ஜுன் 14

அர்ச். பெரிய பசிலியார். மேற்றிராணியார், துதியர் (கி.பி.379)

பசிலியார் என்பவருடைய இரு சகோதரர்களும் மேற்றிராணிமாராய் இருந்தார்கள்.

மகா புத்தி சூட்சமுள்ள இவர் வெகு எளிதில் தர்க்க சாஸ்திர முதலிய மேலான கல்வி சாஸ்திரங்களைக் கற்று பிரசித்திபெற்று மகா திறமையுடன் கல்விக் கூடங்களில் கல்வி கற்றுக்கொடுத்த பின்பு, நீதிமன்றத்தில் வக்கீல் உத்தியோகம் செய்து வந்தார்.

அக்காலத்திலிருந்த அர்ச். நசியான்சென் கிரகோரி என்பவர் இவருக்கு உற்ற சிநேகிதராயிருந்தார். பசிலியார் வனாந்தரங்களில் தவம் புரிந்து தபோதனர் களைச் சந்தித்து, அதிக புண்ணிய பயிற்சி பெற்று, அவ்விடத்தில் தங்கி, சகல புண்ணியங்களிலும் சிறந்து சகலருக்கும் தர்ம வழி காட்டினார்.

அக்காலத்திலிருந்த ஆரிய அரசனால் திருச்சபைக்கு பல பொல்லாங்கு நேரிட்டதினால், தமது மேற்றிராணி யாருடைய உத்தரவு பெற்று, இவர் வனாந்தரத்தை விட்டு நாட்டுக்குத் திரும்பி வந்து, தமது புத்தகங்களாலும் பிரசங்கங்களாலும் ஆரிய மதம் அபத்த மதமென்று நிரூபித்து, வேத தர்க்கத்தால் அவர்களை ஜெயித்தார்.

அதற்குப் பிறகு செசாரய நகருக்கு அதிமேற்றிராணியாரானார். ஆரிய மதத்தானான இராயன் இவர்மேல் மகா கோபங் கொண்டு இவரைப் நாடு கடத்தும் சட்டத்தில் கையெழுத்தைப் போட முயற்சித்த போதெல்லாம், அவன் கையிலிருந்த இறகு முறிந்தது. அவன் கையும் மரத்துப் போயிற்று. அவன் கோபத்துடன் அதைக் கிழித்துப் போட்டான்.

இராயனுடைய ஏக குமாரன் வியாதியாய் விழுந்தமையால் அவன் இவரை வரவழைத்து சர்வேசுரனை மன்றாடும்படி கேட்டுக்கொண்டான். இவருடைய ஜெபத்தால் குழந்தைப் பிழைத்தது.

இவர் நாள்தோறும் ஒருசந்தி பிடித்தார். இரவெல்லாம் ஜெபத் தியானத்தில் செலவழித்து கடுந்தவம் புரிந்தமையால் இவர் உடல் மெலிந்து, எலும்புந் தோலுமாயானார்.

அநேக பிரபந்தங்களை எழுதி தீர்க்கத்தரிசனம் சொல்லி பல புதுமைகளைச் செய்து இவ்வுலகை விட்டு மோட்சப் பிரவேசம் செய்தார்.

யோசனை 

பசிலியாருக்கிருந்த சிறந்த புத்திக்கூர்மையிலும், சிறந்த சாஸ்திரத்திலும், அவருக்குண்டாயிருந்த மேலான தாழ்ச்சி அதிகமாய் பிரகாசித்ததை நாம் கண்டு அப்புண்ணியத்தை அனுசரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ரூபினுஸும் துணை, வே.
அர்ச். மெதோடியுஸ், பிதா.
அர்ச். டாக்மெயல், து.
அர்ச். நென்னுஸ், ம.