பிப்ரவரி 08

அர்ச். மாத்தா அருளப்பர். துதியர் (கி.பி. 1213)

ஓரு பிரபுவின் மகனான இவர் சிறு வயதில் அன்னிய தேசங்களில் படிக்கும்போதும்கூட ஏழைகள் மட்டில் எவ்வளவு அன்பு செலுத்தினாரெனில், தமக்கு அனுப்பப்பட்ட பணத்தை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுப்பார். பிறருக்கு நன்மை செய்யும் பொருட்டு அருளப்பர் தமது மகிமையையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு குருப்பட்டம் பெற்றார்.

இவர் முதல் பூசை செய்யும்போது, வெள்ளை உடை அணிந்து சிவப்பும் நீல வர்ணமுமான சிலுவையை மார்பில் தரித்த வண்ணமாக ஒரு சம்மனசு கிறீஸ்தவனான ஒரு அடிமையின் தலைமேல் தமது கையை வைத்த பிரகாரம் அருளப்பருக்குத் தோன்றினார்.

அருகாமையிலிருந்த பெலிக்ஸ் என்னும் வனவாசியிடஞ் சென்று, தமக்குக் காணப்பட்ட தரிசனத்தை அவருக்கு அறிவித்து அதன் அர்த்தத்தைக் கேட்டார். இது அடிமைகளை மீட்பதைப்பற்றிய காட்சியென்று அவருக்கு அறிவித்து, இருவரும் உரோமைக்குப் போய், அடிமைகளை மீட்பதற்கான சபையை ஸ்தாபிக்க அர்ச். பாப்பரசரிடம் உத்தரவு கேட்டார்கள்.

அவருடைய அனுமதியுடன், தமதிரித்துவத்தின் சபையை ஸ்தாபித்து, அருளப்பர் அதற்கு முதல் அதிசிரேஷ்டரானார். இந்த சபையில் சேர்ந்தவர்கள் அரிதான புண்ணியங் களையும் தவங்களையும் புரிந்து, தர்மம் எடுத்து அடிமைகளை மீட்பார்கள்.

அருளப்பர் ஒரு நாள் 120 அடிமைகளை மீட்டு, கப்பல் யாத்திரை செய்கையில் முகமதியர் அந்த கப்பலின் சுக்கானையும் பாயையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள். அருளப்பர் தமது மேல்போர்வையைக் கப்பலுக்குப் பாயாக விரித்து, தமது பாடுபட்ட சுரூபத்தைக் கையில் பிடித்து விசுவாசத்துடன், வேண்டிக்கொண்டார்.

கப்பல் ஆபத்தின்றி துறைமுகம் போய் சேரவே, சகலரும் காப்பாற்றப்பட்டார்கள். இந்தச் சபை சீக்கிரத்தில் சகல தேசங்களிலும் பரவியது. அருளப்பர் இக்கட்டு இடையூறுகளால் வருந்தி, தமது சபைக்காக உழைத்தபின் பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை

அவசர நேரத்தில் நாமும் நமது அயலாருக்கு உதவி செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். முடியப்பர், ம.
அர்ச். பவுல், து.
அர்ச். குத்மன், து.