நவம்பர் 22

அர்ச். செசீலியா வேதசாட்சி - (கி.பி. 230).

செசீலியா இளம் வயதில் கல்வி கற்று, இசைக் கருவிகளை வாசித்து, இனிய குரலில் தேவ கீர்த்தனைகளைப் பாடி வருவாள். இவளுடைய உடல் அழகைக் கண்ட அநேக வாலிபர், இவளை மணமுடித்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்.

தன் தாய் தந்தையரின் கட்டாயத்தால், செசீலியா பிறமத்ததைச சார்ந்த பணக்கார வாலிபனான வலேரியான் என்பவரை திருமணம் செய்துகொண்டாள். மணமுடித்துக்கொண்ட அன்றிரவே, செசீலியா தன் கணவனை நோக்கி, நான் என் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். மேலும் ஒரு தேவதூதன் என்னுடனிருப்பதால் என்னைத் தொட வேண்டாமென்றாள்.

பிறமதத்தைச் சார்ந்த வலேரியான் தேவதூதனைப் பார்க்க விரும்பி, ஞானஸ்நானம் பெற்று அவரைக் கண்டு மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியைப்பற்றி கேள்விப்பட்ட வலேரியானுடைய சகோதரனும் ஞானஸ்நானம் பெற்று சம்மனசைப் பார்க்கும் பாக்கியம் பெற்றார்.

வலேரியானும் அவர் சகோதரனும் கிறீஸ்தவர்களானதை அறிந்த அதிபதி, அவர்கள் இருவரையும் வேதத்திற்காகக் கொல்லக் கட்டளையிட்டு, செசீலியாவைக் காவலில் வைத்தான். அதிபதி செசீலியாவுடன் வேதத் தர்க்கம்செய்து தோல்வியடைந்ததினால் வெட்கமடைந்து, இவளை நெருப்பிலிட்டு சுட்டெரிக்கக் கட்டளையிட்டான்.

ஆனால் நெருப்பால் செசீலியா சிறிதும் பாதிக்கப்படாததை அவன் அறிந்து, இவள் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான். கொலைஞர் வேதசாட்சியைக் கத்தியால் மூன்று வெட்டு வெட்டியும் தலை துண்டிக்கப்படவில்லை.

இந்தப் பெருங்காயத்தால் செசீலியா கொடூர வேதனையை அனுபவித்து, மூன்றாம் நாள் தன் ஆத்துமத்தைத் தன் தேவ பத்தாவாகிய ஆண்டவர் கையில் ஒப்படைத்து, அவரின் அரவணைப்புக்குள்ளானாள்.

யோசனை

நாம் ஒரு போதும் கெட்ட ஆபாசப் பாடல்களைப் பாடவும், கேட்கவும் கூடாது. மாறாக, தேவ கீர்த்தனைகளைப் பாடி ஆண்டரை துதித்துப் புகழக்கடவோம்.