நவம்பர் 16

அர்ச். எட்மண்ட் பேராயர் - (கி.பி. 1240).

ஆங்கிலேயரான எட்மண்டின் தந்தை உலகத்தை வெறுத்துத் துறவியாகி, புண்ணிய வாழ்வு வாழ்ந்து மரணமானார். எட்மண்டின் தாயார் தெய்வ பக்தி மிகுந்தவளாய் புண்ணிய வழியில் வாழ்ந்தாள்.

அவள் இரவு வேளையில் வெகு நேரம் விழித்து ஜெபம் செய்து, மயிர்ச்சட்டை, முள்ளொட்டியாணம் முதலிய தவக்கருவிகளை உபயோகித்துப், புண்ணிய வாழ்வு வாழ்ந்தாள். தன் பிள்ளைகளையும் அதே வழியில் வளர்த்து வந்தாள்.

எட்மண்ட் தன் தாயின் புத்திமதிகளையும், ஆலோசனைகளையும் கேட்டு, ஜெப தபத்தில் காலத்தைச் செலவிட்டார். மேற்படிப்பு படிக்க இவருடைய தாயார் இவரை அனுப்பும் போது, ஒரு மயிர்ச்சட்டையை இவருக்குக் கொடுத்து, அதை அடிக்கடி உபயோகிக்கும்படி கூறியதுடன், அவ்வப்போது தவக்கருவிகளை இவருக்கு அனுப்புவாள்.

இவருடைய தாயார் மரணமானபின், எட்மண்ட் படிப்பை முடித்து, குருப்பட்டம் பெற்று, பிறருடைய ஆன்ம இரட்சண்யத்திற்காக வெகுவாக உழைத்து வந்தார். இவருடைய புண்ணிய வாழ்வையும் கல்வியறிவையும் குறித்து, கான்ட்டர்பரி நகருக்கு பேராயராக நியமிக்கப்பட்டார். இந்த உந்நத பட்டம் பெற்றபின் அரிதான புண்ணியங்களையும் கடின தவத்தையும் செய்து, தமது பிரசங்கத்தாலும் புத்திமதியாலும் விசுவாசிகளை சத்தியவேதத்தில் நிலைநிறுத்தினார்.

ஒருநாள் இவர் வெளியே ஒரு மைதானத்தில் பிரசங்கம் செய்துகொண்டிருந்த போது பெரும் மழை பெய்தது. இவருடைய ஜெபத்தால், இவர் மேலும் அங்கு கூடியிருந்த திரளான ஜனங்கள் மேலும் ஒரு மழைத்துளிகூட விழவில்லை. அன்று அநேக பெரும் பாவிகள் மனந்திரும்பினார்கள்.

அத்தேசத்தின் அரசன் கோவில் மானியங்களை அநியாயமாய் அபகரித்ததினால், எட்மண்ட் அவனுக்குப் புத்திமதிகளைக் கூறி அவைகளை கோவில் வசம் ஒப்படைக்கும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவன் அதைக் கேட்காததினால், இவர் அத்தேசத்தை விட்டு பிரான்ஸ் தேசத்திற்குச் சென்று, ஒரு துறவற மடத்தில் சகல புண்ணியங்களையும் உத்தமமாய் அனுசரித்து, மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே ஞானக் கல்வியைக் கற்பிப்பார்களாக.