மார்ச் 31

அர்ச். பெஞ்சமின். வேதசாட்சி (கி.பி. 424) 

பாரசீக தேசத்தின் அரசர்கள் சத்திய வேதத்தை அடியோடு அழிக்க சகல முயற்சிகளையும் செய்துவந்தார்கள்.

இவர்களுக்குள் இஸ்தேஜெர்டெஸ் என்னும் கொடுங்கோலன் 40 வருடகாலமாக திருச்சபையை உபாதித்து கணக்கில்லாத கிறீஸ்தவர்களைக் கொன்று குவித்தான். மேலும் தன் தேசத்திலுள்ள சத்திய வேத தேவாலயங்களை இடித்து தரை மட்டமாக்கினான்.

இவன் இறந்தபின் இவன் குமாரனும் தன் தகப்பனைப்போல் வேதகலகம் எழுப்பினான். அக்காலத்தில் ஆறு பட்டம் பெற்ற டீக்கனான பெஞ்சமின் என்பவர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரு வருடகாலம் பெஞ்சமின் சிறையில் கஷ்டப்பட்டு வருந்தினபின் அரசனுடைய உத்தரவின்படி சிறையினின்று விடுதலை செய்யப்பட்டார்.

பெஞ்சமின் மறுபடியும் வேதம் போதிக்கிறதைப் பற்றி கேள்விப்பட்ட அரசன் அவரைப் பிடித்து உபாதித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான். வேதசாட்சி மறுபடியும் பிடிபட்டு சகலவித வேதனையையும் அனுபவித்தார்.

கொலைஞர் அவருடைய கை கால்களின் நகங்களில் ஊசி களை ஏற்றி, பிறகு அவைகளைப் பிடுங்கி, மறுபடியும் அவைகளை நகக் கண்களில் விட்டு சித்திரவதைப்படுத்தினார்கள்.

பிறகு அவருடைய வயிற்றைக் குத்தித் திறந்து உபாதிக்கும்போது, அந்த வேதனையால் பெஞ்சமின் தமது ஆத்துமத்தைத் தமது இரட்சகர் கையில் ஒப்படைத்து நித்திய சம்பாவனையை அடைந்தார்.

யோசனை

நாமும் அர்ச். பெஞ்சமினைப்போல் நமக்குண்டாகும் தந்திர சோதனை களுக்கு உட்படாமல் நம்மைக் காத்துக்கொள்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். அகாசியுஸ், மே.
அர்ச். குயி, து.