மார்ச் 16

அர்ச். ஜூலியான். வேதசாட்சி (கி.பி. 297). 

உயர்ந்த கோத்திரத்தாரான ஜூலியான் வேதம் போதித்து வரும்போது தியோகிலேசியோன் எழுப்பிய வேத கலகத்தில் பிடிபட்டு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார்.

சாட்டைகளால் அடிக்கப்பட்டு நெருப்பால் அவர் சுடப்பட்ட போதிலும் வேதத்தில் தைரியமாய் இருந்தார்.

கத்திகளால் அவரது சரீரம் அறுக்கப்பட்டு உடலில் எலும்புகள் பல இடங்களில் வெளியே காணப்பட்டன.

வேதசாட்சியின் தளராத தைரியத்தைக் கண்ட அநியாய நடுவன் அவரை ஒரு வருஷமளவும் ஊரூராயும் வீதிவீதியாயும் இழுத்து நிஷ்டூரமாய் உபாதிக்க கட்டளையிட்டான்.

வேதசாட்சி இந்தக் கொடூர வேதனைகளைப் பொறுமை தைரியத்துடன் அனுபவித்ததைக் கண்ட கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் மட்டில் தைரியமும் அஞ்ஞானிகளுக்கு மிகுந்த ஆச்சரியமும் உண்டாயிற்று.

கடைசியாய், தன் தகப்பனைக் கொலை செய்யும் ஒருவனுக்கு இடும் ஆக்கினையை அவருக்கு அநியாய நடுவன் விதித்தான்.

அவனுடைய கட்டளைப்படி விஷப்பாம்புகளும், தேள்களும், நாயும், குரங்கும் அடங்கியிருந்த ஒரு சாக்கில் ஜூலியானும் போடப்பட்டு, சாக்கின் வாயைத் தைத்த பின் கடலில் அமிழ்த்தப்பட்டார்.

ஜூலியான் இப்பேர்ப்பட்ட கொடிய வேதனையை வேதத்தி னிமித்தம் அனுபவித்து வேதசாட்சி முடி பெற்றார்.

கிறிஸ்தவர்கள் அவர் சரீரத்தை எடுத்துப் பயபக்தியுடன் அதை ஸ்தாபித்து அதற்கு வணக்கம் செலுத்தினார்கள். .

யோசனை

வேதத்தினிமித்தம் நமக்குத் துன்ப துரிதங்கள் உண்டாகும்போது அவைகளைத் தைரியத்துடனும் பொறுமையுடனும் சகிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பீனியன், து.