைகளை சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றை வெல்லுதல்:

பாவ சோதனைகள் அவசியமானவை. கிறீஸ்துநாதரும் சோதனைக்குட்பட்டார். மரணத்தை வெல்லும்படி தாம் மரணத்திற்கு உட்பட்டது போலவே, சோதனைகளை வெல்வதில் நமக்கு முன்மாதிரிகை காட்டும்படி அவரும் சோதனைக்கு உட்பட சித்தமானார்.

"நியாயமான முறையில் போரிட்டு வெற்றி பெறாதவன் எப்படி முடிசூடப்பட முடியும்? தன்னைத் தாக்க ஒருவருமில்லாத போது, மனிதன் எப்படி வெற்றி பெற முடியும்?" என்று அர்ச். பெர்னார்ட் கேட்கிறார்.

"தன் முழு இருதயத்தோடும் கடவுளை நெருங்கி வருகிறவன், சோதனையாலும், துன்ப துரிதங்களாலும் தான் அதற்குத் தகுதியுள்ளவன் என்று நிரூபிக்க வேண்டும்" என்று அர்ச். பெரிய ஆல்பர்ட் கூறுகிறார்.

தேர்வு நடத்தப்படாமல் மாணவனின் தகுதி வெளிப்படுவதில்லை. சோதனை இன்றி புண்ணியம் இல்லை,

பாவத்தை விலக்கி, தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருக்கிறவர்களைத்தான் பசாசு சோதிக்கிறது. ஞான ஜீவியத்தில் உன் நிலை என்ன என்பதை நீ அறிவதற்காகவே சோதனை உனக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஆகவே திடதைரியத்தோடும், தேவ உதவியோடும் சோதனைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்லுகிறவன், நரகத்தை வெல்லுகிறான், கண்கள் காணாததும், செவிகள் கேள்விப்படாததும், மனித இருதயத்திற்கு எட்டாததுமான தேவ வெகுமானம் அவனுக்காகக் காத்திருக்கிறது.