இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 27

அர்ச்.சூசையப்பர் பூவுலகில் மகிமையும் அதிகாரமும் அடைந்ததை தியானிப்போம்.

தியானம் 

எகிப்து நாட்டின் பழைய ஏற்பாட்டு அரசரான பாரவோன் பழைய ஏற்பாட்டு சூசையின் விவேகத்தைக் கண்டு தமக்கு முதல் மந்திரியாக வைத்து, அவருக்கு தனது அரண்மனையில் சகல அதிகாரத்தையும் கொடுத்தார். பின்பு அனைவரும் அவரை வணங்கவும் அவரது சொற்படி கேட்கவும் கட்டளையிட்டு எல்லா இடங்களிலும் அவரை மன்னர் மகிமைப்படுத்தினார். பின்னர் நாட்டில் பஞ்சம் தலைதூக்கி மக்கள் துன்பம் அடைந்து மன்னரிடம் முறையிட்டனர். அதற்கு மன்னர், சூசையிடம்  செல்லுங்கள் அவர் எதைச் சொல்வாரோ அதைச் செய்யுங்கள்" என்றார் 

அதுபோல சர்வேசுரன் தனது திருமகனையும் அவரது திருத்தாயாரான மாமரியன்னையையும்  அர்ச்.சூசையப்பரின் பொறுப்பில் ஒப்படைத்தார். மேலும் பாரவோன் அரசர் தன்னுடைய அரசில் சகல அதிகாரத்தையும் சூசைக்கு கொடுத்ததுபோல சர்வேசுரன்  அர்ச்.சூசையப்பருக்கு மோட்சத்திலும் பூவுலகிலும் சகல அதிகாரத்தையும் வழங்கினார் பழய சூசையப்பர் தனது விவேகத்தால் வறுமையிலிருந்து அம்மக்களைக் காப்பாற்றியதால் உலக இரட்சகரென்று அழைக்கப்பட்டார். அதுபோல் நமது அர்ச்.சூசையப்பர் உலக இரட்சகரை பாதுகாத்து இவ்வுலகை மீட்டு இரட்சிக்கச் செய்தார் என  அர்ச்.பெர்நார்தூஸ் விளக்கியுள்ளார் 

பாரவோன் அரசன் துன்பப்பட்டவர்களை சூசையிடம் போய் அவர் சொல்லும்படி செய்யுங்கள் என்றதுபோல் சர்வேசுரனும் தனது மக்களை  அர்ச்.சூசையப்பரிடம் செல்லுங்கள் என சொல்ல வேண்டும் என வேதவல்லுநர்கள் விரும்புகின்றனர் 

தொடக்க திருச்சபையில் புகழ்பெற்ற அர்ச்சியஷ்டவர்களான அகுஸ்தீனூஸ், ஏரோணிமூஸ், கிறிசொஸ்தோமூஸ், இலாரியூஸ் போன்றவர்கள் தங்களது இறைப்புகழ்பரப்பும் நூல்களில்  அர்ச்.சூசையப்பரை புகழ்ந்துள்ளனர் 

மேலும் அர்ச்.சூசையப்பரின் அடைக்கலத்தை தேடி அவருடைய உதவியை மன்றாடிக் கேட்டவர்கள் அதனை அடையாமல் போனதில்லை என்பதால் பெருநகரங்களிலும் ஊர்களிலும் அர்ச்.சூசையப்பரை பாதுகாவலாக கொண்டுள்ளனர். மேலும் துறவற, கன்னியர் இல்லங்களிலும் அர்ச்.சூசையப்பர் அடைக்கலத்தை நாடு பக்தி இணக்கத்துடன் வணங்கி வருகின்றது கிறிஸ்தவர்களாகிய நாம் அர்ச்.சூசையப்பரிடம் அதிக பக்தி விசுவாசம் வைக்கவேண்டும். துன்பப்படுகிறவர்களெல்லாம் அர்ச்.சூசையப்பரின் உதவியையும், ஞானத்தையும் வேண்டிப்பெற்றுக்

கொள்ளவேண்டும். பாவச் செயல்களை விட்டு விலகி புண்ணிய

வழிகளில் நடந்து, தான தர்மங்கள் செய்து, செபவாழ்க்கை வாழ்ந்து

தத்தம் கடைமைகளை சரிவர செய்து அர்ச்.சூசையப்பரின் அருளைப்

பெறவேண்டும். 

நமது நோய்கள் குணமடையவும், அநீதி ஒழிந்து நீதி கிடைக்கவும், வாணிபம் சிறக்கவும், வாழ்வு வளமடையவும், திருமணங்கள் தடையில்லாமல் நடைபெறவும், கடன் தொல்லைகள் மறையவும், வீடுகளில் வறுமை நுழையாமல் இருக்கவும் நாம் அர்ச்.சூசையப்பரின் அருள் ஆசியை இறைஞ்சி கேட்டு வாழ்வை அவரது அடைக்கலத்தில் ஒப்படைப்போம் 

புதுமை 

திருச்சபையில் துறவிகளும் கன்னியர்களும் மாட்சியுடன் இருப்பதுமல்லாமல் பிறர் நன்னெறியில் நடக்க வழிகாட்டுகிறார்கள். அதனால் அவர்களை பசாசு வெறுத்து அவர்களது மரியாதையை இழக்கச் செய்கிறது. அதனால் அவர்களில் அனேகர் அர்ச்.சூசையப்பரின் ஆதரவைத் தேடி பசாசின் ஆளுகையை முறியடித்து தாங்கள் நினைத்த நல்ல செயல்களை செய்தார்கள். 

