மே 25

அர்ச். பாட்சி மரிய மதலேனம்மாள். கன்னிகை (கி.பி. 1607)

உத்தம் கோத்திரத்தினின்று பிறந்த இப்புண்ணியவதிக்கு கத்தரினாள் என்னும் பெயரிடப்பட்டது. இவள் சிறு குழந்தையாய் இருக்கும்போதே திருமந்திரங்களைப் படிக்கத் தொடங்கி அதை அவள் அடிக்கடி சொல்வதுடன் தன் வயதுள்ள சிறுவருக்கும் அவைகளைப் படிப்பிப்பாள்.

வயது அதிகரிக்க அதிகரிக்க இவள் புண்ணிய வாழ்வில் விருத்தியடைந்து வந்தாள். தனக்குத் தெரிந்த ஞானோபதேசத்தை சிறு பிள்ளைகளுக்குக் கற்பிப்பாள். ஏழைகள் மட்டில் அன்பு கூர்ந்து தனக்குக் கொடுக்கப்படும் தின்பண்டங்களை ஏழைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பாள்.

கர்த்தருடைய பாடுகளைப்பற்றி அடிக்கடி நினைத்து கண்ணீர் சொரிவாள். முட்களை முடிபோல் பின்னி தன் தலையில் வைத்துக்கொண்டு நித்திரை செய்வாள். பெற்றோருடைய உத்தரவு பெற்று கன்னியர் மடத்தில் பிரவேசித்து மரிய மதலேன் என்னும் பெயரை வைத்துக் கொண்டு புண்ணிய வழியில் சிறந்து வாழ்ந்து வந்தாள்.

நாள்தோறும் ஒருசந்தி பிடித்து கடுந்தவம் புரிவாள். நன்மை வாங்கியபின் பரவசமாவாள். மயிர்ச் சட்டையைத் தரித்து தன் சரீரத்தை அடக்கி ஒறுத்தல் செய்வாள்.

இவளைச் சோதிக்கும்படி சர்வேசுரன் பல தந்திர சோதனைகளை இவளுக்கு வர அனுமதித்ததால், மனச் சந்தோஷமின்றி, மன வறட்சியால் பீடிக்கப்பட்டாள். அவலட்சணத்திற்குரிய காம சோதனையால் இடைவிடாமல் சோதிக்கப்பட்டாள்.

ஆனால் ஜெப தபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் இவற்றையெல்லாம் ஜெயித்து அநேக வருடங்களுக்குப்பின் ஞான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அடைந்து, சகலப் புண்ணியங்களையும் வெகு நுணுக்கமாய் அனுசரித்து அஞ்ஞானிகள் பதிதர் முதலியவர்களுக்காக இடைவிடாமல் ஜெபித்து தன் 41-ம் வயதில் இவ்வுலகை விட்டுத் தன் சொந்த வீடான மோட்ச இராச்சியம் போய்ச் சேர்ந்தாள்.

யோசனை 

நாமும் சிறுவர்களுக்கும் படிப்பில்லாதவர்களுக்கும் வேத விஷயங்களைப் படிப்பிப்போமாக.


இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஊர்பன், கு.வே.
அர்ச். அல்தெலம், மே.
அர்ச். 7-ம் கிரகோரியார், பா.
அர்ச். மாக்சிமுஸும் துணை. வே.