ஏப்ரல் 07

அர்ச். அப்ராதெஸ். முனிவர் (4-ம் யுகம்) 

இவர் பெர்சியா தேசத்தில் அஞ்ஞானிகளும் தனவந்தருமான தாய் தந்தையிடமிருந்து பிறந்தார்.

வாலிப வயதில் கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று அறிந்து ஞானஸ்நானம் பெற்றுத் தர்ம வழியில் வாழ்ந்து வந்தார்.

இன்னும் உத்தமராய் வாழும் கருத்துடன் மெசபொத்தோமியாவுக்குச் சென்று ஒரு புண்ணியவாளருக்குச் சீஷனானார்.

சில காலத்திற்குப்பின் அந்தியோக் நகருக்கு அருகாமையில் ஒரு மடம் கட்டி அதில் வசித்து வந்தார்.

ஒரு நாளைக்கு ஒரு முறை கொஞ்சம் ரொட்டி மாத்திரம் புசிப்பார். ஜெபத் தியானத் திலும் தபத்திலும் மிகுந்தவரானபடியால், அநேக புதுமைகளைச் செய்ய வரம் பெற்றார்.

அந்நாட்டில் ஆரிய பதித வேதமுண்டாக, அந்தப் பதித மதத்தை வாலன்ஸ் சக்கரவர்த்தி நாடெங்கும் பரவச் செய்து, கத்தோலிக்க குருக் களையும் மேற்றிராணிமாரையும் பரதேசத்திற்கு துரத்தி விட்டான்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அப்ராதெஸ் தமது மடத்தை விட்டு நாட்டுக்குச் சென்று ஞானப்போதகர் இல்லாத ஊர்களுக்குப் போய் கிறிஸ்தவர்களுக்கு தைரியஞ் சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒரு நாள் இராயன் அப்ராதெஸை வரவழைத்து மடத்தை விட்டு ஊரில் வசிப்பது உமக்குச் சரியல்ல என்று கூறியதைக் கேட்ட அர்ச்சியசிஷ்டவர் ஒரு வீடு நெருப்பு பற்றியெரிகையில் வீட்டுக்காரர் ஏதும் செய்யாமல் இருப்பார்களோ? அவ்விதமாகவே திருச்சபைக்கு விரோதமாய் நீர் எழுப்பிய நெருப்பாகிய பதித மதத்தை எதிர்த்து அடக்கும்படி இங்கே வந்தேன் என்றார்.

சில காலத்திற்குப்பின் இராயன் மாண்டு போனதினால் அப்ராதெஸ் தனது மடத்திற்குச் சென்று, ஏகாந்தியாய் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து நித்திய இளைப்பாற்றியை அடைந்தார்.

யோசனை

யாதொரு துஷ்ட கிறீஸ்தவனால் துர் மாதிரிகை உண்டாகும்போது அப்பேர்பட்டவனுடன் சேராமல் ஞான அதிகாரிகளின் உத்தரவுப்படி நடக்க வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எஜெசிப்புஸ், ம.
அர்ச். ஆல்பர்ட், து.
அர்ச். ஹெர்மன் ஜோசப், து.
அர்ச். பீனன், ம.