அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 30

அர்ச்.சூசையப்பரை குறித்த செபங்களையும், நற்செயல்களையும் தியானிப்போம் 

தியானம் 

சிலர் அர்ச்.சூசையப்பருடைய உதவியினாலே தங்களுக்கு நன்மரணம் வேண்டுமென்று புதன்கிழமைதோறும் ஒருசந்தி இருப்பார்கள். சிலர் அவருடைய ஏழு துன்ப, சந்தோஷங்களைக் குறித்து புதன்கிழமைதோறும் ஒருசந்தி இருப்பார்கள். மார்ச் மாதம்  அர்ச்.சூசையப்பருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதமாகையால் அதிக பக்தி நம்பிக்கையோடு அப்போது செபிக்க வேண்டும் 

எல்லாப் புண்ணியங்களிலும் தானதர்மங்கள் தலைசிறந்தது புதன்கிழமைதோறும் ஒரு சிலருக்கு தர்மம் கொடுப்பார்கள். சிலர் சேசு மாமரி சூசை என்ற பெயரால் ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவனுக்கும் உணவளிப்பார்கள் 

நல்ல ஆயத்தத்தோடு  அர்ச்.சூசையப்பருக்கு குறிக்கப்பட்ட நாளில் ஒப்புரவு அருட்சாதனம் பெற்று திவ்வியநற்கருணை பெறுவதே உன்னதமான புண்ணிய வழியாக சிலர் கொள்கிறார்கள். சிலர் திருப்பலி நிறைவேற்றச் செய்கிறார்கள். இன்னும் சிலர் அன்று திருப்பலியில் செபித்து ஒப்புக்கொடுக்கிறார்கள். 

சிலர் ஏழு துன்ப, சந்தோசங்களை நினைத்து இரவில் ஏழு பர, ஏழு அருள், ஏழுதடவை திரித்துவ ஆராதனை சொல்வதும் உண்டு 

நாம் எவ்வளவு சேசுவை மகிமைப்படுத்துவோமோ அவ்வளவு அர்ச்.சூசையப்பருக்கும் செலுத்தவேண்டும். அப்போது மாமரியன்னையும் சேசுவும் மகிழ்ச்சியடைவர் என மறைநூல் வல்லுநரான அர்ச்.ஜெர்சோனியூஸ் குறிப்பிட்டுள்ளார். அதனால் அவரை நம்பி அன்பு செய்து, வணங்கி அவரது அடைக்கலத்தைத் தேடுவோம் 

புதுமை 

அர்ச்.தெரசம்மாள் நிறுவிய கார்மல் சபையில் சகல புண்ணியங்களும் நிறைந்த அகுஸ்தீன் அன்னம்மாள் என்ற கன்னிகை இருந்தார்கள். அவர்கள் அர்ச்.தெரசம்மாள் போன்று அர்ச்.சூசையப்பர் மேல் அதிக பக்தி கொண்டிருந்ததோடு அவரை மகிமைப்படுத்தவும் வணக்கத்தைப் பரப்பவும் முயற்சி செய்து வந்தார்கள், பின்னர் நோய்வாய்ப்பட்டதும் அவர்களுக்கு உதவவும், ஆறுதல் கூறவும் சில கன்னியர்களும், அருட்பணியாளர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இவரது ஆன்மாவை மோட்சத்திற்கு அழைத்துச்செல்ல திரளான மோட்சவாசிகளும் வானதூதர்களும் வந்திருந்தார்கள் 

அர்ச்.தெரசம்மாளும்  அர்ச்.சூசையப்பரும் விசேஷமாக

மோட்சவாசிகளுள் விளங்குகிறார்கள் அவர்கள் நோய்வாய்பட்டவர்கள்,

படுத்திருந்த அறையை பேரின்பத்தால் நிறைத்ததால் அனைவரும் மகிழ்ந்தனர்.  அர்ச்.தெரசம்மாள் மனம் மகிழ்ந்து குருக்களையும் கன்னியர்களையும் பார்த்து, "என் ஞானத்தந்தையரே, என் சகோதரிகளே இந்த மோட்சக்காட்சியை பாருங்கள், என் ஆன்மாவை மோட்சத்துக்கு அழைத்து வந்த நமது அர்ச்.தெரசம்மாளையும் நமது தந்தையாகிய  அர்ச்.சூசையப்பரையும் வணங்கி புகழுங்கள்" என்றார் 

இந்தப் பேரின்பத்தைச் சற்றுநேரம் அனுபவித்தபின் அன்பினால் இறந்து, அவர்களது ஆன்மா  அர்ச்.தெரசம்மாளுக்கும்  அர்ச்.சூசையப்பருக்கும் நடுவே புனிதர்களாலும் வானதூதர்களாலும் சூழப்பட்டு மோட்சம் சென்றதை பலரும் கண்டார்கள் 

கிறிஸ்தவர்களாகிய நாம்  அர்ச்.சூசையப்பரை வணங்கி அவரை மகிமைப்படுத்த முயற்சி செய்வது பயனற்றதாக இருக்காது என அறிவோம் (1 பர, 3 அரு, திரி) 

செபம் 

பக்தியுள்ள ஆன்மாக்களால் வணங்கப்பட்ட பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். உமது மகிமையையும் புண்ணிய தர்மங்களையும், அதிகாரத்தையும் கிருபையையும் அறிந்த நாங்கள் உம்மை மறந்து போகாமல் தினமும் செபித்து வருவோம், மற்றும் உமக்குப் பிரியமுள்ள பக்தியாலும் மனத்தாழ்ச்சியும், பொறுமை, சந்தோஷம் சர்வேசுரனின் சித்தத்திற்கு ஏற்ப அமையவும் மாமரியன்னை மேல் பக்தியும், சேசுவின்மேல் இறையன்பும் அனுசரிக்க முயற்சிப்போம். அதற்கு எங்களுக்கு பலம் போதாததால் எப்போதும் உமது குமாரனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் உம்மில் நிலைத்திருக்கச் செய்தருளும் 

ஆமென் 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

எங்களின் தந்தையாகிய  அர்ச்.சூசையப்பரே எக்காலத்திலும் உமக்கு புகழ் உண்டாவதாக 

எங்களின் நம்பிக்கையான  அர்ச்.சூசையப்பரே என்றென்றும் உமக்கு புகழ் உண்டாவதாக 

எங்களுக்கு அடைக்கலமான  அர்ச்.சூசையப்பரே உம்மை சரணடைகிறோம். 

இன்றைய நற்செயல் 

நல்ல. ஒப்புரவு அருட்சாதனம் பெறுவது