ஜுன் 20

அர்ச். சில்வேரியுஸ். பாப்பாண்டவர், வேதசாட்சி (கி.பி.538)

அகபேதுஸ் பாப்பாண்டவர் மரணமானபின், இன்னும் குருப்பட்டம் பெறாதிருந்த சில்வேரியுஸ் என்பவர் பாப்பாண்டவராக தெரிந்துகொள்ளப்பட்டார்.

கொன்ஸ்தாந்தினோபிளிலிருந்த இராணி அக்காலத்திலுண்டாயிருந்த பதித மதத்தில் சேர்ந்து அந்த அபத்த மதம் பிரபல்யமாவதற்காக ஏற்பாடெல்லாம் செய்துவந்தாள்.

அந்நாட்டின் இராஜா நகரின் பிதாப்பிதாவாய் இருந்தவர், மேற்கூரிய பதித மதத்திற்கு அனுகூலமாயிருந்தபடியால் அவரை அகபேதுஸ் பாப்பாண்டவர் அந்த உன்னத பட்டத்தினின்று நீக்கி வைத்தார்.

இதனால் இராணி கோபங்கொண்டு புதிதாய் பாப்பானவரான சில்வேரியுஸிடம் ஸ்தானாதிபதிகளை அனுப்பி மேற்கூரிய பிதாப்பிதாவை திருச்சபையில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள்.

பாப்பாண்டவர் அதற்கு சம்மதியாததினால் அவள் வெகுவாய் சினங்கொண்டு, கபடமாய் சில்வேரியுஸை உரோமையினின்று வெளியேற்றி ஒரு தீவிற்கு அனுப்பி வைத்தாள்.

சில்வேரியுஸோவெனில் தமது மனச்சாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்யாமல் சகலவித அவமானத்திற்கும் மரணத்திற்குமே உட்பட்டு பரதேசத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

அவ்விடத்தில் அந்த அர்ச்சியசிஷ்டவர் சகல வித துன்பதுரிதங்களையும் கஷ்டங்களையும் பொறுமையுடன் அனுபவித்துக் குரூரமாய் உபாதித்துக் கொல்லப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை 

வேத அதிகாரிகளுடைய வேலைகளில் நாம் தலையிடுவது மகா பாவமென்று உணர்ந்து, அவர்களுக்கு நாம் எப்போதும் தாழ்ச்சியுடன் கீழ்ப்படியக் கடவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். கோபேயின், கு.வே.
அர்ச். இடாபெர்கா, க.
அர்ச். பேய்ன், மே.