அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 29

அர்ச்.சூசையப்பருடைய ஏழு துன்பங்களையும் ஏழு சந்தோசங்களையும் தியானிப்போம் 

தியானம் 

அர்ச்.சூசையப்பர் தனது மகா பரிசுத்த கன்னிமாமரி கருவுற்றிருப்பதை அறிந்து எப்படி நடந்தது என அறியாமல் மிகுந்த துன்பமடைந்தார். ஆனால் அவருக்கு வானதூதர் தோன்றி சேசுவின் பிறப்பு பற்றிய விவரத்தை தெரியப்படுத்தியதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். இது முதல் துன்பமும், சந்தோசமுமாகும். 

அர்ச்.சூசையப்பர் பெத்லேகம் என்னும் ஊரில் சேசு வறுமையில் பிறந்ததற்காக துன்பப்பட்டார். ஆனால் சேசு பிறந்ததும் வானதூதர்கள் வணங்கவும், மூன்று அரசர்கள் அவரை ஆராதிக்கவும், அவருக்கு காணிக்கை அளித்ததையும் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இது அவரது இரண்டாவது துன்பமும் சந்தோசமுமாகும். 

பழைய முறைப்படி சேசுவுக்கு விருத்தசேதனம் கொடுக்கும் போது குழந்தை சேசு இரத்தம் சிந்தியதற்காக அர்ச்.சூசையப்பர் மனங்கலங்கினார். ஆனால் அவர் உலகை மீட்டு இரட்சிக்க வருவதால் சேசு என்ற பெயரிட்டபோது அளவற்ற இன்பமடைந்தார். இது அவரது மூன்றாவது துன்பமும், சந்தோசமுமாகும். 

அர்ச்.சிமியோன் வரப்போகும் துன்பத்தை முன்னறிவித்தபோது துன்பமடைந்தார். ஆனால் சேசு பலரை மீட்டு இரட்சித்து மோட்சத்தில் சேர்ப்பார் என அர்ச்.சிமியோன் அறிவித்ததைக் கேட்டதும் மகிழ்ந்தார். இது அர்ச்.சூசையப்பர் அனுபவித்த நான்காவது துன்பமும் சந்தோசமுமாகும். 

ஏரோது அரசரின் கொடுமையிலிருந்து சேசுநாதரைக் காப்பாற்றுவதற்காக எகிப்து நாட்டிற்கு அழைத்துச் சென்றபோதும் அவரைக் காப்பாற்றுவதிலும் பெரிதும் துன்பமடைந்தார். ஆனால் அவர்கள் எகிப்து நாட்டிற்குள் நுழைந்ததும் பசாசின் கோவில்களும் பீடங்களும், சிலைகளும் இடிந்து விழுவதைக் கண்ட  அர்ச்.சூசையப்பர் மிகவும் மகிழ்ந்தார். இது அவரது ஐந்தாவது துன்பமும் சந்தோசமுமாகும். 

அர்ச்.சூசையப்பர் எகிப்து நாட்டிலிருந்து வரும்போது யூதேயா நாட்டை ஆட்சி செய்த அற்கெலாவுளஸ் என்ற அரசர் சேசுவுக்கு துன்பம் அளிப்பார் என பயந்து மிகுந்த துன்பம் அடைந்தார். ஆனால் வானதூதர் அறிவுறுத்தியது போல் நாசரேத் என்னும் ஊில் மாமரியன்னை சேசுவுடன் வாழ்ந்தபோது மகிழ்ந்தார். இது அவரது ஆறாவது துன்பமும், சந்தோசமுமாகும் 

அர்ச்.சூசையப்பர், 12 வயதான சேசு காணாமல் போனபோது மிகவும் மனம் வருந்தினார். ஆனால் மூன்றாம் நாள் ஆலயத்தில் மறைவல்லுநர்கள் நடுவில் கண்டபோது மகிழ்ந்தார். இது அவரது ஏழாவது துன்பமும், சந்தோசமுமாகும். 

இந்த ஏழு துன்பங்களையும், சந்தோசங்களையும் தொடர்ந்து ஏழு ஞாயிற்றுக்கிழமைகளில் செபித்து வருபவர்களுக்கு பரிபூரண பலன் கிடைக்கும். அதை அடைய ஒப்புரவு அருட்சாதனம் பெற்று நற்கருணை உட்கொண்டு பாப்பானவருடைய கருத்துக்களுக்காக செபிக்க வேண்டும் 

நமக்கு சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும்போது அகங்காரம் கொள்ளாமல் அவை சர்வேசுரனால் வருகிறதென்று அவரை புகழ வேண்டும். துன்பமான நிகழ்வுகள் நடைபெறும்போது மனம் துவண்டு போகாமல் சர்வேசுனின் சித்தத்தின்படி வருகிறதென்று அவருக்கு கீழ்ப்படியவேண்டும். 

