அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 25

அர்ச்.சூசையப்பர் மகிமைப்படுத்தப்பட்டதை தியானிப்போம் 

தியானம் 

அர்ச்.சூசையப்பர் நன்மரணம் அடைந்து அவருடைய ஆன்மா சர்வேசுரனிடம் சென்று சேர்ந்தபோது அவரது திருஉடல் பக்தியாய் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. மூன்று வருடமாக சேசுகிறிஸ்து இறந்து உயிர்த்தெழுந்த நாள் வரையில் அவரது உடல் அழியாமல் கல்லறையில் இருந்தது. சேசுநாதர் உயிர்த்தெழுந்ததும்  அர்ச்.சூசையப்பரின் ஆன்மா அவரது உடலுடன் சேர்ந்து  உயிர்த்தெழப்பட்டார் என தூயவர்களும், மறைநூல் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர். சேசு உயிர்த்தெழுந்த பிறகு 40 நாட்கள் தனது அப்போஸ்தலர்கள், சீடர்களோடு இருந்தபோது கூடவே அர்ச்.சூசையப்பரும் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் சேசு மோட்சத்திற்கு எழுந்தருளி சென்றபோது  அர்ச்.சூசையப்பரையும் தம்மோடு அழைத்துச்சென்றார் என்பதில் சந்தேகமில்லை. மற்ற அர்ச்சியஷ்டவர்களைவிட  அர்ச்.சூசையப்பர் மிகவும் பிரகாசமாய் இருந்ததாக வானதூதர்கள் உணர்ந்தார்கள். வானுலகில் உள்ளோர், "உலகத்தைப் படைத்து இரட்சித்த சேசுவை வளர்த்த தந்தை இவர்தான்" என்றனர். அப்படி சொல்லும்போது வானுலகில் உள்ளவர்கள் அர்ச்.சூசையப்பரை வணங்கி வாழ்த்தி சர்வேசுரனை புகழ்வார்கள் 

சேசு தனது மோட்ச தந்தையின் வலது பக்கத்தில் அமர்ந்தபின் மாமரியன்னைக்கு குறிக்கப்பட்ட இருக்கைக்கு கீழாக சகல மோட்சவாசிகளுக்கு மேலாக உள்ள இருக்கையில் அர்ச்.சூசையப்பரை அமரச் செய்து, "நமது நித்திய பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே வாரும் நம்மை வளர்த்த தந்தையே! நீர் பேறுபெற்ற அரசை அனுபவிக்க வாரும், நாம் பூவுலகில் இருக்கும்போது எனக்கு உணவும் உடையும் அளித்தீரே, நான் ஏழையாக இருந்தபோது உமது வீட்டில் வைத்து காப்பாற்றினீரே, எனக்காக பல துன்பங்களை அனுபவித்தீரே. இப்போது என் அரசு உமது அரசுதான், எனது எல்லா புகழும் உம்முடையதுதான், நீர் என்றென்றும் என்னிடத்தில் வாழ்வீர்" என சேசு கூறியதாக ஜேர் சோனியூஸ் என்ற மறைநூல் அறிஞர் கூறியுள்ளார் 

அர்ச்.சூசையப்பர் பூவுலகில் வளர்ப்பு தந்தையாகவும் மாமரியன்னைக்கு பரிசுத்த பத்தாவாகவும் இருந்ததால் அவருக்கு வானுலகில் மிகவும் உயர்ந்த அந்தஸ்து அளிக்கப்பட்டது. அதற்கிணையான அந்தஸ்து வேறு ஒருவருக்கும் அளிக்கப்படவில்லை 

அர்ச்.சூசையப்பருக்கும் சர்வேசுரன் அளித்த மேலான வரங்களை அறிந்துகொண்ட நாமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். அவருடைய திருநாட்களை சிறப்பாய் கொண்டாடி, அவரது பெயரால் எழுப்பப்பட்ட ஆலயங்களை வணங்கி, அவரது திருஉருவம் மற்றும் படங்களை பக்தியாய் வைத்து, அவர் பெயரால் தானதர்மங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்வது மாமரியன்னைக்கும் சேசுவுக்கும் ஏற்புடையதாய் இருக்கும் 

அர்ச்.சூசையப்பர் சேசுவுக்கு உணவும், உடையும், அன்பும் அளித்ததால் அவருக்கு மகிமை கிடைத்தது. சேசு இது குறித்து நீங்கள் என்னைக் குறித்து ஏழைகளாகிய என் சகோதரர்களில் ஒருவனுக்கு செய்வதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாய் கூறுகிறேன்" என்று கூறியுள்ளார் 

