ஏப்ரல் 23

அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303) 

ஜியார்ஜ் என்பவர் சிறந்த கோத்திரத்தாராய் இருந்தமையால், இவரது தந்தை இறந்தபின் இவர் திரண்ட சொத்துக்களுக்கு உரிமையுடையவரானார்.

இவர் சுபாவத்தில் தைரியமும் பராக்கிரசாலியுமானதால் இராயனுடை படையில் சேர்ந்து உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றார்.

சகலராலும் பயந்து அஞ்சப் பட்ட துஷ்ட மிருகங்களைக் கொன்றார். இவருடைய தளராத தைரியத்தைக் கண்ட தியெக்லேசியன் இராயன் இவர் மட்டில் அதிகப் பிரியம் கொண்டு இவரை ஒரு படைக்குத் தலைவராக நியமித்தான்.

உத்தம கிறீஸ்தவரான ஜியார்ஜ் பல விதத்திலும் கிறிஸ்தவர்களுக்கு உதவிபுரிந்து வந்தார்.

இராயன் கிறீஸ்த வர்களை வேதத்தினிமித்தம் உபாதிக்கத் தொடங்கியபோது, ஜியார்ஜ் அவனது குரூர செய்கையைக் கண்டித்தார்.

இதையறிந்த இராயன் கோப் ஆத்திரம் கொண்டு அவரைச் சிறைச்சாலையில் அடைத்து பலவகையில் உபாதித்தும் அவர் வேதத்தை விடாததினால், அவரை பொய்த் தேவர்களுடைய கோவிலுக்கு அனுப்பி, அச்சிலைகளை வணங்கும்படி கட்டளையிட்டான்.

அர்ச்சியசிஷ்டவர் அங்குச் சென்று ஒரு பெரிய சிலையை நோக்கி, நீ கடவுளா என்று கேட்டபோது, அதிலிருந்த பசாசு: நான் கடவுளல்ல, நீர் ஆராதிக்கும் ஆண்டவரே சத்தியக் கடவுள் என்று கூறியது.

உடனே ஜியார்ஜ் தம்மேல் சிலுவை வரைந்த அக்கனமே அங்குள்ள விக்கிரகங்கள் கீழே விழுந்து உடைந்ததுடன், அங்கு இருந்த பேய்கள் பெரும் கூச்சலுடன் வெளியே சென்றன.

பிறகு அவரை மாய வித்தைக்காரனென்று அரசன் பிதற்றி அவரை சிரச்சேதம் செய்வித்தான்.

இவரை அநேக தேசத்தாரும் விசேஷமாக இங்கிலாந்து தேசத்தாரும் தங்கள் முக்கிய பாதுகாவலராகத் தெரிந்துகொண்டார்கள்.

யோசனை

நாமும் நமது சரீரச் சத்துருக்களை அல்ல, ஆனால் ஆத்தும் சத்துருக்களைத் தைரியத்துடன் எதிர்ப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அடல்பெர்ட், மே.
அர்ச். ஜெரார்ட், மே.
அர்ச். இபார், மே.