நமக்கு சந்தோசமான துன்பம் வரும்போது அர்ச்.சூசையப்பரைப் போல் எல்லா விதத்திலும் விளங்குவோம். 

புதுமை 

பிளான்டர்ஸ் என்ற நாட்டினை அடுத்த கடலில் ஒரு பெரிய கப்பல் பயணித்தபோது கடும்புயல் வீசியது. கப்பல் நிலை தடுமாறி உடைந்து கடலினுள் அமிழ்ந்தது. அக்கப்பலில் இருந்த சுமார் 200 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களில்  அர்ச்.ஐந்துகாயப் பிரான்சீஸ்கு சபையைச் சார்ந்த இரு துறவிகள் ஒடிந்த கப்பல் பலகையைக் கெட்டியாய்ப் பிடித்து மிதந்து மூன்று நாள் இரவும் பகலும் குடிக்கத் தண்ணீர் இல்லாமலும் சாப்பாடு இல்லாமலும் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவயது முதல் பக்தியோடு அர்ச்.சூசையப்பரிடம் இருந்ததால் இத்தகைய துன்ப வேளையிலும் அவரிடம் வேண்டிக்கொண்டார்கள் 

மூன்றாம் நாள் அர்ச்.சூசையப்பர் ஒரு இளம்வாலிபத் தோற்றத்தில் அவர்கள் இருக்கும் பலகைமேல் தோன்றி, தைரியத்தையும் திறமையையும் அளித்து விரைவில் கரையேறச் செய்தார். அவர்கள் இருவரும் கரைக்கு வந்ததும்  அர்ச்.சூசையப்பருக்கு நன்றி செலுத்தினார்கள். அப்போது அர்ச். சூசையப்பர்  நீங்கள் பக்தியுடன் என்னிடம் செபித்தால் உங்களுக்கு இந்த உதவி கிடைத்தது  இனிமேல் எனது ஏழு துன்பங்களையும் ஏழு சந்தோசங்களையும் தரித்து என்னிடம் செபித்தால் எப்போதும் உங்களிடம் இரக்கமாய் இருப்பேன் என்றார்  அது முதல் அவர்கள்  அர்ச்.சூசையப்பர் செய்த உதவிகள் அனைவருக்கும் கூறியதோடு ஏழு துன்பங்களையும், ஏழு சந்தோசங்களையும் குறித்துச் செய்கிற செபங்களை பிரபல்யப் படுத்தினார்கள் 

கிறிஸ்தவர்களாகிய நாம் முடிந்த அளவு அர்ச்.சூசையப்பருடைய எழு துன்பம், சந்தோசங்களை நினைத்து பக்தியோடு செபித்து, அதற்குரிய பலனைப் பெற்றுக்கொள்வோம். (1 பர, 3அரு, பிதா) 

செபம் 

ஏழு துன்பமும் ஏழு இன்பமும் அனுபவித்த அர்ச்.சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். நாங்கள் இவ்வுலகில் இருக்கும் வரை துன்பமும் இன்பமும் அனுபவிக்க வேண்டியிருப்பதால் இன்பத்தால் அகங்காரம் கொள்ளாமலும் துன்பத்தால் மனம் கலங்காமலும், நாங்கள் பக்தியோடு நடக்க உதவி செய்தருளும். நாங்கள் சேசுவையும் உம்மையும் பின்பற்றி, எங்களது துன்பமாகிய சிலுவையை சுமந்து மோட்சத்துக்குச் செல்லும் புண்ணிய வழியில் நம்பிக்கை, விசுவாசத்தோடும், தாழ்ச்சியோடும், பொறுமை கீழ்ப்படிதலோடும் நடக்க செய்தருளும். உமது ஏழு துன்பங்களையும் ஏழு இன்பங்களையும் பார்த்து உமது பக்தர்களாயிருக்கிற நாங்கள் எப்போதும் உம்மை பக்தியோடு

செபிக்க உதவி செய்தருளும். 

ஆமென். 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

துன்பமும் இன்பமும் அனுபவித்த அர்ச்.சூசையப்பரே! எல்லாவற்றிலும் எங்களுக்கு ஆதரவாக இரும் 

துன்பமும் இன்பமும் அனுபவித்த அர்ச்.சூசையப்பரே!

எல்லாவற்றிலும் எங்களை வழிநடத்தும் 

துன்பமும் இன்பமும் அனுபவித்த அர்ச்.சூசையப்பரரே!

எல்லாவற்றிலும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 

செய்ய வேண்டிய நற்செயல் 

அர்ச்.சூசையப்பரது ஏழு துன்பத்தையும் ஏழு சந்தோசத்தையும் குறித்து ஏழு கர்த்தர் கற்பித்த செபமும், ஏழு மங்கள வார்த்தை செபமும், ஏழு திரித்துவ, ஆராதனையும் சொல்லி செபிப்போம்