1835-ஆம் ஆண்டு மாற்கூஸ் என்ற இளைஞன் சேசு சபையில் சேர விரும்பினான். தாயானவள் சம்மதம் தெரிவிக்க, தந்தை மறுத்தார். மறுத்ததோடு மகனை தன்னோடு தங்க வைத்துக்கொள்ள பலவாறு திட்டமிட்டார். "மகனே நீ என்னை விட்டுச் சென்றால் துன்பத்தில் நான் இறப்பேன். உன் தந்தையைக் கொன்ற பிறகு நீ துறவியாய் இருப்பது சரியாகுமா" என்று அழுது கொண்டே மகனிடம் கூறுவார். இத்தகு வேளைகளில் மாற்கூஸ் அர்ச்.சூசையப்பரின் மீது நம்பிக்கை வைத்து தான் விரும்பியதை அடைய தந்தை உத்தரவளிக்க செய்ய வேண்டுமென்று இடையறாது மன்றாடினான். ஒரு ஆண்டுக்குப் பின்னர் தந்தை உத்தரவு அளித்தபோதும் மகன் தன்னை விட்டுச் சென்றான் என்ற கவலையினால் இறந்துபோனார். மாற்கூஸ் சேசுசபையில் சேர்ந்து ஆயத்தமடத்துக்கு அனுப்பப்பட்டு அதன் ஒழுங்குகளை கடைப்பிடிக்க துவங்கியிருந்தான். ஆனால் அவன் அச்சபையில் சேர்ந்து நாலைந்து மாதங்களுக்குப்பின் அவனுக்கு நெஞ்சுவலியும் வயிற்றுவலியும் வந்து, உடல் மெலிந்து பலவீனமடைந்தது. துறவியர் இல்லத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை சரிவர அனுசரிக்காததால் தலைமை துறவி அவனை வீட்டிற்கு அனுப்ப தீர்மானித்தார் 

மாற்கூஸ் இதனைக் கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்தி, "நான் துறவியர் இல்லம் வந்தது  அர்ச்.சூசையப்பரின் அருளால்தான். நான் மீண்டும் சரியாவேன் என நம்புகிறேன். அர்ச். சூசையப்பர் திருநாள் வரும்வரை பொறுத்துக்கொள்ளுங்கள். அப்போது நான் குணமடையாவிட்டால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்றாள் 

அவரும் சம்மதித்தார். மாற்கூஸ் மிகவும் பக்தியோடு செபித்து வந்தான், அர்ச். சூசையப்பர் திருநாளன்று திவ்வியநற்கருணை ஆசீர்வாதம் வழங்கும் நேரத்தில் அவன் பூரண குணமடைந்து வலுப்பெற்றான். அதிலிருந்து அவன் மற்ற துறளிகளைப்போல் கடந்து குறிப்பிட்ட நாளில் குருப்பட்டம் பற்று மடகாஸ்கர் என்னும் தீவுக்கு நற்செய்தியைப் போதிக்க அனுப்பப்பட்டார். அங்கு மிகுந்த சுறுசுறுப்போடு சர்வேசுரனுக்கு ஊழியம் செய்துவந்தார். 

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது ஆன்மீக வாழ்வுக்காக  அர்ச்.சூசையப்பரின் ஆதரவைத் தேடி மன்றாடுவோம் 

(1பர, 3அரு, பிதா) 

செபம் 

பூவுலகில் உன்னத மகிமையும் மேலான அதிகாரமும் உள்ள தந்தையாகிய அர்ச். சூசையப்பரே! உம்மை வணங்கிப் புகழ்கிறோம். பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய தமத்திருத்துவ கடவுள் தமது ஞான வரங்களை உமது கரங்களில் வைத்திருப்பதால் உம்மை நம்பினோர்க்கு உதவி வருகிறீர். உம்மை நம்பி மன்றாடியவர்களில் ஒருவரும் பலன் அடையாமல் இருந்ததில்லை என அர்ச். தெரசம்மாள் கூறியுள்ளார். வறுமையில் வாடுவோருக்கு உணவும், உடையும், நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும், துன்பப் படுகிறவர்களுக்கு தேற்றரவையும், பலவீனருக்குத் தைரியத்தையும், எல்லோருக்கும் பொறுமையையும் எங்களுக்கு இறை அன்பையும் அளித்தருளும். உம்முடைய மகிமை அதிகாரத்தைப் பார்த்து, உமது பிள்ளைகளாயிருக்கிற எங்களுக்கு உமது பேரில் மாறாத நம்பிக்கையைக் கொடுத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென். 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

இவ்வுலகத்திலே உன்னதமான மகிமையை அடைந்த  அர்ச்.சூசையப்பரே! உமக்குப் புகழ் 

எல்லோருக்கும் உதவி செய்ய வல்லமை படைத்த  அர்ச்.சூசையப்பரே! உமக்குப் புகழ் 

உமது ஏழைப்பின்ளைகளாகிய எங்களது தந்தையாகிய அர்ச்.சூசையப்பரே! எங்களைக் காப்பாற்றும் 

செய்ய வேண்டிய நற்செயல் 

ஒரு ஏழைக்கு உடை அளிப்பது அல்லது அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளை அளிப்பது,