டிசம்பர் 30

அர்ச். அனிசியா - வேதசாட்சி - (கி.பி. 304).

மாக்சீமியன் கலேரியுஸ் என்பவன் கி.பி. 303-ல் உரோமை இராச்சியங்களை அரசு புரிந்து வந்த காலத்தில், கிறீஸ்தவர்களுக்கு விரோதமாக வேத கலகம் எழுப்பி, கிறீஸ்தவர்கள் திவ்விய பலிபூசை முதலிய தேவாராதனை நடக்கும் இடங்களுக்குப் போகக் கூடாதென்று ஒரு சட்டத்தை நிறைவேற்றினான்.

அந்நாட்களில் தெசலோனிக்கா என்னும் நகரில், அழகும் செல்வமும் நிறைந்த, உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த அனிசியா என்னும் ஒரு வாலிபப் பெண் இருந்தாள்.

இவள் சிறுமியாயிருக்கையில் இவளுடைய பெற்றோர் இறந்தமையால், இவள் சத்திய வேதக் கட்டளையை வெகு நுணுக்கமாய் அனுசரித்து மற்ற கிறீஸ்தவர்களுக்கு ஒரு ஞானக் கண்ணாடியாய் விளங்கினாள்.

வழக்கப்படி ஒருநாள் இவள் கடன் பூசை காணும்படி, பெரிய போர்வையால் தன்னை முக்காடிட்டுக்கொண்டு, கிறீஸ்தவர்கள் கூடியிருந்த இடத்திற்குப் புறப்பட்டுப் போனாள்.

அப்போது வழியில் நின்றுகொண்டிருந்த ஒரு காவல் சேவகன், அடக்கவொடுக்கத்துடன் நடந்துபோகும் பெண் கிறீஸ்தவளாக இருக்க வேண்டுமென்று நிச்சயித்து, இவளை அணுகி, இவள் முக்காட்டைப் பிடித்து இழுத்தான். அப்போது இவள் முக அழகைக் கண்டு, இவள் மட்டில் துர் இச்சைக்கொண்டு, இவளைப் பார்த்து: நீ யார்? எங்கே போகிறாய்? என்று வினவினான்.

தன் கற்புக்குப் பழுது உண்டாகாதபடி தன் நெற்றியில் சிலுவை வரைந்துகொண்டு, திரும்பவும் முக்காடிட்டுக்கொண்டு: நான் சேசு கிறீஸ்துநாதருடைய பணிவிடைக்காரி, மெய்யான கடவுளை ஆராதிக்கப் போகிறேன் என்று சொன்னாள்.

அதற்குக் காவல்காரன், இன்று சூரியனை ஆராதிக்கும் நாள். ஆகவே சூரியனுக்குப் பலி செலுத்த என்னுடன் வா என்று இவளைப் பிடித்து இழுத்தபோது, இவள் அதற்கு சம்மதியாததினால், தன் கையிலிருந்த வாளால் இவளைக் குத்தி ஊடுருவினான். அக்கணமே இவள் கீழே விழுந்து உயிர் துறந்து வேதசாட்சி முடி பெற்றாள்.

யோசனை

பெண்களுக்கு முக அழகும், ஆடை ஆபரணமும் அழகல்ல; ஆனால் அடக்கவொடுக்கமும் மேரை மரியாதையும், கற்புமே மெய்யான அழகாகும்.