பிப்ரவரி 18

அர்ச். சிமையோன். மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 116)

அர்ச். சிமையோன் நமது கர்த்தருக்கு நெருங்கின உறவினராயிருந்தார். இவர் சேசுநாதரை ஆரம்பத்திலிருந்து பின்சென்றார்.

இஸ்பிரீத்துசாந்து வானவர் தேவமாதா மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் எழுந்தருளியபோது, சிமையோனும் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றார். ஜெருசலேம் நகரின் மேற்றிராணியாரான அர்ச். யாகப்பர் யூதரால் கொல்லப்பட்டபின் அப்போஸ்தலர்களும் சீஷர்களும் ஒரு சங்கத்தைக் கூட்டி ஆலோசித்து அர்ச். சிமையோனை ஜெருசலேம் நகருக்கு மேற்றிராணியாராக ஏற்படுத்தினார்கள்.

உரோமையர் யூதருக்கு விரோதமாய்ப் படையெடுத்தபோது, ஜெருசலேமுக்கு உண்டாகும் கேட்டை சிமையோன் சர்வேசுரனால் அறிந்து கிறிஸ்தவர்களை அந்நகரின் வேறோர் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்.

இராஜன் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி தாவீது இராஜாவின் கோத்திரத்தாரைப் பிடித்து கொலை செய்யும்படி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அர்ச். சிமையோன் தாவீது கோத்திரத்தைச் சேர்ந்தவரென்று யூதராலும் பதிதராலும் அரசாங்கத்துக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டார்.

அதனால் அவர் பிடிபட்டு அநேக நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படும்படி அதிகாரியால் தீர்வை யிடப்பட்டார். குறித்த நாளில் 120 வயதுள்ள வயோதிகரான சிமையோன் கொலைஞர்களால் கொடூரமாய் அடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.

சிலுவையின் வேதனையை மகா பொறுமையுடன் அனுபவித்து தமது ஆத்துமத்தை நமது இரட்சகர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

யோசனை 

அர்ச். சிமையோன் தனக்கும் உலகத்துக்கும் மரித்தவராயிருந்த படியால், தமக்கு உண்டான துன்பதுரிதங்களால் கலங்காதிருந்தார். நாமும் இவரைக் கண்டுபாவித்து பரித்தியாகிகளாய் வாழ்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 


அர்ச். லியோவும் துணை, வே.