அக்டோபர் 27

அர்ச். எலெஸ்பான் - இராஜா (6-ம் யுகம்) 

செங்கடலுக்கு மேற்கிலுள்ள விஸ்தாரமான எத்தியோப்பியா என்னும் தேசத்திற்கு எலெஸ்பான் இராஜாவாயிருந்து பிரஜைகளை நீதி நியாயத்தோடும் அன்போடும், நேசத்தோடும் அரசாண்டு வந்தார். 

இந்த நல்ல இராஜாவின் அரசாட்சியிலிருந்த ஜனங்கள் யாதொரு குறைவின்றி சுகபாக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள். இவர் தன் தேசத்தாரின் உலக நன்மைகளைக் கவனித்து, சத்திய வேதப் பரம்புதலுக்காகவும் உழைத்து சத்திய வேதம் செழித் தோங்கும்படி எல்லா முயற்சியும் செய்தார். 

அரேபியா தேசத்திலுள்ள யூதர்கள் கத்தோலிக்க வேதத்தாரை துன்புறுத்தி அநேகரைக் கொன்று, அதிமேற்றிராணியாரை தேசத்தினின்று துரத்திவிட்டு, தேசாதிபதியையும் கொலை செய்து, அவர்களில் ஒருவனை அத்தேசத்திற்கு அரசனாக ஏற்படுத்தினார்கள். 

உரோமை தேசத்தின் பெரிய ஜுஸ்டின் இராயன் கேட்டுக்கொண்டதின் பேரில் எலெஸ்பான் அரேபியா மேல் படையெடுத்துச் சென்று யூத அரசனை ஜெயித்து, ஒரு கிறீஸ்தவ அராபியனை அரசனாக நியமித்துத் தம் தேசத்திற்குத் திரும்பினார். 

இந்த உத்தம இராஜா எத்தியோப்பியா தேசத்தை சிலகாலம் நீதியோடும் தயவோடும் பரிபாலனஞ் செய்தபின், தன் குமாரர்களில் ஒருவனுக்கு பட்டாபிஷேகம் செய்து தம் இராஜ மகுடத்தை ஜெருசலேம் தேவாலயத்திற்கு அனுப்பி வைத்து, கோணி வஸ்திரத்தை தரித்துக்கொண்டு ஒரு சன்னியாச மடத்திற்குப் போய் ஜெப தபத்தில் தமது ஜீவிய காலத்தை செலவழித்தார். 

இரவில் வெகு நேரம் ஜெப தியானத்தில் கழிப்பார். காய்ந்த ரொட்டியும் கீரையும் அவருக்கு உணவாகும். மற்ற சன்னியாசிகளைப் போல் மடத்திலுள்ள சகல வேலைகளையுஞ் செய்வார். 

இடைவிடாமல் சர்வேசுரனோடு ஒன்றித்து அவருடன் சம்பாஷித்து சகல புண்ணியங்களையும் ஒழுங்காய் அனுசரித்து பாக்கியமான மரணத்தை அடைந்து மோட்சப் பிரவேசமானார்.

யோசனை

நாமும் இந்த நல்ல இராஜாவைப் பின்பற்றி, பிறர்சிநேகம், தேவ சிநேகமாகிற சிறந்த புண்ணியங்களை அனுசரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பருமன்சியுஸ், மே.
அர்ச். அப்பான், ம.