மார்ச் 12

அர்ச். பெரிய கிரகோரியார். பாப்பாண்டவர் (கி.பி. 604).

இவர் உரோமை நகரின் தேசாதிபதியினுடைய குமாரர்.

ஞானக்காரியங்களின்மேல் இவருக்கிருந்த அதிக ஆவலால் சாஸ்திரங்களை உற்சாகமாய்க் கற்றுத் திருச்சபைக்கு நன்மை புரிய ஆசைப்பட்டார்.

இவருடைய தகப்பனார் இறந்தபின் இவருக்கிருந்த திரண்ட ஆஸ்தியை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு தமது மாளிகையை சந்நியாச மடமாக்கி அநேக புண்ணியவான்களுடன் சந்நியாசம் புரிந்து வந்தார்.

இவருடைய மேலான புத்தி திறமையை அறிந்து கொன்ஸ்தாந்தினோபளுக்கு ஸ்தானாதிபதியாக பாப்பானவரால் அனுப்பப்பட்டார்.

இதற்கு பின் இவர் பாப்பு ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டு, திருச்சபைக்கு கணக்கற்ற நன்மைகள் செய்தார்.

பல பதித மதங்களை முற்றிலும் அழித்தார். திருச்சபை ஒழுங்கு சட்டங்களைத் திருத்தியமைத்தார்.

உரோமையைக் கொள்ளையடிக்க வந்த பெரும் படையை பின்னடையும்படி செய்தார். ஏராளமான ஆரிய பதிதரை மனந்திருப்பினார்.

சத்திய வேதமறியாத ஆங்கிலேயர்களிடம் வேதபோதகர் களை அனுப்பி அத்தேசத்தை சத்திய வேதத்தில் திருப்பினார்.

ஆனால் பூர்வீகமாக கத்தோலிக்க வேதத்தை அநுசரித்த இத்தேசம் தற்போது புரொடெஸ்டாண்டு மதத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

மேலும் இந்த நல்ல பாப்பானவர் தேவாரதணைக்குரிய பாடல்களைப் பாடித் தந்து தமது பிரசங்கத் தாலும் நிருபங்களாலும் விசேஷமாகத் தமது பக்திக்குரிய மாதிரியாலும் குருக்களுக்கும் விசுவாசிகளுக்கும் வேத சத்தியத்தைப் போதித்து, 604-ம் வருடத்தில் மரணமாகி மோட்ச பதவியடைந்தார்.

யோசனை 

ஒருவனை மனந்திருப்ப வேண்டுமாகில் சாஸ்திரங்களாலும் நீதி நியாயங்களாலும் மனந்திருப்புவதைவிட நமது நன்மாதிரிகையால் அவனை எளிதில் மனந்திருப்பலாம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மாக்சிமிலியன், வே.
அர்ச். பவுல், து.