மார்ச் 13

அர்ச். யுபிரேசியம்மாள். கன்னிகை (கி.பி. 412).

யுபிரேசியம்மாள் இராஜ வம்சத்தில் பிறந்து சிறுவயதில் புண்ணியத்தின் மட்டில் ஆவல் கொண்டிருந்தாள்.

இவளுடைய இளம் வயதில் இவள் தகப்பன் மரித்தபடியால் இவளுடைய தாயார் இவளைத் தூர தேசத்திற்கு அழைத்துப் போய் புண்ணிய வழியில் வளர்த்து வந்தாள்.

இவளுக்கு ஏழு வயது நடக்கும் போதே, இவள் கன்னியாஸ்திரீயாய்ப் போக விரும்பியதைக் கண்ட இவளுடைய தாயார் சந்தோஷக் கண்ணீர் சிந்தி, இச் சிறுமியை மடத்திற்கு அழைத்துப் போய் அவளை சிரேஷ்ட தாயாருக்கு ஒப்புக்கொடுத்து, தன் அரண்மனைக்குத் திரும்பினாள்.

யுபிரேசியம்மாள் வயதில் சிறுமியாய் இருந்தாலும், புண்ணிய வழியில் முதிர்ந்தவளைப் போல் வாழ்ந்து, ஒருசந்தி, உபவாசம், ஜெப தபம் முதலியவைகளைச் செய்வதைக் கண்ட மற்ற கன்னியர்கள் அதிசயித்தார்கள்.

இராயனானவன் யுபிரேசியம்மாளுக்குக் கடிதம் எழுதி அவள் ஒரு பிரபுவை மணப்பதற்காக அரண்மனைக்கு வரக் கேட்டுக் கொண்டான்.

சேசுநாதரை என் பத்தாவாக நான் தெரிந்துகொண்டதால் வேறு புருஷன் எனக்கு அவசரமில்லையென்றாள்.

அர்ச். யுபிரேசியம்மாள் மடத்தில் சகலருக்கும் தாழ்ந்து, தாழ்ச்சிக்குரிய வேலையை சந்தோஷமாகச் செய்து சகல புண்ணியங்களையும் வெகு நுணுக்கமாய் அநுசரித்து சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் வாழ்ந்து அர்ச்சியசிஷ்டவளாய்க் காலஞ் சென்றாள்.

யோசனை 

அழிவுக்குரிய பிரபஞ்ச நன்மைகள் மட்டில் நாம் அதிக பற்றுதல் வைக்காமல் இருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். நீசிபோருஸ், து.
அர்ச். தெயோபானெஸ், ம.
அர்ச். கென்னோக்கா, க.
அர்ச். ஜெரால்ட், மே.
அர்ச். புல்கேரியுஸ், ம.