ஏப்ரல் 24

அர்ச். பிதேலிஸ். வேதசாட்சி (கி.பி. 1622) 

இவர் ஜெர்மனி தேசத்தில் பிறந்து, கல்வி சாஸ்திரங்களில் தேர்ந்து மகா சாமர்த்தியத்துடன் நீதி ஸ்தலத்தில் வழக்கறிஞர் உத்தியோகத்தை நடத்தி வந்தார்.

இவர் தேவ பக்தனாயிருந்தபடியால் நாள்தோறும் பூசை கண்டு, அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்குவார்.

ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி பல விதத்திலும் அவர்களுக்கு உதவிடுவார்.

மயிர்ச் சட்டை தரித்து ஜெபத்தில் வெகு நேரம் செலவிடுவார். இவருக்கு உத்தம தனத்தின்மீது அதிக ஆசையுண்டாகி உலகத்தைத் துறந்து பிரான்சீஸ்கு சபையில் சேர்ந்தார். அடிக்கடி கண்ணீருடன் ஜெபிப்பார்.

தம்மைக் குரூரமாய் அடித்துக்கொள்வார். இவர் மடத்தின் சிரேஷ்டராயிருக்கும்போதுகூட தாழ்மை யான வேலையைத் தேடி சந்தோஷமாய்ச் செய்வார்.

ஆத்துமாக்களை இரட்சிப் பதில் இவருக்கிருந்த ஆவலால் சிரேஷ்டருடைய உத்தரவுடன் கல்வின் பதிதர் மிகுந்திருந்த சுவிட்சர்லாந்து தேசத்திற்குப் போய் உருக்கமான பிரசங்கங்க ளாலும் வேத தர்க்கங்களாலும் விசேஷமாக பக்தியுள்ள ஜெபத்தாலும் கடுந் தபத்தாலும் அநேகப் பதிதரைச் சத்திய வேதத்தில் சேர்த்தார்.

இதனால் பதிதர் அவரைப் பகைத்துக் கொல்ல எத்தனித்தார்கள்.

பிரயாணஞ் செய்யும்போது இவரை ஒரு பதிதன் துப்பாக்கியால் சுட, புதுமையாய்த் தப்பித்துக்கொண்டார்.

மற்றொரு முறை இவர் இரவில் நடந்து போகையில் 20 பதிதரும் அவர்க ளுடைய பாதிரியாரும் இவரை ஆயுதங்களுடன் சூழ்ந்துகொண்டு தங்கள் மதத்தைக் பின்பற்றும்படி அவரை மிரட்ட, அவர் அதைச் சட்டை செய்யாமலிருப்பதைக் கண்டு, அவர்கள் அவரைக் குரூரமாய் உபாதித்துக் கொலை செய்தார்கள்.

ஆயினும் பதித பாதிரியார் சில காலத்திற்குப்பின் சத்திய வேதத்தில் சேர்ந்தார்.

பிதேலிஸ் இறந்த 6 மாதங்களுக்குப்பின் அவருடைய கல்லறையைத் திறந்து பார்த்தபோது அவருடைய சரீரம் அழியாமலிருந்தது.

யோசனை 

துறவறத்தார் மாத்திரமல்ல, இல்லறத்தாரும் தங்கள் ஆத்துமம், சரீரத்தை அடக்கி ஒறுத்து தவம் புரிய வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மில்லிதுஸ், அதிமே.
அர்ச். போனாவும் தோதாவும், க.