ஆகஸ்ட் 28

அர்ச். அகுஸ்தீன் - மேற்றிராணியார் (கி.பி. 430) 

அகுஸ்தீனுடைய தாயார் பெயர் மோனிக்கம்மாள். இவருடைய தந்தை ஒரு அஞ்ஞானி. ஆனால் தன் மனைவியின் வேண்டுதலினால் இவர் சாகிறதற்கு முன் ஞானஸ்நானம் பெற்றார். 

அகுஸ்தீன் புத்திக்கூர்மையுள்ள வாலிபனானதால் சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்று உலக நாட்டமுள்ளவராய் 33 வயது வரையில் ஞானஸ்நானம் பெறாமல் பாவ வழியில் நடந்து பதித வேதத்தைப் பற்றிக்கொண்டார். 

ஆனால் அவருடைய தாயாரான மோனிக் கம்மாள், தன் மகன் பாவ வழியை விட்டு மனந்திரும்பும்படி கண்ணீர் அழுகை யுடன் சர்வேசுரனைப் பார்த்து மன்றாடுவாள். தன் மகனுக்கு நல்ல புத்தி சொல்வாள். அதே கருத்துக்காக வேண்டிக்கொள்ளும்படி குருக்களையும் மேற்றிராணிமாரையும் மன்றாடுவாள். 

அகுஸ்தீன் உத்தியோகத்தினிமித்தம் பிற தேசத்திற்குப் சென்றபோது, தாயும் அவரைப் பின்சென்றாள். அவ்விடத்தில் அகுஸ்தீன் அற்புதமாய் மனந்திரும்பி தன் சொத்துக்களையெல்லாம் பிச்சைக்காரருக்குக் கொடுத்துவிட்டு ஞானஸ்நானம் பெற்றுப் புண்ணிய வழியில் உத்தமமாக நடந்தார். 

இவர் குருப்பட்டம் பெற்று, பிறருடைய ஆத்தும இரட்சண்ய வேலையில் மகா ஊக்கத்துடன் உழைத்தார். இவருடைய அரிதான புண்ணியங்களையும் கடின தபத்தையும் பார்த்து இவருக்கு மேற்றிராணியார் பட்டம் கொடுக்கப்பட்டது. 

இவர் பதிதரை எதிர்த்துத் தர்க்கித்து அநேகரை சத்திய வேத்தில் மனந்திருப்பினார். சிறந்த பல பிரபந்தங்களை எழுதினார். தமது கெட்ட ஜீவியத்தையும் ஒரு புத்தகத்தில் எழுதி விளம்பரப்படுத்தினார். 

இவர் உண்டாக்கிய சபைக் குருக்களால் திருச்சபைக்குக் கணக்கற்ற நன்மை உண்டானது. இடைவிடாமல் தமது பழைய பாவங்களைப்பற்றி நினைத்து அழுது, தவஞ் செய்து, புண்ணிய வழியில் கவனமாய் நடந்து, பிரசங்கத்தாலும் நன்மாதிரிகையாலும் அநேக ஆத்துமங்களைத் மனந்திருப்பினார். 

அவருக்கு 76 வயது நடக்கும்போது புண்ணியவாளராய் உயிர் துறந்து மோட்சத்தில் பிரவேசித்தார்.

யோசனை

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நற்புத்தி சொல்லி நன்னெறியைக் காட்டுவதுடன் அவர்களுக்காக சர்வேசுரனைப் பார்த்து வேண்டிக்கொள்ளவும் வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஹெர்மஸ், வே.