அக்டோபர் 26

அர்ச். லூசியானும் மார்சியானும் - வேதசாட்சிகள் (கி.பி. 250)

லூசியானும் மார்சியானும் அஞ்ஞானிகளானதால் பில்லிசூனியம் முதலிய மாய வித்தைகளைக் கற்றுக்கொண்டு அநேக பாவ அக்கிரமங்களைக் கட்டிக் கொண்டு வந்தார்கள். 

ஒருநாள் இவ்விருவரும் ஒரு கிறீஸ்தவப் பெண்ணின் மீது துர் இச்சை கொண்டு, அவளைப் பாவத்தில் இழுக்கும்படி அவளுக்கு பில்லி சூனியம் வைத்தார்கள். 

அந்த ஸ்தீரிக்கு சிறிதளவும் கேடு வராததுடன் அவள் தன்மேல் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டபோது, பசாசு அவளை விட்டு ஓடிப்போனதை அவ்விரு மாய வித்தைக்காரரும் கண்டு அதிசயித்து, அன்றே தங்கள் துஷ்ட வேலையை விட்டுவிட்டு, தங்களிடமிருந்த பில்லி சூனியத்திற்குரிய புத்தகங்கள் முதலிய சாமான்களை நெருப்பில் போட்டுச் சுட்டெரித்து விட்டு, சத்திய வேதம் கேட்டு, ஞானஸ்நானம் பெற்றார்கள். 

அது வரையிலும் அவர்கள் கட்டிக்கொண்ட பாவாக்கிரமங்களுக்குத் தபம் புரிய தீர்மானித்து, ஓர் ஏகாந்த இடத்தில் ஒதுங்கி, ஜெபதபம், ஒருசந்தி முதலிய புண்ணியக் காரியங்களை நடத்தி வந்தார்கள். 

மேலும் அவ்வப்பொழுது அவர்கள் நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமையான பிரசங்கத்தால் அநேக அஞ்ஞானிகளை மனந் திருப்பினார்கள். இதைப்பற்றி கேள்விப்பட்ட அதிபதி அவ்விருவரையும் பிடித்து சிறையிலடைத்து உபாதித்தும், அவர்கள் சத்திய வேதத்தில் தளராத தைரியத்துடன் இருப்பதைக்கண்டு, அவர்களை நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி கட்டளையிட்டான். 

அதற்கு வேதசாட்சிகள் மறுமொழியாக நாங்கள் அஞ்ஞானிகளாயிருக்கையில் பில்லிசூனியம் வைத்து அநேக பாவாக்கிரமங்களை செய்த போது எங்களுக்கு அரசாங்கத்தால் ஒரு தீமையும் உண்டாகவில்லை, இப்போது சத்திய தேவனை ஆராதித்து நல்வழியில் நடக்கும் எங்களை துஷ்டராகப் பாவித்து தண்டிப்பது எப்பேர்ப்பட்ட அநீதி என்று உரைத்து வேதத்திற்காக நெருப்பில் வெந்து மோட்ச முடியைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

யோசனை 

நாமும் நமது இருதயத்திலுண்டாகும் ஞான ஏவுதலுக்கு செவி சாய்த்து, பாவத்தை விட்டு தர்ம வழியில் நடப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எவரிஸ்துஸ், பா.வே..