ஜுலை 22

அர்ச். மரிய மதலேனம்மாள்.

ஒரு பாவி என்று சுவிசேஷத்தில் கூறப்பட்டிருக்கும் ஸ்திரீ மரிய மதலேனம்மாள்தான். இவள் பாவ வழியில் நடந்து அநேகருக்குத் துன்மாதிரிகை வருவித்தாள். 

கர்த்தருடைய புத்திப் பிரசங்கங்களைக் கேட்டு, அவருடைய அற்புதங்களைக் கண்ட மரிய மதலேனம்மாள் தன் கணக்கற்ற பாவ அக்கிரமங்களுக்காக உத்தம மனஸ்தாபப்பட்டு ஒரு பரிசேயரின் வீட்டில் விருந்துண்டுக் கொண்டிருந்த நமது கர்த்தரை அணுகி, அவருடைய பாதத்தில் விழுந்து, தான் கொண்டுவந்திருந்த விலையுயர்ந்த பரிமளத் தைலத்தால் அபிஷேகம் செய்து, தன் கூந்தலால் துடைத்து கண்ணீர் சிந்தி அழுதாள். 

நல்ல ஆயனான கர்த்தர் அவளுக்குப் பாவப் பொறுத்தல் அளித்தார். இதற்குப் பின் மரிய மதலேனம்மாள் தன் பாவ வழியை முற்றிலும் விட்டொழித்து, கர்த்தருடன் சென்று அவருக்குப் பணிவிடை செய்து வந்தாள். அவர் சிலுவையில் உயிர் விடும்போது சிலுவையினடியில் நின்று அவருடைய பாடுகளுக்கு காரணமான தன் பாவங்களுக்காக அழுது புலம்பினாள். 

கர்த்தர் உயிர்த்தபின் மரிய மதலேனம்மாளுக்கு தம்மைக் காட்டி அவளை சந்தோஷப் படுத்தினார். கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் யூதர் புதுக் கிறீஸ்தவர்களை உபாதித்துக் கொல்லும்போது மரிய மதலேனம்மாளையும் அவளுடைய சகோதரனான லாசரையும் சகோதரியான மார்த்தம்மாளையும் யூதர் சுக்கான் இல்லாத ஒரு கப்பலில் ஏற்றி விட்டார்கள். 

அந்தக் கப்பல் பிரான்ஸிலுள்ள மர்சேல்ஸ் பட்டணத் துறைமுகத்தில் சேர்ந்தபின், மரிய மதலேனம்மாள் ஒரு கெபியில் சேர்ந்து, அதில் பொறுக்கப்பட்ட தன் பழைய பாவங்களுக்காக முப்பது வருட காலம் கடின தபஞ் செய்து பாக்கியமான மரணமடைந்தாள்.

யோசனை

பாவசங்கீர்த்தனத்தால் நமது பாவங்கள் பொறுக்கப்பட்ட போதிலும் அடிக்கடி அந்தப் பாவங்களை நினைத்து மனஸ்தாபப்பட பழகுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். வான்டிரில், ம. 
அர்ச். ஜோசப், து. 
அர்ச். மெனேவ், ம. 
அர்ச். டாபியுஸ், து.