நவம்பர் 21

காணிக்கை மாதா திருநாள்.

தெய்வ பக்தியுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பார்கள். யூதருக்குள் சிலர் தங்கள் குழந்தைகளை தேவாலயத்தில் சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்து, தேவ பக்தியில் வளர்க்கும்படிக்கு அவர்களைக் குருக்கள் கையில் ஒப்படைப்பார்கள்.

கன்னிமரியாள் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவளுடைய தாய் தந்தையரான அன்னம்மாள் - சுவக்கீன் என்பவர்கள் அத்திருக் குழந்தையைத் தேவாலயத்திற்குக் கொண்டுபோய் சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்தபின், அப்பரிசுத்த ஸ்தல பிள்ளைகள் வளர்க்கப்படும் இடத்திற்கு அக்குழந்தையைக் கொண்டுபோய், அதைக் குருக்களுடைய கையில் ஒப்புவித்தார்கள்.

இத்திருக்குழந்தை தன் பெற்றோரையும், பெற்றோர் தங்கள் அருமை மகளையும் விட்டுப் பிரியும்போது உண்டான மகா துக்க துயரத்தை நல்ல மனதுடன் சகித்து, சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்தார்கள் அத்திரு ஸ்தலத்தில் கன்னிமரியாள் ஒரு சரீரமுள்ள சம்மனசு போல நடந்து, தேவசிநேகம், பிறர் சிநேகம், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், ஒறுத்தல் முதலிய புண்ணியங்களைச் சீராய் அனுசரித்து, சகலருக்கும் அணையா தீபம் போல பிரகாசித்தாள்.

இப்பரிசுத்தக் குழந்தையின் நற்குண நடத்தையைக் கண்ட சிறுமிகள் அதிசயித்து, தர்ம வழியில் அவளைக் கண்டுபாவித்தார்கள். இப்பரிசுத்த கன்னிகை தமது நூதன ஜீவியத்தால், மற்றவர்களும் மடங்களில் சேர்ந்து கன்னிமையை அனுஷ்டிக்க வழிகாட்டியானாள்.

யோசனை

ஆண்டவருடைய பணிவிடைக்கு அழைக்கப்படும் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் தடைசெய்யாமல் அனுப்பக்கடவார்களாக. இப்பரிசுத்த அந்தஸ்தில் சேர்ந்தவர்கள், தேவ கன்னிகையைக் கண்டுபாவித்து, உலகத்திற்கு மரித்து, மடத்தின் விதிமுறைகளை ஒழுங்காய் அனுசரித்து, மூன்று மகா வார்த்தைப்பாடுகளையும் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி, மற்றப் புண்ணியங்களையும் சுறுசுறுப்பாய் அனுசரிப்பார்களேயாகில், தேவமாதாவுக்குப் பிரிய பிள்ளைகளாக, சேசுநாதருக்கு உகந்த பத்தினிகளாக ஆவார்கள் என்பது நிச்சயம்.