டிசம்பர் 29

அர்ச். தோமாஸ் - பேராயர், வேதசாட்சி (கி.பி. 1170).
இவர் இங்கிலாந்து தேசத்தில் பிறந்து தர்மசாஸ்திரம் முதலியவைகளைக் கற்றுத் தேர்ந்து, கான்டர்பரி மறைமாவட்டத்தில் தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார்.

இவருடைய அரிதான ஞானத்தையும், புண்ணிய வாழ்வையும் கண்ட 2-ம் ஹென்ரி என்னும் அரசன் தோமாஸை தன் தேசத்திற்கு மந்திரியாக நியமித்துக்கொண்டான். கான்டர்பரி பேராயர் இறந்த பின், அவருக்குப் பதிலாக அர்ச். தோமாஸ் தெரிந்துகொள்ளப்பட்டார். 

தோமாஸ் ஜெபத்தாலும் ஒறுத்தல் முயற்சியாலும் இடைவிடாத பிரசங்கத்தாலும், பாவ வழியில் நடந்த ஜனங்களை நன்னெறியில் திருப்ப முயற்சித்தார்.

அக்காலத்தில் கோவிலுக்கும் தர்மத்திற்கும் அளிக்கப்பட்ட மானியம், நிலங்கள் முதலியவைகளை அரசன் தன்வசப்படுத்திக் கொண்டதினால், தோமாஸ் அரசனுடன் பலமுறை பேசி, தர்ம சொத்தை அபகரிப்பது பெரும் பாதகமென்று கூறியதினால், அவன் கோபம்கொண்டு: “என் பிரஜைகளில் இந்த ஆயரைத் தண்டிக்கிறவன் ஒருவனுமில்லையோ என்றான்.

இதைக் கேட்டவர்களில் நான்கு பேர், ஆயுதங்களோடு கோவிலில் நுழைந்து, மாலை ஜெபம் செய்துகொண்டிருந்த பேராயரை அணுகி, அவர்களில் ஒருவன் கண்டகோடாலியால் இவர் தலையைப் பிளந்தான். இவரும் அக்கணமே வேதசாட்சியாக உயிர் துறந்தார். 

இதைப்பற்றிக் கேள்விப்பட்ட அரசன் அழுது துக்கப்பட்டு, கோவில் சொத்துக்களை திரும்ப கொடுத்துவிட்டு, பாப்பரசரால் விதிக்கப்பட்ட அபராதத்தை தீர்த்தான்.

கொலை செய்த நால்வரும், தங்கள் பாவத்திற்காக துக்கப்பட்டு தபம் செய்து, விரைவில் இறந்துபோனார்கள். இன்றும் வேதசாட்சியின் வேண்டுதலால் நடந்து வரும் புதுமைகளுக்குக் கணக்கில்லை.

யோசனை

கோவிலுக்கும், பூசைக்கும், தர்மத்திற்கும் ஒதுக்கப்பட்ட சொத்துக்களை அபகரிப்பது, தேவ துரோகமென்று நாம் எண்ணி, அப்பாவத்திற்குப் பயப்படுவோமாக.