டிசம்பர் 26

அர்ச். ஸ்டீபென் - வேதசாட்சி.

முடியப்பர் என்று சொல்லப்படும் ஸ்டீபென், சேசுநாதருடைய 72 சீஷர்களில் ஒருவர். இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அப்போஸ்தலர்கள் மீது இறங்கியபின், அவர்களுடைய பிரசங்கத்தாலும் அற்புதங்களாலும் எண்ணற்ற பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். 

அக்காலத்து கிறீஸ்தவர்கள் பிறர்சிநேகத்தால் தூண்டப்பட்டு, தங்களுக்குள்ள சொத்துக்களையெல்லாம் அப்போஸ்தலர்கள் கையில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் பகிர்ந்திடுவதைப் பெற்று உயிர் வாழ்ந்து வந்தார்கள். 

ஜெபத்திலும் பிரசங்கத்திலும் ஈடுபட்டிருந்த அப்போஸ்தலர்களுக்கு, இப்படிப்பட்ட வேலை சாத்தியப்படாததினால், ஜனங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழு பேருக்கு அப்போஸ்தலர் டீக்கன் என்னும் பட்டம் கொடுத்து, ஜனங்களுக்கு பணம் பங்கிடும் வேலையை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். 

இந்த ஏழு பேருக்கும் ஸ்டீபென் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தமது வேலையை பிரமாணிக்கமாய் அனுசரித்து, சத்தியவேதத்தை ஊக்கத்துடன் பிரசங்கித்து, அதிசயத்தக்க புதுமைகளைச் செய்து, ஏராளமான மக்களை கிறீஸ்தவர்களாக மாற்றினார். 

இதைக் கண்ட யூதர் கோபங்கொண்டு, இவருடன் வேத தர்க்கம் செய்தும் தாங்கள் தோல்வியடைந்ததால், இவரை யூத சங்கத்திற்கு முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். அங்கேயும் இவர் சேசு கிறீஸ்துநாதருடைய தெய்வீகத்தை வேதாகமங்களைக்கொண்டு தெளிவாய் விவரித்தபோது, இவர் முகம் ஜோதிப்பிரகாசத்தால் ஜொலித்தது. 

மேலே அன்னார்ந்து பார்த்து: இதோ, சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் மனுமகன் நிற்கிறதைப் பார்க்கிறேன் என்றார். இதை அவர்கள் கேட்டு பற்களைக் கடித்துக்கொண்டு, காதுகளை கையால் மூடிக்கொண்டு, இவன் தேவ தூஷணம் சொன்னான் என்று கூறி, இவரை வெளியே இழுத்துக்கொண்டு போய், இவரைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். 

அப்போது இவர் பகைவரின் பாவத்தை மன்னிக்க மன்றாடி: “சேசுவே என் ஆத்துமத்தை ஒப்புக்கொள்ளும்” என்று உச்சரித்து, உயிர் துறந்தார். 

யோசனை

நாம் நமது பகைவர்களை பழிவாங்க நினையாமல் அவர்களுக்காக வேண்டிக்கொள்வோமாக.