மார்ச் 15

அர்ச். ஆபிரகாம். வனவாசி (கி.பி.360). 

மிகுந்த செல்வந்தரான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்த ஆபிரகாம் சிறுவயதிலேயே புண்ணியத்தின்மேல் ஆசை கொண்டு அவைகளைக் கடைப் பிடித்து வந்தார்.

தன் பெற்றோருடைய கட்டாயத்தினால் அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் கற்பின் மீதுள்ள விருப்பத்தை தன் மனைவிக்கு அறிவித்து திருமணமான சில நாட்களுக்குப்பின் தேவ ஏவுதலால் தன் வீட்டை விட்டு 2 மைல் தூரத்திலுள்ள் ஓர் சிறு வீட்டுக்குச் சென்று அங்கு ஜெபத்திலும் தபத்திலும் காலத்தைப் போக்கினார்.

இவருடைய பெற்றோர் இறந்தபின் தனக்குச் சொந்தமான செல்வங்களைத் தன் சிநேகிதர் மூலமாய் கேட்போருக்கு பகிர்ந்துக் கொடுத்தார்.

இவருடைய அதிசயமான புண்ணியங்களைப்பற்றி கேள்விப்பட்ட அந்த மேற்றிராசனத்திலுள்ள மேற்றிராணியார் ஆபிரகாமுக்கு குருப்பட்டம் கொடுத்து வெகு முரடருந் துஷ்டருமான அஞ்ஞானிகளிருந்த ஊருக்குச் சென்று வேதம் போதிக்கும்படி இவருக்குக் கட்டளையிட்டார்.

இவரும் தமது ஜெப தபங்களை அதிகமாகச் செய்து கண்ணீர் அழுகையுடன் அவ்வூருக்குப் போய் வேதம் போதித்தார்.

அவ்வூரார் அவரை நிந்தித்து நிஷ்டூரமாய் அடித்தார்கள். இறுதியில் இப்புனிதருடைய புண்ணியங்களைக் கண்ட அவ்வூரார் சில காலத்திற்குப்பின் சத்திய வேதத்தில் உட்பட்டார்கள்.

அதற்குப்பின் வேறு குருக்களை அவ்விடத்தில் நியமித்துவிட்டு, இவர் தமது சிற்றறைக்குச் சென்று கடுந் தவத்தில் காலத்தைப் போக்கினார்.

இவர் சாகக் கிடக்கையில் அருகாமையிலிருந்த ஊரார் இவரிடம் வந்து இவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். மேலும் அச்சமயத்தில் இவரால் அநேக புதுமைகளும் நடந்தேறின.

யோசனை

ஒவ்வொருவரும் தத்தம் அந்தஸ்தின் கடமையை அநுசரித்து மோட்சம் சேர சர்வேசுவரன் சித்தமாயிருப்பதால் நாமும் நமது அந்தஸ்தின் கடமை களைப் பிரமாணிக்கமாய் அநுசரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். சக்காரி, பா.