ஜுன் 21

அர்ச். ஞானப்பிரகாசியார். துதியர் (கி.பி. 1591) 

இராஜ வம்சத்தாரான தாய் தந்தையிடமிருந்து லூயிஸ் என்று அழைக்கப்படும் ஞானப்பிரகாசியார் பிறந்தார். இவர் முதன் முதலில் பேசத் துவங்கும்போது சேசு மரியென்னும் திருநாமங்களை உச்சரித்தார்.

9-ம் வயதில் தாம் சாகும்வரையில் கற்புள்ளவராயிருப்பதாக சர்வேசுவரனுக்கு வார்த்தைப்பாடு கொடுத்தார். வயது அதிகரிக்க அதிகரிக்க புண்ணியத்தில் உயர்ந்து வந்தார்.

வாரத்தில் மும்முறை ஒருசந்தி பிடிப்பார். இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொள்வார். அத்தேசத்து இராஜ குமாரனுக்கு இவர் தோழனாக நியமிக்கப்பட்ட போது அரண்மனையில் நடக்கும் ஆடல் பாடல் முதலிய வேடிக்கைகளை விட்டு விலகியிருப்பார்.

தமது ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் கண்டிப்பாய் அடக்கி ஒறுத்ததினால் எந்த ஸ்திரீயையும் கண்ணெடுத்து நோக்கினவரல்ல. நடக்கும்போதுகூட அடக்க ஒடுக்கத்தை அனுசரித்ததினால் சரீரமுள்ள சம்மனசு என்று அழைக்கப்பட்டார்.

இவர் துறவற அந்தஸ்திற்கு சர்வேசுரனால் அழைக்கப்பட்டதினால் தமக்குண்டாயிருந்த மகிமை, பெருமை, செல்வம் முதலிய சகல பாக்கியங்களையும் துறந்து சேசு சபையில் சேர்ந்தார்.

சந்நியாச மடத்தில் சகல புண்ணியங்களையும் ஒழுங்காய் அனுசரித்தார். இடைவிடாமல் தேவ சமுகத்திலிருந்து அடக்கவொடுக்கமாய் நடந்துவந்தார். தமது குடும்பத்திலுண்டாயிருந்த பகை விரோதங்களை நீக்கி சமாதானப்படுத்தினார்.

அக்காலத்தில் உரோமை மருத்துவமனையிலிருந்த கொள்ளை வியாதியஸ்தர்களுக்கு மற்ற சந்நியாசிகளுடன் உதவி ஒத்தாசை செய்யும்போது, இவர் விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதை மிகவும் பொறுமையுடன் அனுபவித்தார்.

இவர் சீக்கிரத்தில் குணப்படுவாரென்று வைத் தியர் நினைத்த போதிலும், சீக்கிரத்தில் தாம் சாகப்போவதாகக் கூறி அவர் சொன்ன நாளில் 23-ம் வயதில் மரணமடைந்து மோட்ச பேரின்பத்திற்குள்ளானார்.

யோசனை 

நாமும் இந்த புண்ணியவாளரைப் பின்பற்றி ஐம்புலன்களையும் உணர்ச்சி களையும் அடக்கி கற்பென்னும் மகா புண்ணியத்தை அடைந்து கொடுக்கும்படி அவரை மன்றாடுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ரால்ப், அதிமே.
அர்ச். மெலானுஸ், ம.
அர்ச். ஆரோன், ம.