டிசம்பர் 01

அர்ச். எலிஜியுஸ். கி.பி. 660.

எலிஜியுஸ் சிறுவயதில் தன் பெற்றோரால் உத்தமமாய் வளர்க்கப்பட்டு, புண்ணியவாளனும் சிறந்த வேலைக்காரனுமான ஒரு நகைத் தொழிலாளியிடம் வேலை கற்கும்படி விடப்பட்டார்.

அவர் அந்த வேலை செய்யும்போது தன் ஆன்ம வேலையை மறவாமல் ஜெபத்தியானங்கள் செய்து, திவ்விய பலிபூசை கண்டு, ஞானப் பிரசங்கங்களைக் கவனமாய் கேட்டு, புண்ணிய வழியில் நடந்தார். அவர் நகைத் தொழிலைச் சிறப்பாகவும், திறமையுடனும் செய்து, பெயரும் புகழும் பெற்றார்.

பிரான்ஸ் தேசத்தின் அரசர் அவரைத் தம்மிடம் வரவழைத்து, ஒரு சிம்மாசனம் செய்யக் கூறி, அதற்கு வேண்டிய பொன், இரத்தினம் முதலிய விலையேறப்பெற்ற கற்களை அவருக்குக் கொடுத்தார். எலிஜியுஸ் இரண்டு சிம்மாசனங்களையும் சிறந்து வேலைப்பாடுடன் செய்து அரசரிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்த அரசன் அவருடைய வேலைப்பாட்டையும், விசேஷமாக அவருடைய தர்ம நடத்தையையும் மெச்சிப் புகழ்ந்து, தன் அரண்மனையில் அவரை பெரிய பதவியில் அமர்த்தினார்.

அவர் அரண்மனையில் வேலை செய்யும்போது, முன்னிலும் அதிக புண்ணியச் செயல்களைப் புரிந்து, ஏழைகளுக்குத் தர்மம் கொடுத்து, ஏராளமான அடிமைகளை மீட்டு, துறவற மடங்களைக் கட்டி புனிதராய் வாழ்ந்து வந்ததினால், அவர் ஆயராக நியமிக்கப்பட்டார்.

இந்த உந்நதப் பட்டத்தில் உயர்த்தப்பட்ட பின், வெகு கவனத்துடன் கிறீஸ்தவர்களைக் கவனித்து, பிற மதத்தினரை மனந்திருப்பி, கெட்ட வழக்கங்களை ஒழித்து, விசேஷமாக நல்லொழுக்கத்திற்கு விரோதமான ஆடல், பாடல், நாடகம் முதலியவைகளை ஒழிக்கச் செய்து, அநேக அற்புதங்களாலும் சிறந்த புண்ணியங்களாலும் பிரகாசித்து, மோட்சத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்.

யோசனை

நமது பிழைப்புக்கான தொழில், வியாபாரம் முதலியவைகளில் சூது வாது, வஞ்சகம் முதலியவைகளை நீக்கி, எதார்த்தமுள்ளவர்களாய் நடப்போமாக.