ஜுலை 23

அர்ச். அப்பொல்லினாரிஸ் - வேதசாட்சி (1-ம் யுகம்) 

அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் உரோமையில் வேதம் போதித்த காலத்தில், அப்பொல்லினாரிஸ் என்பவர் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று உத்தம கிறீஸ்தவனாக நடந்து வந்தார். இவருடைய புண்ணியங்களை அறிந்த அர்ச். இராயப்பர் அவருக்கு மேற்றிராணியார் பட்டம் கொடுத்தார். 

அப்பொல்லினாரிஸ் ரவேன்னா நகருக்குச் சென்று எவ்வளவு மன ஊக்கத்துடன் வேதம் போதித்தாரெனில், இவருடைய முயற்சியால் அநேக மக்கள் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். இதைக் கண்ட பூசாரிகள் ஜனங்களை அவர் மேல் ஏவி விட்டதினால், அஞ்ஞானிகள் அவரை நிஷ்டூரமாய் அடித்தார்கள். 

வேதசாட்சி அதைப் பொருட்படுத்தாமல் முன் போலவே வேதம் போதிக்க ஆரம்பித்து, தேவ உதவியால் ஊமைகளுக்குப் பேசும் சக்தியையும், ஆவேசமானவர்களுக்கு சுகமும், இறந்தவர்களுக்கு உயிரும் கொடுத்ததைக் கண்ட பொய் மதத்தார் அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள். 

அதிபதி அப்பொல்லினாரிஸை வரவழைத்து கிறிஸ்தவ வேதத்தைப் போதிக்கக் கூடாது என்று கட்டளையிட்டும், அவர் கேட்காததினால் அவரைக் கொடூரமாய் அடித்து நெருப்பின் மேல் போட்டும் அவர் சாகாமலிருப்பதைக் கண்டவர்கள் அதிசயித்து சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். 

இதனால் அதிபதியும் மற்ற அஞ்ஞானிகளும் கோப வெறிகொண்டு, வேதசாட்சியை சித்திரவதைப்படுத்தி, பலமுறை பரதேசத்திற்கு அனுப்பி, சிறையிலடைத்து உபாதித்தும், அவர் வேதத்தை விடாமல் அதில் உறுதியாய் இருந்ததினால் அவரை ஈட்டியால் குத்தி சாகடித்தார்கள்.

யோசனை 

நாம் நமது போதனையால் பிறரைச் சத்திய வேதத்தில் திருப்பாவிடினும் நமது நல்லொழுக்கத்தால் அவர்களுக்குப் போதிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். லிபோரியுஸ், து.