அக்டோபர் 19

அர்ச். அல்காந்தாரா இராயப்பர் - துதியர் (கி.பி.1562)

ஸ்பெயின் தேசத்தில் அல்காந்தாரா என்னும் நகரின் தேசாதிபதியுடைய குமாரனான இராயப்பர் சிறுவயதில் தெய்வபக்தியுள்ளவராய் புண்ணிய வழியில் நடந்தார். 

இவர் தமது 16-ம் வயதில் உலகத்தைத் துறந்து, ஐந்து காய பிரான்சீஸ்கு சபையில் சேர்ந்து, நவ சன்னியாசஞ் செய்தபோது, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை, ஒறுத்தல் முதலிய சிறந்த புண்ணியங்களை உத்தமமாய் அனுசரித்து, மற்றவர்களுக்கு நன்மாதிரிகையாய் பிரகாசித்தார். 

இவர் குருப்பட்டம் பெற்று திவ்விய பலிபூசை நிறைவேற்றும்போது ஒரு சம்மனசைப் போலக் காணப்படுவார். கற்புக்கு சிறிதும் களங்கம் வராதபடி கவனமாயிருந்து, அவர் எந்த ஸ்திரீயையும் கண்ணெடுத்துப் பாராததுடன் அவர் மரண அவஸ்தையாய் இருக்கும்போது தன் சபை சன்னியாசிகள் முதலாய்த் தம்மைத் தொட சம்மதித்தவரல்ல. 

இவர் இடைவிடாமல் தமது ஆத்துமத்தையும் சரீரத்தையும் அடக்கி ஒறுப்பார். கல்லறைக்கு ஒப்பான நாலரை அடி நீளமுள்ள சிறிய அறையில் வசித்து, இரவில் சில நேரம் உட்கார்ந்து, அல்லது நின்றுகொண்டு நித்திரை செய்வார். 3 அல்லது 8 நாட்களுக்கு ஒரு தடவை கொஞ்சம் அப்பமும் கீரையும் புசிப்பார். 

இவர் செய்த கடுந் தபத்தால் இவர் முகம் சுருங்கி, சரீரத்தின் தோல் மரப்பட்டை போலிருக்கும். இவருடைய ஜெப தபத்தையும் புதுமைகளையும் கேள்விப்பட்டு அரசரும் பிரஜைகளும் அவரைக் கனப்படுத்தினாலும், இராயப்பர் தம்மைப் பெரும் பாவியென்றே சொல்லுவார். 

இடைவிடாமல் தமது நாவையும், பார்வையையும் அடக்கினதினால் அவர் அருந்தும் பதார்த்தத்தின் ருசியையும் அவர் இருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டதென்றும் அறியமாட்டார். கடைசியாகத் தமது 62-ம் வயதில் வியாதியாய் விழுந்து முழந்தாளிலிருந்து மேரையாய் உயிர் துறந்து மோட்ச பாக்கியத்தை சுதந்தரித்துக்கொண்டார். 

அவர் உயிர் விட்டதும் அர்ச். தெரேசம்மாளுக்குக் காணப்பட்டு “எனக்கு அபரி மிதமான சம்பாவனையை விளைவித்த பாக்கியமான தபமே" என்று சொல்லி மறைந்தார்.

யோசனை 

நாமும் நமது நாவையும் பார்வையையும் அடக்குவோமாகில் அநேக பாவங்களுக்குத் தப்பித்துக்கொள்வோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். டோலேமியும் துணை., வே. 
அர்ச். ப்ரீஸ்வைட், க.