டிசம்பர் 27

அர்ச். அருளப்பர் அப்போஸ்தலர்.

பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் அருளப்பர் வயதில் சிறியவர். இவர் அர்ச். ஸ்நாபக அருளப்பருக்கு சீஷனாகி, பிறகு நமது இரட்சகரைப் பின்சென்றார். யூத குருக்களுடன் இவர் நட்பாயிருந்தார். 

கர்த்தர் தாம் மறுரூபமானபோதும், இரத்த வியர்வை வியர்த்தபோதும், அருளப்பரைத் தம்முடன் அழைத்துப் போயிருந்தார். இவரிடம் விளங்கி வந்த புண்ணியத்தைக் குறித்து, கர்த்தர் இவரை விசேஷ விதமாக நேசித்து, இராப்போசன நேரத்தில் இவர் தமது மார்பில் சாய்ந்திருக்கச் சித்தமானார். 

இதனால் இவரிடத்தில் தேவசிநேகம் அதிகரித்து, கர்த்தர் பாடுபடும்போது மற்ற அப்போஸ்தலர்கள் அவரை விட்டு ஓடிப்போன போதிலும், அருளப்பர் அவர்கூடவே சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தார். தம்மிடம் கையளிக்கப்பட்ட தேவமாதாவை, தம்முடன் அழைத்துக்கொண்டுபோய், அவர்களைக் காப்பாற்றி ஆதரித்தார். 

அருளப்பர் நாடு நாடாய்ச் சுற்றித்திரிந்து, சேசுநாதரைப்பற்றி பிரசங்கித்து, சுவிசேஷத்தை எழுதினார். அக்காலத்திலிருந்த பதிதரைத் தமது பிரசங்கத்தாலும், நிருபத்தாலும் கண்டித்தார். 

இவர் வேதத்திற்காகப் பிடிபட்டு, அதிபதி கட்டளைப்படி கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டார்.  ஆனால், அதில் யாதொரு வேதனையுமின்றி இருப்பதை அதிபதி கண்டு, இவரை பத்மோஸ் என்னும் தீவுக்கு அனுப்பிவிட்டான். அத்தீவில் இவர் காட்சியாகமத்தை எழுதினார். 

மேலும் இவர் ஆங்காங்கே சிதறியிருந்த கிறீஸ்தவர்களை ஒன்றுகூட்டி, சகல புண்ணியங்களிலும் விசேஷமாய்ப் பிறர் சிநேகமென்னும் புண்ணியத்தை அனுசரிக்கும்படி இடைவிடாமல் போதித்து வந்தார். இவர் அநேக புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து வயோதிகராய் உயிர் துறந்து, தாம் பிரமாணிக்கமாய் சேவித்த சர்வேசுரனிடம் போய்ச் சேர்ந்தார். 

யோசனை

நாமும் சர்வேசுரனை சிநேகித்து நமது அயலாரையும் நேசிப்போமாக.