நாம் பூமியில் செய்த புண்ணியங்களுக்கு தகுந்தவாறு மோட்சத்தில் நீதியரசர் நமக்கு மகிமை அளிப்பார் 

புதுமை 

இஸ்பானியா நாட்டில்  அர்ச்.சூசையப்பருக்கு அதிக பக்தியும் மரியாதையும் மக்கள் செலுத்திவந்தனர். பல கோயில்கள் அவர் பெயரால் கட்டப்பட்டிருந்தது. காடுகளிலும் மக்கள் செல்லும் வழிகளிலும் சிறு செக்கூடங்கள் அவர் பெயரால் நிறுவப்பட்டிருந்தது. வழிப்போக்கர்கள் அக்கோவில்களில் தங்கி அர்ச்.சூசையப்பரைக் குறித்து சிறு செபங்கள் செபித்து காணிக்கையும் இட்டு தங்கள் பயணம் நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வது வழக்கம் 

தோலேது நாட்டில் இரு பக்தியுள்ள இளைஞர்கள் பள்ளி விடுமுறைக்காக தங்கள் பெற்றோரைப் பார்க்கச் சென்றனர். அடர்ந்த காடுவழியே செல்கையில் வானம் இருண்டு கடுங்காற்றும் இடி மின்னலுடன் பெருமழை பெய்தது. அப்போது அவர்கள் அருகிலே மூன்று முறை இடி விழுந்தது. அவர்கள் தங்களை காத்துக்கொள்ள பாதையோரமாக அமைந்த அர்ச்.சூசையப்பரின் சிறு செய்கூடத்திற்குள் நுழைய விரும்பி வழியெல்லாம் அர்ச்.சூசையப்பரே எங்களை இரட்சியும் என திரும்ப திரும்பச் சொல்லி பாதுகாப்பாக செபகூடத்தினுள் சென்று சேர்ந்தனர். உடனே அவரது பீடத்தின் முன் முழந்தாள்படியிட்டு நன்றி செலுத்தினர் எங்களை காப்பாற்றிய அர்ச்.சூசையப்பரே எங்களை காப்பாற்றினவரே, நாங்கள் சாகுமளவும் இதே நாளில் உமது ஆலயம் வருவோம் என வேண்டிக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்துவந்ததால் அவர்களுக்கு நண்மரணம் கிடைத்தது 

கிறிஸ்தவர்களாகிய நாம் நமது உடலுக்கோ, ஆன்மாவுக்கோ நேரிடும்

ஆபத்துகளில் அர்ச்.சூசையப்பரின் உதவியை   நம்பிக்கையோடு தேடுவோம்       

(1பர, 3அரு, பிதா)

செபம் 

சேசுவின் அருளால் உடலோடும் ஆன்மாவோடும் உயிர்த்தெழுந்து மோட்சத்திற்கு எழுந்தருளிய மகிமைக்குரிய பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே/ உம்மை வணங்கி புகழ்கிறோம். நாங்கள் எங்களுக்கு வரும் துன்பங்களால் துவண்டுபோகாமல் நமக்கு வரப்போகும் மோட்ச இன்பத் நினைத்து நடக்க செய்தருளும். நித்திய இன்பத்தை அனுபவித்துவரும் நீர் உமது பிள்ளைகள் துன்பம் அனுபவிப்பதை மறக்கமாட்டீரே. உலகம், பசாசு, உடல் இம்மூன்றும் எங்களுக்கு சோதனை தரும்போது உம்மிடம் அடைக்கலமாக வரச்செய்தருளும். 

ஆமென் 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

மிகவும் மகிமையுடன் போற்றப்படும் அர்ச்.சூசையப்பரே! உமக்கு புகழ் 

சகல மோட்சவாசிகளுக்கும் மேற்பட்ட அர்ச்.சூசையப்பரே உமக்கு புகழ் 

எங்களுக்கு தந்தையாகிய  அர்ச்.சூசையப்பரே உம்மை அனைவரும் வணங்குவார்களாக! 

செய்ய வேண்டிய நற்செயல் 

உத்தரிக்கிற ஸ்தலத்தில் துன்பப்படுகிற ஆன்மாக்களுக்காக திருப்பலி நிறைவேற்ற செய்வது அல்லது திருப்பலி ஓப்புக்கொடுப்பது