அர்ச். துரிபியுஸ். மேற்றிராணியார் (கி.பி. 1606)
இவர் ஸ்பெயின் தேசத்தில் உத்தம கோத்திரத்தில் பிறந்து சிறு வயதில் பாவத்திற்குப் பயந்து, தாம் ஞானஸ்நானத்தில் பெற்ற இஷ்டப் பிரசாதத்தை ஒருபோதும் இழக்காமலிருந்தார்.
இளம் வயதில் இவர் ஏழைகள் மட்டில் இரக்கம் காட்டி தமது கையிலுள்ளதை அவர்களுக்குக் கொடுப்பார்.
ஜெப தபங்களில் ஊக்கமாயிருந்ததுடன், அடிக்கடி ஒருசந்தி பிடித்து, தேவதாயார் பேரில் விசேஷ பக்திவைத்து, நாள்தோறும் ஜெபமாலையும் மந்திரமாலையும் ஜெபிப்பார்.
இவர் உயர்ந்த சாஸ்திரங்களைக் கற்றுப் பெரிய நியாயாதிபதி உத்தியோகத்தைச் சகலரும் அதிசயிக்கும்வண்ணம் திறமையுடன் நிறைவேற்றி வந்தார்.
பெரு தேசத்தின் அதிமேற்றிராணியார் இறந்தபடியால், அவருக்குப் பதிலாக துரிபியுஸ் நியமிக்கப்பட்டார்.
இம் மேலான பதவிக்குத் தாம் பாத்திரவானல்ல என்று அதைத் தடுக்கும்படி முயற்சித்தும், இவருடைய பிரயாசையெல்லாம் வீணானதால் குருப்பட்டத் தையும் மேற்றிராணியார் அபிஷேகத்தையும் பெற்று பெரு தேசத்திற்குப் புறப்பட்டார்.
அத்தேசத்தில் கட்சி பேதங்கள் உண்டாகி, போரும், சண்டையும் எழும்பி, வேத சட்டப்பிரமாணங்கள் அலட்சியம் செய்யப்பட்டு, இந்தியர் பல விதத்திலும் உபாதிக்கப்பட்டு, தேசம் அலங்கோலமாயிருந்ததைக் கண்ட மேற்றிராணியார், தமது ஜெப தபத்தாலும் விடாமுயற்சியாலும் அக்குறை களைப் பரிகரித்து, ஊரூராய்ப் பிரயாணஞ் செய்து சில காலத்துக்குள் தமது விசாரணைக் கிறீஸ்தவர்களை உத்தம பிரஜைகளாகச் செய்தார்.
இவர் மலை நாடுகளில் பிரயாணஞ் செய்கையில் இவர் ஏறியிருந்த வாகனம் பெருங் கிடங்கான பள்ளத்தில் விழப்போகும் சமயத்தில் ஒரு சம்மனசானவர் தோன்றி வாகனத்தை அப்புறப்படுத்தினார்.
துரிபியுஸின் முயற்சியால் அத்தேசத்தில் சிறந்த கோவில்களும், மடங்களும், மருத்துவமனைகளும் கட்டப்பட்டன.
இப்பரிசுத்த மேற்றிராணியார் தமது பெரிய மேற்றிராசனத்தை கண்காணிக்கப் பிரயாணஞ் செய்யும்போது, வியாதியுற்று, தமக்கு 68 வயது நடக்கும்போது அர்ச்சியசிஷ்டவராய் மரித்துப் பரலோகம் சேர்ந்தார்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். விக்டோரியானும் துணை., வே.
அர்ச். எதெல்வால்ட், கு.