பிப்ரவரி 10

அர்ச். ஸ்கோலாஸ்திக்கம்மாள். கன்னிகை 

இந்த அர்ச்சியசிஷ்டவள், அர்ச். ஆசீர்வாதப்பரின் சகோதரி. இவள் சிறுவயதிலேயே தன் கன்னிமையைச் சர்வேசுவரனுக்கு ஒப்புக்கொடுத்து, ஒரு மடத்தை ஸ்தாபித்து, அதில் அநேக கன்னியருடன் அரிதானப் புண்ணியங் களைக் கடைபிடித்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தாள்.

பெரிய மடாதிபதியும் தன் சகோதரனுமான ஆசீர்வாதப்பரை வருஷத்தில் ஒரு முறை சந்தித்து, அவருடன் ஞான விஷயங்களைக் குறித்து சம்பாஷித்து, புண்ணியத்தில் உத்தமமாய் வாழ்ந்துவந்தாள். ஒரு நாள் அர்ச். ஆசீர்வாதப்பர் தமது சகோதரியான ஸ்கோலாஸ்திக்கம்மாள் அருகாமையிலுள்ள ஒரு கன்னியாஸ்திரீ மடத்துக்கு வந்திருக்கிற செய்தியறிந்து, சில சந்நியாசிக ளுடன் அவளை சந்திக்கும்படி புறப்பட்டார்.

அப்போது ஸ்கோலாஸ்திக்கம்மாள் மிகவும் சந்தோஷித்து தன் சகோதரருடன் ஞானக் காரியங்களைப்பற்றி பேசுவதிலும் ஜெபத் தியானஞ் செய்வதிலும் அந்நாளைப் போக்கி சாயங்காலத்தில் போஜனமருந்தி, தன் மரண காலம் அருகாமையிலிருப்பதை அவள் அறிந்து, அன்று இரவெல்லாம் மோட்சத்தைப்பற்றி பேச நினைத்தாள். ஆனால் அவள் சகோதரர் இரவில் அங்கு தங்குவது தமது ஒழுங்கிற்கு விரோதமென்று எண்ணி, தமது மடத்திற்கு புறப்பட எத்தனித்தார்.

இதைக் கண்ட ஸ்கோலாஸ்திக்கம்மாள் துக்கித்து உட்கார்ந்த வண்ணம் தலை குனிந்து ஜெபிக்க ஆரம்பித்தாள். அக்கணமே எப்பேர்பட்ட இடி முழக்கத்துடன் பெரு மழை பெய்ததெனில், அர்ச். ஆசீர்வாதப்பர் அவ்விடத்தைவிட்டு வெளியேற முடியாதவராய் தம் சகோதரியுடன் ஞானக் காரியங்களைப்பற்றி சம்பாஷித்து மறுநாள் காலையில் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார்.

மூன்றாம் நாள் தம் சகோதரி மரணமடைந்து அவளுடைய ஆத்துமம் மாடப்புறா ரூபமாக மோட்சத்திற்குப் போகிறதைக் கண்டார்.

யோசனை

தங்கள் சபை ஒழுங்குபடி நடக்கும் துறவிகள் தங்கள் மடத்துக்குப் பிரகாச தீபமாக விளங்குவார்கள். மேலும் அவர்கள் நமது ஆத்தும் விஷயமாக செய்யும் ஜெபங்களும் வீணாய்ப்போகாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சோதெரிஸ், க.வே.
அர்ச். வில்லியம், வனவாசி.
அர்ச். எர்லுப், மே.வே.