ஜுன் 15

அர்ச். வீத்தும் துணைவரும். வேதசாட்சி (கி.பி. 303) 

துரை மகனான வீத்துஸ் என்பவர் குழந்தையாயிருந்த போது கிறீஸ்தவளாயிருந்த ஓர் தாதி அவருக்குப் பால் கொடுத்து வளர்த்ததும் அல்லாமல், விசுவாசமாகிய ஞானப் பாலையும் அவருக்கு ஊட்டினதினால் அவரும் ஞானஸ்நானம் பெற்றார்.

சிறு பிள்ளையாயிருந்த வீத்துஸுக்கு எவ்வளவு விசுவாசமும் பக்தியுமிருந்ததென்றால் வியாதிகளைக் குணப்படுத் தவும், பேய்களை ஓட்டவும் வரம் பெற்றிருந்தார்.

தன் மகன் கிறீஸ்தவனானதை அறிந்த அவருடைய தந்தை அதை விடும்படி அவரை அடித்துக் குரூரமாய் நடத்தியும் அவர் அதை விடாததினால் அவரை ஊர் அதிபதி கையில் ஒப்படைத்தான்.

அதிபதி சினந்து வேதசாட்சியைக் குரூரமாய் அடித்து அவருடைய வஸ்திரங்களைக் களைந்து உபாதிக்கக் கட்டளையிட்டபோது, கொலைஞருடையவும் அதிபதியுடையவும் கைகள் மரத்துப் போயின.

அதிபதி இதைக் கண்டு பயந்து, அவரை அவர் தந்தையிடம் அனுப்பினான். அங்கிருந்து வீத்துஸ் தன்னை வளர்த்தவர்களுடன் உரோமைக்குச் சென்று, அங்கும் பல புதுமைகளை நடத்தினார்.

பேய் பிடித்திருந்த தன் மகனைக் குணப்படுத்தும்படி தியக்கிளேசியன் இராயன் அவரை மன்றாடியதினால், வீத்துஸ் பசாசை அவனிடத்திலிருந்து துரத்தினார்.

நன்றிகெட்ட இராயன் தன் தேவர்களை வணங்கும்படி வீத்துணுக்குக் கட்டளையிட்டு அவர் அதற்கு இணங்காததினால், அவரையும் அவரை வளர்த்தவர்களையும் பிடித்து கொடுமைப்படுத்தி கொதிக்கும் குங்கிலியத்தில் அவர்களைப் போட்டான்.

அவர்கள் சிறிதும் சேதமின்றி இருந்ததால், அவர்களை சிங்கங்களுக்கு இரையாகப் போட்டும் அவைகள் அர்களைத் தொடாததைக் கண்ட அஞ்ஞானிகள் மனந்திரும்பினதை இராயன் அறிந்து, அம் மூவரையும் சிரச்சேதம் செய்தான்.

யோசனை 

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் ஞானப் பாலையும் ஊட்டக்கடவீர்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். லான்தெலின், ம.
அர்ச். பெர்னார்ட், து.
அர்ச். வாஜ், வ.
அர்ச். கிரகோரி, து.