ஏப்ரல் 12

அர்ச். ஜூலியுஸ். பாப்பாண்டவர் (கி.பி. 352) 

ஜூலியுஸ் உரோமையில் பிறந்து சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்து தக்க காலத்தில் குருவாகி, கி.பி.337-ல் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனமேறி தமது சிறந்த புண்ணியங்களால் திருச்சபையைத் திறமையுடன் ஆண்டு வந்தார்.

கீழ்த் திசையில் துஷ்டரான ஆரிய பதிதரால் திருச்சபை குழப்பத்திற்குள்ளான போது, மகா அர்ச்சியசிஷ்டவரான அத்தனாசியுஸ் என்பவர் தமது பிரசங்கத் தால் அந்தப் பதிதரை மறுத்துத் தாக்கினார்.

பதிதரோவெனில், அத்தனாசி யாரை விரோதித்து அவர் பதிதப் படிப்பினையை போதிக்கிறாரென்று ஜூலியுஸ் பாப்பாண்டவரிடம் முறையிட்டார்கள்.

இதையறிந்த அத்தனாசியார் சில மேற்றிராணிமாரை உரோமைக்கு அனுப்பித் தமது படிப்பினையின் தன்மையை பாப்பாண்டவருக்கு தெளிவாய் விவரித்ததினால், அத்தனாசியார் மீது தவறு ஏதுமில்லையென்று பாப்பாண்டவர் தெரியப்படுத்தினார்.

ஆனால் ஒரு சங்கம் கூட்டி அதில் தங்கள் படிப்பினையையும் அத்தனாசியாருடைய படிப்பினையையும் பரிசோதிக்க வேண்டுமென்று ஆரிய பதிதர் மன்றாடினதின் பேரில் ஜூலியுஸ் பாப்பாண்டவர் ஒரு சங்கம் கூட்டி அதற்குத் தமது ஸ்தானாதி பதிகளை அனுப்பினார்.

கள்ளப்பதிதர் அதற்குப் போகப் பயந்து சாக்குப்போக்குகளைச் சொன்னதனால் மேற்கூரிய சங்கம் அத்தானாசியார்மேல் குற்றமில்லை யென்று தீர்மானித்து அவர்மேல் குற்றஞ்சாட்டினவர்களைக் கண்டித்தார்கள்.

அர்ச். ஜூலியுஸ் அந்தத் தீர்மானங்களை உறுதிப்படுத்தி குழப்பக்காரர் மனந் திரும்பும்படியாக ஒரு நிருபம் எழுதி வெளியிட்டார்.

இந்த உத்தம பாப்பரசர் திருச்சபைக்காக அநேக வருடகாலம் கடினமாக உழைத்து சகல புண்ணியங் களையும் உத்தமமாய் அனுசரித்து அழியாத மோட்ச முடியைப் பெற்றுக் கொண்டார்.

யோசனை 

திருச்சபை மேய்ப்பர்களுக்கு விரோதமாக குற்றங் கூறுவது தவறாகும். அப்பேர்ப்பட்டவர்களின் கூட்டத்தை விட்டு நாம் விலக வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜீனோ , மே.
அர்ச். விக்டர், வே.
அர்ச். சாபாஸ், வே.